விண்வெளியில் இஸ்லாமியக் கடமைகள் நிறைவேற்றல் குறித்த கையேடு மலேசியா வெளியிட்டது

விண்வெளிக்குச் செல்லும் முஸ்லிம் ஒருவர் தனது இஸ்லாமியக் கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது எனக் குறிப்பிடும் கையேடு ஒன்றை மலேசிய அரசு பல்வேறு இஸ்லாமிய அறிஞர்களைக் கலந்தாலோசித்து வழங்கியுள்ளது. சென்ற ஆண்டு மலேசியாவைச் சேர்ந்த இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு கடும் பயிற்சிகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே விண்வெளியில் இருந்தாலும் முஸ்லிம்கள் தங்களின் அன்றாடக் கடமைகளை மறக்க இயலாது. எனவே இவர்களின் கடமைகளை விண்வெளியில் நிறைவேற்றுவது எப்படி என்பது குறித்து ஆராய மலேசிய அரசு மார்க்க அறிஞர்கள் குழுவை நியமித்து அவர்களின் பரிந்துரையைக் கையேடு வடிவில் வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருப்பது நோன்பு கடமையாக உள்ள ரமளான் மாதத்தில் என்பதால் நோன்பு நோற்பது குறித்தும் அந்தக் கையேட்டில் விளக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் விண்வெளிக்குப் பயணம் மேற்கொள்ளும் இவர்களும் பயணிகளே என்ற நிலையில் இஸ்லாம் பயணிகளுக்கு அளிக்கும் சலுகைகளுக்கு இவர்களும் உரியவர்கள் ஆகிறார்கள். எனவே இவர்கள் இயன்றால் நோன்பு நோற்கலாம் அல்லது புவிக்குத் திரும்பியபின் விட்ட நோன்புகளை ஈடு செய்யலாம் என்று அக்கையேட்டில் கூறப்பட்டுள்ளது.

ஐவேளைத் தொழுகையை நிறைவேற்ற மக்கா இருக்கும் திசையை விண்ணில் இருந்து அறிந்து கொள்ளும் வழிமுறையும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் (International Space Station) வழங்கப்படும் உணவுகள் ஆகுமானதா (ஹலாலானதா) இல்லையா என ஐயம் எழும்போது பசியை அடக்கிக் கொள்ளும் அளவுக்கு மட்டுமே உணவை உட்கொள்ளுமாறு இக்கையேடு அறிவுறுத்துகிறது.

"எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி இறைவன் சோதிக்க மாட்டான்" என்ற இறை வசனத்திற்கேற்ப, தாம் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகாதவரை இயன்ற அளவு இஸ்லாமியக் கடமைகளை நிறைவேற்ற இந்நூல் பரிந்துரைக்கிறது.

"ஒரு முஸ்லிம் தன்னைப் படைத்த இறைக்கு வழிபட விண்வெளியும் ஒரு தடையில்லை" என்ற உண்மையை நிரூபிக்கவே இந்நூல் வெளியிடப்பட்டுள்ளதாக மலேசிய இஸ்லாமியக் கலாச்சாரத் துறைத் தலைவர் முஸ்தஃபா கூறியுள்ளார்.