கல்கியின் நளினம்!
நரியை நனையாமல் குளிப்பாட்டுவது என்று சொல்லுவார்கள்; அது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, கல்கி போன்ற பார்ப்பன ஏடுகளுக்கு அப்படியே பொருந்தும். எடுத்துக்காட்டுக்கு வெகுதூரம் செல்ல வேண்டாம்; இந்த வார கல்கி (4.5.2014)யின் தலையங்கம் ஒன்றே போதுமானது.
நரேந்திரமோடி 2014 மக்களவைத் தேர்தலுக்காக இந்தியா முழுக்கச் செய்துள்ள பிரச்சாரப் பயண தூரம் சுமார் 5,40,381 கிலோ மீட்டர்! இங்கிருந்து சந்திரனுக்கு உள்ள தொலைவே 3,84,400 கிலோ மீட்டர்தான்! சுமார் 450 அரசியல் கூட்டங்களில் இந்தியாவெங்கும் பங்கேற்றுப் பேசியிருக்கிறார். வேறு எந்த அரசியல் தலைவரும் இந்தளவுக்கு உழைப்பையும், அர்ப்பணிப்பையும் செய்திருப்பாரா என்பது சந்தேகமே!
பல தலைவர்கள் மாநில அளவில் மட்டுமே புகழ் உடையவர்கள். மாநில மொழி, மத எல்லைகளைக் கடந்து மோடியின் ஆளுமை பரந்து விரிந்திருக்கிறது. ஜவகர்லால் நேருவுக்குப் பிறகு மக்களிடம் தனித்த கவர்ச்சியும் ஈர்ப்பும் உள்ள நம்பிக்கை நாயகனாகப் பரிணமித்திருப்பவர் மோடி. இந்த நம்பிக்கையும், உத்வேகமும், அவரது தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பலம் பெற உதவ வேண்டும்!
என்று உண்மைகளைக் களப்பலியாக்கி, ஆசை என்ற வெட்கமறியாத குதிரையில் ஏறி சவாரி செய்கிறது கல்கி.
கலைஞர் போன்றவர்கள் 90 வயதைக் கடந்து தேர்தல் பிரச்சாரம் செய்தது எல்லாம் அவாளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.
பண முதலைகளின் தனி விமானத்தில் பயணித்து சொகுசுப் பிரச்சாரம் செய்வது பெரிய சாதனையாம்!
மாநில மொழி, மத எல்லைகளைக் கடந்து மோடியின் ஆளுமை பரந்து விரிந்திருக்கிறதாம்!
இதைப் படிப்பவர்கள் யாரும் வாயால் சிரிக்கவே மாட்டார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகளால் நீரோ மன்னன் என்று அடையாளம் காட்டப்பட்டவர் என்பதை கல்கிகள் மறைக்கப் பார்க்கலாம் – அதற்குக் காரணம் உண்டு. இந்து வெறிப் பார்ப்பனிய ஆதி பத்தியத்தை இந்தப் பிற்படுத்தப்பட்ட வாடகைக் குதிரை நிறுவிக் காட்டும் என்ற ஆசையின் உந்துதல் தான் கல்கியை இபபடி எழுதத் தூண்டுகிறது.
இரண்டாயிரம் முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த ஒரு நர வேட்டை மனிதன் மத எல்லைகளைத் தாண்டி பரிண மித்து நிற்கிறாராம்! எங்கே போய் முட்டிக் கொள்வது!
பொடா சட்டத்தின் கீழ் குஜராத்தில் 287 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்றால் அதில் 286 பேர் முஸ்லீம்கள், இன்னொருவரும் சீக்கியர்!
பாதிக்கப்பட்ட மக்கள் தொகுதியிலிருந்தே பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் மோடி ஆட்சியில்!
தம் குடும்ப உறுப்பினர்கள் படுகொலைக்கு ஆளாகி சொந்தமான வணிக நிறுவனங்கள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டு, வாழவே வழியில்லை என்று முகாம்களில் முடங்கிக் கிடக்கும் முஸ்லீம்களைப் பார்த்து “இனப்பெருக்கம் செய்து கொண்டு இருக்கிறார்கள்!” என்று கொஞ்சம் கூட மனிதநேயமின்றி ஆபாச வக்கிரக் கீழ்ப் புத்தியோடு பேசிய ஒருவர்தான் மத எல்லைகளைக் கடந்த மாமனிதராம்! அதுவும் நேருவுக்குப் பிறகு மக்களிடம் தனித்த கவர்ச்சியும், ஈர்ப்பும் உள்ள நம்பிக்கை நாயகனாம் மோடி!
மத மூடநம்பிக்கைகளை எல்லாம் கடந்து துணைக் கண்டத்து மக்களையெல்லாம் சகோதரத்துவ வாஞ்சையுடன் பார்த்த பகுத்தறிவாளர் நேரு எங்கே? இந்துத்துவா வெறி பிடித்து அடுத்த மதக்காரர்களைச் சீண்டும் மரண வியாபாரியாம் மோடி எங்கே? ஊடகங்கள் தங்கள் கைகளில் இருக்கின்றன என்கிற மமதையில் சாக்கடையை ஜவ்வாது என்று பிரச்சாரம் செய்யலாம் என்று மனப்பால் குடிப்பதைப் பார்ப்பனர் அல்லாத மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
குஜராத் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலிலும் சரி, மக்களவைத் தேர்தலிலும் சரி ஒரே ஒரு முஸ்லிமோ, கிறித்தவரோ பி.ஜே.பி. சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படாதது ஏன்? மத எல்லைகளைத் தாண்டிய மாமனிதர் என்பதற்கு இதுதான் அளவுகோலா?
நோபெல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்களும், நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுகளும், சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆனந்தமூர்த்திகளும் கட்சிகளைக் கடந்த அறிஞர்கள் மோடியைப் எப்படி விமர்சித்துள்ளார்கள் என்பதைக் கல்கிகள் பூணூல் பார்வையைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு நிதானமாகச் சிந்தித்துப் பார்க்கட்டும் உண்மை மிக வெளிச்சமாகவே தெரியும்.
மோடியளவுக்கு மோசமாக விமர்சிக்கப்பட்டது வேறு யாருமில்லை – அதில் கின்னஸ் சாதனை படைத்து விட்டார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
நன்றி: விடுதலை
சத்தியமார்க்கம்.காம் : தனது அறையை விட்டு வெளியேறாமல் ஐந்து மாநிலங்களில் ஒரே நேரத்தில் பிரச்சாரத்திற்குச் சென்று(!) உரையாற்றும் மோடி வித்தையைக் காண இங்கே செல்லவும்: http://www.satyamargam.com/english/2342-the-hand-behind-modi%E2%80%99s-magic.html