எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை: கால்களால் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவி!

Share this:

உத்திரபிரதேச மாநிலம் வாரனாசியிலுள்ள தல்லிபுர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் சந்திர வர்மா.  இவரது மனைவி சூர்யாபத்தி.  இவர்களுக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.  இவர்களது மூத்த மகள் ராணி வர்மா. 

இவர் கடந்த 2001-ம் ஆண்டில் நடந்த விபத்து ஒன்றில் இரண்டு கைகளையும் இழந்துவிட்டார்.  அப்போது ராணி வர்மா தனது அன்னையிடம், "இரண்டு கைகளையும் இழந்து நான் உயிரோடு வாழ்ந்து என்னதான் செய்ய போகிறேன், இனி நான் வாழறதுல அர்த்தமே இல்லம்மா, பேசாம நான் செத்துப்போறேன்" என்று தாரை தாரையாக கண்ணீர் வடித்தார்.  இதனால் குடும்பமே சோகத்தில் மூழ்கியது.

அம்மா மட்டும் ராணி வர்மாவுக்கு ஆறுதல் கூறினார்.  நீ கைகளை இழந்தாலும் ஒரு போதும் தன்னம்பிக்கை இழக்கக் கூடாது. மனதில் உறுதி இருந்தால் இந்த உலகத்தில் எதையும் சாதிக்கலாம் என்றார்.

அம்மாவின் இந்த வார்த்தைகள் ராணி வர்மாவின் மனதில் ஆணித்தரமாக பதிந்தன.

அன்று முதல் ராணி வர்மா நன்றாகப் படித்து சாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.  பள்ளிக்குச் சென்று பாடம் படிக்க ஆரம்பித்த ராணிவர்மா, கூடவே கால்களால் எழுதவும் பயிற்சி பெற்றார்.

ராணி வர்மாவின் மனதில் லட்சிய வெறி இருந்ததால் சிறிது நாட்களிலேயே கையால் எழுதும் வேகத்தை போலவே கால்களால் கடகடவென எழுதக் கற்றுக்கொண்டார். 

சமீபத்தில் உத்திரபிரதேச மாநிலத்தின் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.  இதில் 14 வயதான ராணிவர்மா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.  கால்களால் தேர்வு எழுதி அவர் வெற்றி பெற்றுள்ளதால் ஏராளமானோர் அவரை நேரில் வந்து பாராட்டினார்கள்.  அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு நிதி உதவி செய்தனர்.

ராணி வர்மாவின் சாதனையை அறிந்ததும் பிரதமர் மன்மோகன்சிங் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.  இது தவிர அவரது படிப்பு செலவுக்கு ரூ. ஒரு லட்சம் நிதி உதவி வழங்கினார்.  ராணிவர்மா 18 வயதை அடையும்போது இந்த நிதி அவருக்கு தரப்படும்.

இது பற்றி ராணிவர்மா கூறும்போது, இந்த உலகத்தில் என்னைப் போல யாருக்கும் கஷ்டம் வரக்கூடாது.  நான் படித்து உயர் அதிகாரியாகி வாகன விபத்துகளை தடுப்பதற்காக முயற்சிகளை மேற்கொள்வேன்.

நான் படித்து இந்த நிலைக்கு வர காரணமானவர் என் அம்மாதான்.  அவர் இரண்டு மாதத்திற்கு முன் இறந்து விட்டார். அவர் உயிரோடு இருந்தால் என்னை விட பல மடங்கு மகிழ்ச்சியடைந்திருப்பார் என்றார்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.