பாஜக – இந்து மக்கள் கட்சி பயங்கர மோதல் – 3 பேரின் மண்டை உடைப்பு!

பாஜக – இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் இடையே கொலை வெறித் தாக்குதல். தாராபுரத்தில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் இந்து மக்கள் கட்சி – பாஜக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் கொடூர ஆயுதங்களால் தாக்கிக் கொண்ட சம்பவத்தின் காட்சிகள் இன்று (மே 1, 2023) காலை வெளியாகியுள்ளது.

திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவராக உள்ளவர் மங்களம் ரவி. இவருக்கும் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவராக உள்ள ஈஸ்வரன் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக வளர்ச்சி, தொழிலில் போட்டி, பொறாமை காரணமாக பகை இருந்து வருகிறது. இதனால், தாராபுரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள (கொங்கு) தனியார் ஹோட்டல் முன்பு நேற்று இரவு மோதல் ஏற்பட்டது.

பாஜக தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, பிரதமர் மோடி குறித்து தவறாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து கேட்டுள்ளார். அப்போது, பாஜக மாவட்ட தலைவர் மங்களம் ரவி, இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரனுடன் பேசிக் கொண்டிருந்தபோது ரவியின் ஆதரவாளர்கள் இந்து மக்கள் கட்சித் தலைவர் ஈஸ்வரனை தாக்கியதாகவும் அதற்கு பதிலடியாக இந்து மக்கள் கட்சி மாவட்ட அமைப்புக் குழு தலைவர் சங்கர், ரவியை திருப்பித் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இரு அணியினரும் சரமாரியாக மாறி மாறி தாக்கிக் கொண்டதில் இருவரும் காயம் அடைந்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டனர். இதில், இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த மாவட்ட தலைவர் ஈஸ்வரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறுகையில் , “மனதின் குரல் நூறாவது வார நிகழ்ச்சி, முன்னாள் பாஜக மாவட்ட பொருளாளர் கொங்கு ரமேஷ் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், ஏராளமான பாஜகவினர் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது இந்து மக்கள் கட்சியின் வளர்ச்சியை பிடிக்காத திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி எங்களை வேண்டுமென்றே வம்பிழுத்து சண்டையிட்டார்” என்றார்.

இது குறித்து பேசிய பாஜக மாவட்ட தலைவர் மங்களம் ரவி, “இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் அடிக்கடி பாஜகவில் தலையிட்டு பல முறைகேடுகளை செய்து வருகின்றனர். இதனால் எங்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டால் அடிக்கடி மோதல் ஏற்படும். அந்த மோதலின் வெளிப்பாடாக இன்று என்னை இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் வேண்டுமென்றே தாக்கியுள்ளனர். என்னை தாக்கிய சம்பவம் குறித்து மாநில தலைவர் அண்ணாமலையிடம் தெரிவிக்கவுள்ளோம். அவரது ஆலோசனைபடி இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்படும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.puthiyathalaimurai.com/tamilnadu/

https://www.polimernews.com/dnews/201871

https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/coimbatore/a-video-of-hindu-makkal-katchi-and-bjp-executives-clash-at-dharapuram-bus-stand-tirupur/tamil-nadu20230501110618570570200