எகிப்து முன்னோட்டம்
“யூஸுஃப்! உன் பொருட்களை மூட்டைக் கட்டு. நாம் எகிப்துக்குக் கிளம்புகிறோம்” என்றார் ஷிர்குஹ். அதைக் கேட்டு அதிர்ந்துவிட்டார் யூஸுஃப்!
“அந்தக் கட்டளையைக் கேட்டதும் எனது இதயத்தைக் கத்தியால் குத்தியதைப் போல் உணர்ந்தேன். ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! எகிப்து ராஜாங்கம் முழுவதும் எனக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்தாலும்கூட, நான் அங்குப் போகமாட்டேன்’ என்று பதிலளித்தேன்”
தமது சாகச வாழ்க்கையின் ஆரம்பக் காலம் எவ்வித ஆர்வமும் இன்றி எவ்வாறு தயக்கத்துடன் துவங்கியது என்பதைப் பிற்காலத்தில் இவ்விதம் நினைவு கூர்ந்தார் சுல்தான் ஸலாஹுத்தீன் (யூஸுஃப் இப்னு அய்யூப்). உலக வரலாற்றில் சிறந்தோங்கிய மன்னராக, தாம் உயரப்போவதற்குத் தம் சிற்றப்பாவின் அந்தக் கட்டளை, மடிமேல் விழுந்த அந்த வாய்ப்பு, அசிரத்தையாகத் தொடங்கிய அந்த எகிப்துப் பயணம்தான் முதல் அடி என்பது இளைஞர் ஸலாஹுத்தீன் அய்யூபிக்கு அச்சமயம் தெரிந்திருக்கவில்லை.
“இறுதியில் நானும் என் சிற்றப்பாவுடன் சென்றேன்” என்றவர், பின்னர் எகிப்தில் தாம் நிகழ்த்திய சாகசங்களின் பெருமையைத் தமதாக்கிக் கொள்ளாமல் வெகு கவனமாகத் தவிர்த்தார். மட்டுமின்றி அதைத் தம் சிற்றப்பாவின் பங்கில் செலுத்திவிட்டார். “அவர் எகிப்தைக் கைப்பற்றினார். பிறகு இறந்துவிட்டார். நான் எதிர்பார்க்காத ஒன்றை – எகிப்தின் அதிகாரத்தை – இறைவன் என் கையில் ஒப்படைத்தான்”.
மன்னர் நூருத்தீன் துவக்கி வைத்த எகிப்துப் போர்ப் பயணம்தான் ஸலாஹுத்தீனைக் கட்டாயமாக அரங்கிற்கு இழுத்து வந்தது; போர்க்களத்தில் நிறுத்தியது; அவரது மாபெரும் வரலாற்றின் முதலாம் அத்தியாயத்தை முரசு கொட்டி ஆரம்பித்து வைத்தது.
பரங்கியர்கள், பைஸாந்தியச் சக்கரவர்த்தி, ஜெருசலம் என்று லெவண்த் பகுதியில் நூருத்தீனின் கவனம் குவிந்திருந்தபோது எங்கிருந்து குறுக்கிட்டது எகிப்து? அவரது தலையை அத்திசைக்கு வலுக்கட்டாயமாகத் திருப்பும் அளவிற்குக் காரணங்கள் இருந்தன. தவிர்க்கவே இயலாத விவகாரங்கள் பூதாகரமாக உருவாகியிருந்தன. முதல் காரணம் எகிப்தின் வஸீர் ஷவார்.
oOo
1153ஆம் ஆண்டு ஃபலஸ்தீனில் ஃபாத்திமீக்களின் கடைசிக் கோட்டையாக இருந்த அஸ்கலான் நகரைப் பரங்கியர்கள் கைப்பற்றியதும் சிலுவைப்படைக்கு எகிப்திலுள்ள நைல் நதிக்கான பாதை தெளிவாகத் தென்பட்டது. நைல் நதி அயல்நாட்டு மன்னர்களின் உள்ளத்தைத் தடதடக்க வைக்கும் பேரழகி! காரணம் அதன் அற்புதமான செல்வச் செழிப்பு. ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு மாதத்தில் பெருக்கெடுக்கும் வெள்ளம் நைல் நதிப் படுகையில் அமைந்துள்ள விளைநிலங்களுக்கு மகத்தான வளத்தை வாரி வழங்கியதில் மிகுதியான விவசாயப் பலனை அனுபவித்து வந்தது எகிப்து. நைல் நதியுடன் கலக்கும் கால்வாயின் முடிவில், ரோடா எனும் சிறு தீவில், நைலோமீட்டர் (Nilometer) என்றொரு கட்டமைப்பை ஒன்பதாம் நூற்றாண்டில் அப்பாஸிய கலீஃபா அல்-முத்தவக்கில் உருவாக்கி வைத்திருந்தார். அது நைல் நதியில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறும். அதைக் கொண்டு அறுவடை கணிக்கப்பட்டது. செழித்துக் குலுங்கியது விவசாயம்.
நபித் தோழர்கள் எகிப்தைக் கைப்பற்றி, அங்கு இஸ்லாம் மீளறிமுகமானதும் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு, கடற்கரை நகரமான அலெக்ஸாந்திரியாவும் நைல் நதிப் படுகையில் அரபியர்கள் உருவாக்கிய ஃபுஸ்தத் நகரும் முக்கியமானவையாக இருந்து வந்தன. காஹிரா எனப்படும் கெய்ரோ, பின்னர் ஃபாத்திமீக்கள் ஆட்சிக்கு வந்ததும் ஃபுஸ்தத் நகருக்கு வடக்கே அவர்கள் உருவாக்கிய புதிய தலைநகரம். கெய்ரோவில் வலைப்பின்னலான கட்டுமானத்துடன் உயர்ந்து நிமிர்ந்தன ஃபாத்திமீ கலீஃபாக்களின் அற்புதமான அரண்மனைகள். ஆயினும் சிலுவைப்போர் நிகழ்ந்த காலத்தில் பண்டைய நகரமான அலெக்ஸாந்திரியாவே எகிப்தியப் பொருளாதாரத்தின் மையப் புள்ளியாகத் திகழ்ந்தது.
இந்தியப் பெருங்கடலுக்கும் மத்தியதரைக் கடலுக்கும் இடையே வளர்ந்து வந்த வர்த்தகத்தின் பலனையும் அப்பகுதி தாராளமாக அனுபவித்தது.. ஆசியாவிலிருந்து பட்டு, மிளகு, கிராம்பு, ஏலக்காய் போன்ற பொருட்கள் செங்கடல் மார்க்கமாக ஐரோப்பா செல்வதற்கு வாகாக அமைந்திருந்தது துறைமுகப் பட்டணம் அலெக்ஸாந்திரியா. இத்தாலிய, பைஸாந்திய வர்த்தகர்களின் புழக்கத்தால், உலகின் முன்னணி வர்த்தக மையம் என்ற பெருமையையும் அந்த நைல் பகுதி சூடிக்கொண்டது. ‘மக்கள் மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் அலெக்ஸாந்திரியாவை நோக்கி வந்தார்கள். அவ்விரண்டு உலகிற்கும் அது பொதுச் சந்தையாக இருந்தது’ என்று எழுதி வைத்திருக்கின்றார் அக்காலத்தில் ஃபலஸ்தீனில் வசித்துவந்த இலத்தீனியர். இவற்றால் எல்லாம் எகிப்து அனுபவித்து வந்த வரி வருவாய் அபரிமிதம்.
சிலுவைப்போர் நிகழ்ந்த காலத்தில் ஃபாத்திமீ கலீஃபாக்களின் அதிகாரம் தேய்ந்து போய், வஸீர் எனப்படும் கலீஃபாவின் தலைமை நிர்வாகியிடமே ஆட்சி அதிகாரம் போய்ச் சேர்ந்திருந்தது. 1121ஆம் ஆண்டு வஸீர் அல்-அஃப்தல் மரணமடைந்தபின் அரசியல் அமைப்புத் தடுமாறி கெய்ரோவைப் பீடித்தது அரசியல் சூழ்ச்சி நோய். எகிப்தில் வலிமையுடன் ஓங்கி வளர்ந்த பனூ உபைதிகளின் ஆட்சி ஒரு திருப்புமுனையை எட்டியது. கலீஃபாவின் வஸீர்களாகப் பதவி வகித்தவர்கள் மெதுமெதுவே செல்வாக்குப் பெற்று உயர்ந்து, ஆட்சியை நிர்வகிக்கும் அளவிற்குச் சக்தி வாய்ந்தவர்களாக உருவானர்கள். தங்கள் விருப்பத்திற்குரிய வாரிசை கலீஃபாவாக ஆட்சியில் அமர்த்தும் அளவிற்கு அவர்களது ஆற்றல் பெருகியது. செல்வத்தையும் செல்வாக்கையும் அள்ளித்தரும் அட்சயப் பாத்திரமாக மாறியது வஸீர் பதவி. பணம், தங்கம், நவமணி என்று செல்வம் கொழித்த அந்தப் பதவியின் பின்னணியில் மற்றொரு அபாயம் இருந்தது.
வஸீர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் கொன்றார்கள். தமக்குப் பிடிக்காதவரை ஒருவர் கொல்வார். ஆட்சியைக் கைப்பற்றுவார். மற்றொருவர் அவரைக் கொன்று ஆட்சியை அபகரிப்பார். எதற்கு ஓரவஞ்சனை என்று தங்களுக்கு ஒத்துவராத கலீபாவையும் வஸீர்கள் கொல்வார்கள். தூக்கு, தலைகொய்தல், கத்திக் குத்து, சிலுவையேற்றல், நஞ்சு என்று பல ரகமாக ஆளுக்கும் தலைக்கும் ஏற்ற வகையில் கொலை முறை மாறியிருந்ததே தவிர, எல்லாமே மூர்க்க ரகம். ஒரு வஸீரை கும்பல் ஒன்று அடித்தே கொன்றது. ஒருவரை வாரிசாகத் தத்தெடுத்தவன் கொன்றான், இன்னொருவரை அவருடைய தந்தையே கொன்றார்.
‘யாருடைய கை ஓங்குகிறதோ, அவருக்கு வஸீர் பதவி பரிசானது. கலீஃபாக்கள் திரைக்குப் பின்னால் தள்ளப்பட்டு, வஸீர்தான் ஆட்சி செலுத்தினார். ஆட்சியில் உள்ளவரைக் கொல்லாமல் மற்றவர் ஆட்சிக்கு வருவது அரிதாகிவிட்டது’ என்பது அக்காலத்திய வரலாற்று ஆசிரியர் ஒருவரின் கூற்று.
இப்படியாக ஓயாத ஒழியாத கொலையாட்டத்தில் மூழ்கியிருந்தது எகிப்து. நிலையற்ற இந்த அரசியல் சூழலால், நைல் பகுதி சரிவைச் சந்தித்தது. புகழ் பெற்றிருந்த ஃபாத்திமீக்களின் கடற்படை சிதைந்து போனது. அஸ்கலானுக்குப் பிறகு ஜெருசல ராஜாவுக்கு எகிப்தின் மீது கண் என்பதை அறிந்திருந்த வஸீர்கள், எகிப்தின் அரசியல் பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டு அந்தப் பரங்கியர்கள் எகிப்திற்குள் வந்து குதித்துவிடாமல் இருக்க, ஏராளமான தொகையை ஆண்டுக் கப்பமாகச் செலுத்திவிட்டு, தங்களது கொலை, குத்து ரகளையைத் தொடர்ந்துகொண்டிருந்தார்கள்.
கப்பத் தொகையை வாங்கிக் கருவூலத்தில் நிரப்பிவிட்டு, எகிப்தில் நடைபெற்று வந்த அரசியல் களேபரங்களை ஜெருசலம் உன்னிப்பாகக் கவனித்தபடிதான் இருந்தது. 1162ஆம் ஆண்டு 26 வயது அமால்ரிக் ஜெருசலத்தின் புதிய ராஜாவாக ஆட்சியில் அமர்ந்தாரல்லவா? அவருக்கு எகிப்தின் மீது தீராத மோகம் உருவாகிவிட்டது. அதைக் கைப்பற்றியே ஆகவேண்டும் என்பது அவரது ஆட்சி இலட்சியம் ஆகிவிட்டது. அரபியர்கள் மோரி (Morri) என்று அழைக்கும் அமால்ரிக் ராஜாவுக்கு நூருத்தீனைப் பற்றி மக்களிடம் இருந்த பிம்பம் ஏகப்பட்ட தாக்கம் செலுத்தியிருந்தது. நூருத்தீனைப் போலவே தாமும் நிதானமானவராக, பக்திமானாக, மதக் கல்வியில் ஈடுபாடு கொண்டவராக, நீதியைக் குறித்துக் கவலை கொண்டவராக மக்களிடம் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தப் பெரிதும் முனைந்தார். அமைதி, விவேகம், முன்யோசனை இன்றி , குறைபாடுகள் நிரம்பியிருந்த அவரது முயற்சிகள் எல்லாம் போலி நடிப்பில்தான் முடிந்தன.
ராஜா அமால்ரிக்கிடம் ஞானத்தைவிட முரட்டுத் துணிச்சலே மிகுந்திருந்தது. நெடிய உயரத்துடன் இருந்தவருக்குக் கம்பீரம் மட்டும் அமையவே இல்லை. அசாதாரணமான மெல்லிய தோள்களுடனும் மிகப் பருத்த சரீரத்துடனும் இருந்த அவருக்குப் பெண்களைப் போன்ற மார்புகள். அவை இடுப்புவரை தொங்கின என்று விவரித்து எழுதியிருக்கிறார் அன்றைய இலத்தீன் வரலாற்று ஆசிரியர் வில்லியம். அவ்வப்போது அவரை ஆட்கொள்ளும் நீண்ட நெடிய உரத்தச் சிரிப்பு அவருடைய சகாக்களுக்கும் பரிவாரங்களுக்குமே தாங்க இயலாத சோதனையாக இருந்தது. இவையன்றி அவரது பேச்சிலும் திக்குவாய்.
இவை அனைத்தையும் மீறி, அவர்களுக்கு அமால்ரிக் மீது இருந்த அபிமானம், அவரிடம் குடிகொண்டிருந்த எகிப்து வேட்கையால் மட்டுமே.
oOo
நீடித்துத் தொடர்ந்த கொலை வழிமுறையின்படி கெய்ரோவின் அதிகாரத்தை 1162ஆம் ஆண்டின் டிசம்பரில் கைப்பற்றி வஸீராக ஆனார் ஷவார். அவருக்கு முன்னால் அப்பதவி வகித்த பதினைந்து எகிப்தியத் தலைவர்களுள் ஒரே ஒருவர் மட்டுமே உயிருடன் பதவி விலகியவர். மற்ற அனைவரும் கொடூரமாகக் கொல்லப்பட்டு வழியனுப்பப்பட்டவர்கள். பதவிக்கு வந்த கையுடன், தமக்கு முன் பதவியில் இருந்தவரை அவரது ஒட்டுமொத்தக் குடும்பத்துடன் கொன்று தீர்த்துவிட்டு, அவர்களது மாளிகை, தங்கம், ஆபரணம், சொத்து அனைத்தையும் கபளீகரம் செய்துவிட்டு பிறகுதான் ஆட்சி ஆசனத்தில் அமர்ந்தார் ஷவார். அச்சமயம் கலீஃபாவாக அமர்த்தி வைக்கப்பட்டிருந்த அல்-ஆதித் என்ற சிறுவனின் வயது பதினொன்று.
ஒன்பதே மாதம். இராணுவ அதிகாரி திர்காம் என்பவரின் ரூபத்தில் ஷவாரைச் சந்தித்தது விதி. தடபுடலான விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார் திர்காம். ஷவார் உட்பட எழுபது உயரதிகாரிகள் அழைக்கப்பட்டனர். வந்தவர்களுக்கு வயிறு முட்ட உணவு அளித்துவிட்டு, தம் பாதுகாவலர்களை ஏவி அனைவரையும் கொன்று முடித்தார். தக்க நேரத்தில் யாரோ ஷவாருக்கு எச்சரிக்கை அளித்துவிட, அந்தக் கொலை மேளாவில் தப்பிப் பிழைத்தது அவர் மட்டுமே.
ஷவார் தப்பியோடிய பின்னர் திர்காம் பதவிக்கு வந்ததும் அங்கு நிலவிய குழப்பச் சூழலை, இதுதான் தருணம் என்று தமக்குச் சாதகமாக்க முனைந்தார் அமால்ரிக். எகிப்திலிருந்து தப்பி ஓடிய ஷவார் அடைக்கலம் தேடி வந்து சேர்ந்த இடம் சிரியா. அபயம் அளித்தார் மன்னர் நூருத்தீன்.
1163ஆம் ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகள் நீடிக்கப் போகும் எகிப்துப் போரின் மைய நாயகர்களாக மாறினர் மூவர் – எகிப்தின் ஷவார், ஜெருசல ராஜா அமால்ரிக், நூருத்தீனின் தளபதியாகக் களம் புகுந்த ‘சிங்கம்’ ஷிர்குஹ்.
இவர்களுடன் சேர்ந்து தொடங்கியது ஷிர்குஹ்வுடன் கட்டாயமாக எகிப்து கிளம்பிச் செல்ல நேர்ந்த ஸலாஹுத்தீன் அய்யூபியின் வீர வரலாறு.
தொடரும்