குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-5)

Share this:

ஐயம்: விபச்சாரத்திற்குரிய தண்டனை எது?
• ஆணுக்கும், பெண்ணுக்கும் 100 சவுக்கடிகள் (24:2)
• பெண்ணுக்கு ஆயுள் சிறை; ஆணுக்கு தண்டனையில்லை (4:15)

தெளிவு:

மது அருந்துதல், களவாடுதல், விபச்சாரம், வன்புணர்ச்சி, அவதூறு கூறல், ஓரினச் சேர்க்கை, கொலை செய்தல் போன்ற கொடிய குற்றங்களுக்கு, இஸ்லாம் விதித்துள்ள குற்றவியல் தண்டனைகள் அர்த்தமுள்ளவையாகும். குற்றங்கள் களையப்பட வேண்டும் என்கிற நடுநிலை சிந்தனையுடையோர் எவரும் இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் அவசியமானவை என்பதை ஒப்புக் கொள்வார்கள். நவீன உலகில் பெருகிவரும் குற்றங்கள் களையப்பட வேண்டுமாயின் இஸ்லாமிய குற்றவியல் தண்டைகளை நடைமுறைப் படுத்திட வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். பெருகிவரும் குற்றங்களைக் கண்டு நாம் எங்கு வாழ்கின்றோம், எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்கிற அதிர்ச்சியில் மலைத்து, அரண்டு மனம் பதறிப் போயுள்ளவர் ஏராளம்!

மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசுகள் குற்றங்களுக்குத் துணை நிற்கின்றன. உதாரணமாக: விபரீத விளைவுகளைத் தரும் என்று நன்கு தெரிந்தும், மது வியாபாரத்தை அரசாங்கமே முன்னின்று நடத்தி, குற்றங்கள் அதிகரிக்க வித்திடுகின்றன. கொடிய குற்றங்களுக்கு வலுவான தண்டனைகள் வழங்கப்படாமல் குற்றங்கள் குறையப் போவதில்லை! இருக்கும் குற்றவியல் தண்டனைச் சட்டமோ, குற்றங்கள் குறைய உதவப் போவதில்லை.

கேள்வியில் எழுப்பியுள்ள சந்தேகங்களுக்கும் இங்கு நாம் விவரித்துக் கொண்டிருப்பதற்கும் தொடர்பில்லை என்றாலும், ”விபச்சாரம்” மனித சமூகச் சீர்கேடு என்றிருந்தும் அரசுகளே விபச்சாரத்திற்கு அங்கீகாரம் வழங்குவது வேதனைக்குரிய விஷயம். விபச்சாரக் குற்றத்திற்கு இஸ்லாமிய தண்டனை கடுமையாக இருந்தாலும், குற்றங்கள் களையப்பட அல்லது குறைய உதவும். இந்த வகையில் விபச்சாரக் குற்றத்திற்கு இரு வகையான தண்டனைகளை இஸ்லாம் விதித்துள்ளது. அவற்றைக் காண்போம்:

உங்கள் பெண்கள் வெட்கக் கேடானதைச் செய்தால் உங்களில் நான்கு சாட்சிகள் மூலம் நிரூபிக்கச் சொல்லுங்கள். அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்கள் மரணிக்கும் வரை அல்லது அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் வேறு வழியைக் காட்டும் வரை வீட்டில் அவர்களைத் தடுத்து வையுங்கள். (அல்குர்ஆன் 4:15)

மேற்கண்ட வசனம், விபச்சாரக் குற்றத்திற்குக் குறிப்பிட்ட தண்டனை விதிக்கப்படாமல் இருந்த, இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் விதிக்கப்பட்டது.

கேள்வியில் எழுப்பியுள்ள, குர்ஆனில் முரண்பாடுகள் உள்ளன என்கிற தரப்பிலிருந்து ஆதாரமாக வைத்த இருவசனங்களில் மேற்கண்ட வசனத்தில், உங்கள் பெண்கள் வெட்கக் கேடானதைச் செய்தால், பெண்ணின் மீது விபச்சாரக் குற்றம் சுமத்துபவர்கள் அதை நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும் என போகிற போக்கில் பெண்களின் மீது வீணான அவதூறுகள் பரப்புவதைத் தகர்த்து விடுகின்றது.

நான்கு சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டால், ”அப்பெண்கள் மரணிக்கும் வரை அல்லது அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் வேறு வழியைக் காட்டும் வரை வீட்டில் அவர்களைத் தடுத்து வையுங்கள்.” என்று இரு ஆலோசனைகள் வழங்கப் படுகின்றன. இன்றும் பெண் பிள்ளைகளின் நடவடிக்கைகள் சரியில்லை என உறுதியாக அறிந்தால், இனி படிக்கச் செல்லவேண்டாம் – வேலைக்குப் போகவேண்டாம் என பிள்ளைகள் வெளியில் செல்வதைத் தவிர்த்து வீட்டில் தடுத்து வைத்து விடுகின்றனர் பெற்றோர். குடும்ப கண்ணியம் மற்றும் பெண்மக்களின் எதிர்கால நன்மையைக் கருதியும் இவ்வாறு தடுத்து வைப்பதைத் தவறு என்று சொல்வதற்கில்லை! தண்டனை எனவும் எடுத்துக் கொள்வதற்கில்லை.

அதுவும், அவர்கள் விஷயத்தில் இறைவன் வேறு வழியைக் காட்டும் வரை என இடைக்கால அவகாசம் வழங்கப்பட்டு பின்னர், விபச்சாரக் குற்றத்திற்குத் தண்டனை விதித்து 24ம் அத்தியாயத்தின் 2வது வசனம் அருளப்பட்டன:

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவர் தண்டிக்கப் படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். (அல்குர்ஆன் 24:2)

இறைச் சட்டத்தை நிறைவேற்றுவதில் உங்களுக்கும் இரக்கம் ஏற்படவேண்டாம் என்றும் விபச்சாரன், விபச்சாரி தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோர் பார்க்க வேண்டும் எனவும் மற்றவருக்குப் படிப்பினையாக்கியது இஸ்லாம்.

இறைமறையின் கட்டளைப்படி விபச்சாரி, விபச்சாரன் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி அடித்துத் தண்டிக்கும்படி சட்டம் நடைமுறைக்கு வந்தது. இது குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பு வருமாறு:

”(விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை சட்டத்தை) என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர்! அல்லாஹ் (வாக்களித்திருந்ததைப் போன்று) பெண்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்திவிட்டான். மணமாகாத பெண்ணுடன் மணமாகாத ஆண் விபச்சாரம் செய்துவிட்டால் நூறு கசையடிகள் வழங்கி, ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தப்பட வேண்டும். மணமான பெண்ணுடன் மணமான ஆண் விபச்சாரம் செய்துவிட்டால் நூறு சாட்டையடிகள் வழங்கி (உயிர் பிரியும்வரை) கல்லெறி தண்டனையும் வழங்கப்பட வேண்டும். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் – உபாதா பின் ஸாமித் (ரலி) நூல்கள் – முஸ்லிம் 3489,3490 திர்மிதீ 1354)

பெண்கள் விஷயத்தில் இறைவன் வேறுவழி ஏற்படுத்தும்வரை என்று 4:15வது வனத்தில் கூறியுள்ள வேறுவழியை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைவனால் அறிவிக்கப்பட்டு, மேற்கண்ட நபிவழிச் செய்தியாக விபச்சாரத்திற்கான தண்டனை சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.

இதன் பிறகு, மணமாகாத ஆணோ – பெண்ணோ விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு கசையடிகளும், ஓராண்டு காலம் நாடுகடத்தலும்; மணமான ஆணோ – பெண்ணோ விபச்சாரம் செய்தால் அவர்களை உயிர் பிரியும் வரை கல்லெறிந்து கொல்வதும் சட்டமாகியது. தொடர்ந்து அச்சட்டம் கடைபிடிக்கப் பட்டது, அது குறித்த பல நபிவழிச் செய்திகளிலிருந்து இரு அறிவிப்புகள்:

கிராமவாசிகளில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டத்தின் படியே நீங்கள் எனக்குத் தீர்ப்பளிக்கும் படி நான் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்; அவரை விட விளக்கமுடையவராக இருந்த அவரின் எதிரி, -ஆம், எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். ‘என்னை(ப் பேச) அனுமதியுங்கள்” என்று கிராமவாசி கூற நபி(ஸல்) அவர்கள், ‘சொல்” என்று கூறினார்கள்.

அவர், ‘என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவரின் மனைவியுடன் விபச்சாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்று விடவேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப் பட்டது. எனவே, நான் (இந்த தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக) அவனுக்காக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாகத் தந்தேன். பிறகு, அறிஞர்களிடம் நான் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி(ந்து கொல்லும்) தண்டனை கொடுக்கப் படவேண்டும் என்றும் என்னிடம் தெரிவித்தனர்” என்று கூறினார்.

இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின் படியே தீர்ப்பளிக்கிறேன். அடிமைப் பெண்ணும் ஆடுகளும் (உன்னிடமே) திருப்பித் தரப்பட வேண்டும். உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்” (என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அவர்களை நோக்கி) ‘உனைஸே! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று, அவள் (தன் விபசாரக் குற்றத்தை) ஒப்புக் கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் அவர்கள் அவளிடம் சென்று விசாரிக்க, அவளும் (தன் குற்றத்தை) ஒப்புக் கொண்டாள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவளைக் கல்லெறிந்து கொன்று விடும்படி உத்தரவிட, அவ்வாறே அவள் கல்லெறிந்து கொல்லப்பட்டாள். (அறிவிப்பவர்கள் – அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித் அல் ஜுஹைனீ(ரலி) நூல்கள் – புகாரி 2725, முஸ்லிம் 3502, திர்மீதி 1353)

மேற்கண்ட செய்தியில், வேலைக்காரராக அமர்த்தப்பட்ட கிராமவாசியின் மகன் திருமணம் ஆகாதவர். அவருக்கு நூறு கசையடிகளும், ஓராண்டு காலம் நாடுகடத்தலும் விபச்சாரக் குற்றத்திற்கு தண்டனையாகவும், முதலாளியின் மனைவி மணமுடித்தவர் என்பதால் அவரைக் கல்லெறிந்து கொல்வதை விபச்சாரக் குற்றத்திற்கு தண்டனையாகவும் தீர்ப்பளித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது.

யூதர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம், தம் சமுதாயத்தாரிடையே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நீங்கள் கல்லெறி தண்டனை குறித்து தவ்ராத்தில் என்ன காண்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கவர்கள், ‘அவர்களை நாம் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்கள் கசையடி கொடுக்கப் படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்கள்.

உடனே, (யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்ற) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) ‘நீங்கள் பொய் சொன்னீர்கள். (விபசாரம் செய்தவர்களை சாகும்வரை) கல்லால் அடிக்க வேண்டுமென்றுதான் அதில் கூறப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். உடனே, அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் ‘விபசாரிகளுக்கு கல்லெறிந்து கொல்லும் தண்டனை தரப்படவேண்டும்’ என்று கூறும் வசனத்தின் மீது தன்னுடைய கையை வைத்து மறைத்து, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை ஓதினார்.

அப்போது அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி), ‘உன் கையை எடு” என்று சொல்ல, அவர் தன்னுடைய கையை எடுத்தார். அங்கே (விபசாரக் குற்றத்திற்கு) கல்லெறி தண்டனை தரும்படி கூறும் வசனம் இருந்தது. உடனே யூதர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு சலாம் உண்மை கூறினார். முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனையைக் கூறும் வசனம் இருக்கத்தான் செய்கிறது” என்று கூறினார்கள். உடனே, அவ்விரண்டு பேரையும் சாகும் வரை கல்லால் அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்திரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண், அப்பெண்ணைக் கல்லடியிலிருந்து பாதுகாப்பதற்காக தன் உடலை (அவளுக்குக் கேடயம் போலாக்கி) அவளின் மீது கவிழ்ந்து (மறைத்துக்) கொள்வதை பார்த்தேன். (அறிவிப்பவர் – அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) நூல்கள் – புகாரி 3635, முஸ்லிம் 3503)

இஸ்லாத்தை ஏற்ற ஆண், பெண் முஸ்லிம்களும் விபச்சாரம் செய்த குற்றத்திற்காக அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு நிறைவேற்றப் பட்டுள்ளன. விரிவஞ்சி அந்தச் செய்திகளைத் தவிர்க்கிறோம்.

விபச்சாரத்திற்கான குற்றவியல் தண்டனை சட்டத்தில், குர்ஆனில் முரண்பாடு உள்ளன என வாதிப்பது தவறான புரிதலாகும். விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் இருபாலினத்தாருக்கும் சமமான தண்டனை என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு! இஸ்லாமிய நாடு என அறிவித்து, முஸ்லிம்கள் ஆட்சி செய்யும் நாடுகளில் இன்றும் விபச்சாரக் குற்றவியல் தண்டனை என விபச்சாரம் செய்தவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப் படுகின்றது. ஆகவே, குர்ஆனில் முரண்பாடுகள் இல்லை!

(இறைவன் மிக்க அறிந்தவன்)  

 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.