ஐயம்: ஆதம்(அலை) அவர்கள் களிமண் எனும் மூலத்திலிருந்து படைக்கப்பட்டார்கள் சரி. இவர் ஒருவர்தானே அப்பொழுது இருந்திருப்பார்; துணைவி இருந்தால் தானே சந்ததி உருவாகும் ? அப்படி துணைவி இருந்திருந்தால் அவர் எப்படி உருவானார்? வந்தார்கள்? கேள்வியில் தவறேதும் இருந்தால் மன்னிக்கவும். (சகோதரி தீபிகா)
தெளிவு:
அறிந்த விஷயங்களைப் பிறருக்குச் சொல்வதும் அறியாத விஷயங்களைப் பிறரிடம் கேட்டு அறிந்து கொள்வதும்தான் அறிவு. “தெரியாத விஷயங்களைப் பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்” என்றுதான் இஸ்லாம் ஆர்வமூட்டுகின்றது. எனவே, தெரிந்து கொள்வதற்காக கேள்விகள் கேட்பதில் தவறேதும் இல்லை.
மனித இனத்தைப் படைப்பதற்கு முன் மனிதன் உள்பட பிற உயிரினங்களுக்கும் தேவையானவற்றையும் படைத்து விடுகின்றான் இறைவன். இவற்றில் காற்று, வெப்பம், குளிர், உணவு, எனவும் கிரகங்கள், அண்டங்கள் என அனைத்தும் அடங்கும். மனித இனத்தைப் படைக்க நாடிய இறைவன் அது குறித்து ஏற்கெனவே படைக்கப்பட்ட வானவர்களிடம் கூறுகின்றான்:
(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான். (அல்குர்ஆன் 2:30)
பின்னர் மனித இனத் துவக்கமாக முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களை மண்ணிலிருந்து படைக்கின்றான் இறைவன். அவரிலிருந்தே மனித இனம் பரவிப் பெருக வேண்டும். இதற்கு முதல் மனிதரை மட்டும் படைத்தால் போதாது பிறகு ”அவரிலிருந்து அவர் மனைவியைப் படைத்தான்” இறைவன். இது தொடர்பான இறைமறை வசனங்கள்:
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:1)
அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்; பிறகு, அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்; அவன் உங்களுக்காக கால் நடைகளிலிருந்து எட்டு (வகைகளை) ஜோடி ஜோடியாக படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சியதிகாரம் (முழுவதும் உரித்தாகும்), அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க, (அவனை விட்டும்) நீஙகள் எப்படி திருப்பப்படுகிறீர்கள், (அல்குர்ஆன் 39:6)
ஆதம் (அலை) அவர்களை தான் நாடிய உருவில் படைத்துவிட்டு பின்னர் அவருக்குத் துணையாக அவரிலிருந்தே ஒரு பெண்ணையும் படைக்கிறான் இறைவன். அந்தப் பெண்மணியைப் பற்றிக் குறிப்பிடும்போது “ஆதமின் மனைவி” என்றே குர்ஆன் வசனங்களில் குறிப்பிடுகின்றான்.
(பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) “ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்படி புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்) (அல்குர்ஆன் 7:19 மேலும் பார்க்க: 20:119)
இதன் பின்னரே இறைவனின் நியதிப்படி ஆண், பெண் பாலினக் கலவையின் மூலம் இவர்கள் இருவரிலிருந்தே தலைமுறை தலைமுறைகளாக மனித இனம் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது. ஆதம் (அலை) அவர்களின் மனைவியின் பெயர் ஹவ்வா என நபிமொழியிலிருந்து அறிந்து கொள்கிறோம்:
“பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர் நாற்றமடித்திருக்காது. ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் – அபூ ஹுரைரா(ரலி) நூல் – புகாரி 3330, 3399)
ஆதம் (அலை) அவர்களின் மனைவியின் பெயர் இஸ்லாமில் ஹவ்வா என்றும் முந்தைய வேதங்களில் ஏவாள் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆதமின் மனைவி ஹவ்வா (அலை) அவர்களின் படைப்புப் பற்றிய நபிவழி அறிவிப்பு:
பெண்களின் விஷயத்தில் (நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும்) என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டிருக்கிறாள். மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியேவிட்டுவிட்டால் அது கோணலாகவே இருக்கும். எனவே, பெண்களின் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். என்று அல்லாஹ்வின் தூர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் – அபூ ஹுரைரா(ரலி) நூல் – புகாரி 3331)
முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களின் இடதுபக்க விலா எலும்பை எடுத்து அவர் மனைவியைப் படைத்ததாக மேற்கண்ட நபிமொழிக்கு விளக்கம் கொடுத்தாலும், பெண்களின் இயல்பான குணங்களைக் குறிப்பிடவே வளைந்த எலும்பாகிய விலா எலும்புச் சுட்டிக் காண்பிக்கப் படுகின்றன. மற்றோர் அறிவிப்பு:
பெண், (வளைந்த) விலா எலும்பைப் போன்றவளாவாள். அவளை நீ நிமிர்த்த நினைத்தால் அவளை ஒடித்தேவிடுவாய். (அதற்காக அப்படியே) அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால், அவளில் கோணல் இருக்க அனுபவிக்க வேண்டியதுதான். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் – அபூ ஹுரைரா(ரலி) நூல் – புகாரி – 5184)
பெண் விலா எலும்பைப் போன்றவள். அவளை நேராக்க முயன்றால் உடைத்துவிடுவாய். எனவே, பெண்ணின் இயல்பானத் தன்மையோடு அவளுடன் வாழ்ந்தால் குடும்ப வாழ்க்கை சீராகவும், சுமுகமாகவும் அமையும் என்பதே இதன் பொருளாகும். ஆகவே, ”அவரிலிருந்து அவரது மனைவியைப் படைத்தான்” என்கிற குர்ஆன் வசனங்களின் கருத்துப்படி முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களிலிருந்தே அவரது மனைவி படைக்கப்பட்டு, அவர்கள் இருவரிலிருந்து மனித இனம் பெருகியது.
மேலும் சந்தேகம் இருப்பின் எழுதுங்கள்.
(இறைவன் மிக்க அறிந்தவன்)