புத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்! (பகுதி-2)

Share this:

ர்மா : இந்தியாவின் வலப்புறமும் கீழ்ப்புறமும் நெருங்கியிருக்கும் இரு நாடுகளான பர்மாவிலும், இலங்கையிலும் முஸ்லிம்கள் குறி வைத்துத் தாக்கப் படுகிறார்கள்.

குஜராத்தில் முஸ்லிம்கள் ஆயிரக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டதற்கு “இந்து-முஸ்லிம் கலவரம்” என்ற சப்பைக் கட்டு போல் சுற்றி வளைத்தெல்லாம் பேசாமல், “இனச் சுத்திகரிப்பு” என்று அஃபிஷியலாக அறிவித்து விட்டே அழித்து ஒழிக்கப்படுகிறார்கள்.

ஆச்சரியமாக இந்த இரு நாடுகளிலும் முஸ்லிம்களின்மீது தாக்குதல் தொடுத்துக் கொண்டிருப்பவர்கள் புத்தமதத் துறவிகள்!  “ஆசையே துன்பங்களுக்குக் காரணம்” என போதித்து “உயிர்களைக் கொல்லாமை”யைக் கொள்கையாகக் கொண்டிருந்த புத்தரைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்பவர்கள்!

கலிங்கத்துப் போரில் வெற்றிபெற்ற அசோகர், ஆயிரக்கணக்கானோர் கை கால்களை இழந்து உயிரற்ற ஜடமாகக் கிடப்பதைக் களத்தில் கண்ட,  அக்கணத்திலேயே போர்க் கவசத்தைத் துறந்து வாழ்நாளில் இனிமேல் போர் புரிவதில்லை என உறுதி பூண்டதோடு, அதற்குப் பின்னர் வாழ்க்கை முழுவதும் புத்தரின் “உயிர்களைக் கொல்லாமை” கொள்கையைப் பரப்புவதில் செலவழித்ததாக வரலாறு கூறுகிறது.

போர்புரிவதைத் தர்மமாக எண்ணிய மாபெரும் மன்னர்களையே சாத்வீகமானவர்களாக மாற்றியமைத்த புத்தரின் கொள்கையை இன்றைய புத்த மதத்துறவிகள் மாற்றியமைக்கிறார்களா என்ன?

புத்த மதத்தின் அடிப்படையான மூன்று (புத்தம், தர்மம், சங்கம்) ரத்தினங்களைக் குறிக்கும் வகையில் 969 என்ற பெயரில் மியான்மரில் துவக்கப்பட்ட அமைப்பு, புத்தரின் கொள்கைகளைப் பரப்புவதற்காகத் துவக்கப்பட்டது எனத் தன்னைப் பறைசாற்றிக் கொண்டது. ஆனால், “அஸின் விராத்து” என்ற புத்த பயங்கரவாதி இந்த அமைப்பில் சேர்ந்ததிலிருந்து அதன் பாதை புத்தரின் அனைத்துக் கொள்கைகளுக்கும் சாவு மணி அடித்தது.

இந்தியாவுக்கு ஒரு பிரவீன் தொகாடியா, தமிழ்நாட்டுக்கு ஒரு இராமகோபாலன் போன்று பர்மாவுக்கு விராத்து என்று சுருக்கமாகச் சொன்னால் இவனைக் குறித்து புரிந்து கொள்வீர்கள். தன்னைத் தானே “பர்மாவின் பின் லேடன்” என்று அழைத்துக் கொள்ளும் இவன் தனது மேடைப்பேச்சுகளிலும் இணைய தளங்களிலும் பகிரங்கமாகக் கொக்கரிக்கும் ஸ்லோகன் “பர்மிய முஸ்லிம் பெண்களைத் தேடித் தேடிக் கற்பழியுங்கள்” என்பதே.

பயங்கரவாதிகளாய் மாறிப் போன புத்தத் துறவிகளுக்கு, பர்மாவின் ஆளும் அரசு மட்டுமன்றி எதிர் கட்சிகளும் துணை போவது வேதனையின் உச்சம். இன்றைய ஆளும் அரசே கவிழ்ந்தாலும், புதிய அரசைத் துறவிகளின் துணை இன்றி அமைக்க இயலாது என்ற தொலைநோக்கு அரசியல் அது.

அன்பும் கருணையும் புத்தரின் அடிப்படை முழக்கங்கள் என்கின்றனர். ஆசையே துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் என்ற புத்தரின் தத்துவங்களைக் கடைபிடித்த துறவிகள், சிறு எறும்பைக் கூடத் துன்புறுத்தி விடக்கூடாது என்பதற்காகப் பாதம் படும் இடங்களில் எல்லாம் விசிறி கொண்டு வீசிக் கொண்டு நடப்பர் என நாம் சிறுவயதில் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறோம்.

அத்தகைய தத்துவங்களைப் பரப்புவதாகக் கூறிக்கொண்ட 969 அமைப்பில், விராத்து இணைந்த பின்னரான நவீன தத்துவங்களில் சில:

  • நீங்கள் கருணையும், அன்பும் நிறைந்தவராக இருக்கலாம். ஆனால் ஒரு வெறிநாயை அருகில் வைத்துக் கொண்டு தூங்க முடியாது.
  • நாம் வலுவிழந்தால் எங்கள் நிலம் விரைவில் இஸ்லாமிய நிலமாகி விடும். மியான்மரை புத்தநாடாகவே வைத்திருக்க வேண்டும்.
  • கலப்பு மணம் கூடவே கூடாது. குறிப்பாக புத்த-இஸ்லாமியக் கலப்பு.
  • அவர்கள் (இஸ்லாமியர்கள்) பல்கிப் பெருகுகிறார்கள். எங்கள் பெண்களைக் கவர்ந்து பாலியல் குற்றம் செய்கிறார்கள்.
  • மதமும் இனமும் பாதுகாக்கப்படுவது நாட்டின் ஜனநாயகத்தை விட முக்கியமானது.
  • இஸ்லாமியரின் கடைகளில் எந்தப் பொருளையும் வாங்காமல் புறக்கணியுங்கள். 

மேற்கண்டவையெல்லாம் வெறும் சாம்பிள்கள் மட்டும்தான்.

இத்தகைய விஷக் கருத்துகளைப் பரப்பி மக்களிடையே வன்முறையினைத் தூண்டியதோடு, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்குத் தலைமை தாங்கி 8 முஸ்லிம்களைக் கொலை செய்த குற்றத்திற்காக அஸின் விராத்தை மியான்மர் அரசு கைது செய்து 2003ஆம் ஆண்டில் சிறையில் அடைத்தது.

நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற விராத்தை, அரசியல் காரணங்கள் சொல்லி 2010 ஆம் ஆண்டே விடுவித்தார் மியான்மர் அதிபர் தைன் சைன். விராத்தை விடுவித்ததுடன் நின்றுவிடாமல்,  அவனது பிரிவினைவாதக் கருத்துகளுக்கும் செயல்பாடுகளுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துப் பாதுகாத்தும் வருகிறார் அதிபர் தைன் சைன்.

சிறையிலிருந்து விடுதலையான விராத்துவின் குரோதமும் காழ்ப்புணர்ச்சியும் பன்மடங்கானது. தற்போது பர்மாவில் முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்புச் செய்யப்படுவதற்கு இவனது நடவடிக்கைகளும் இவனுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும் அதிபர் தைனுமே காரணம்!

969 அமைப்பு மூலம் விராத்து பரப்பும் வன்முறைப் பேச்சுகளால் தூண்டப்பட்டு, புத்த துறவிகளின் தலைமையில் முஸ்லிம்களின்மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதுவரை இத்தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வீடுகள், கடைகள் என முஸ்லிம்களின் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டு, லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இருப்பிடம் இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்குக்கூட மியான்மரின் தைன் அரசு எவரையும் அனுமதிக்கவில்லை. சில வசதி படைத்தவர்கள் மட்டும் பக்கத்து நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் எனப் பறந்துவிட்ட நிலையில், ஏழைகள் செல்வதற்கு இடமில்லாமல் சொந்த நாட்டினுள்ளேயே அகதிகளாய் ஊர் ஊராகச் சுற்றிவரும் பரிதாப நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

பர்மாவில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதையும் எஞ்சியுள்ள இலட்சக்கணக்கானோர் நாடு கடத்தப்படுவதையும் கண்களால் கண்ட Human Rights Watch வெளியிட்ட153 பக்கங்கள் அடங்கிய கண்ணீர் அறிக்கையின் பெயர் “உங்களால் பிரார்த்திக்க மட்டுமே இயலும்” (All You Can Do is Pray)

அன்பைப் போதிக்க வேண்டிய புத்த பிட்சுகள் எவ்வாறு முஸ்லிம்கள் பற்றிய தவறான வதந்திகளைப் பரவ விட்டுப் பிற மக்கள் மனதில் குரோதத்தையும் வெறுப்பையும் விதைத்தார்கள் என்று கார்டியன் கடந்த 18 ஏப்ரல் 2013 அன்று ஒரு கட்டுரையை வெளியிட்டது.   அதில் விராத்துவின் பயங்கரவாத முகத்தைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.

இந்நிலையில், மியான்மரில் ஒரு பகுதியிலிருந்து ஆரம்பித்துள்ள முஸ்லிம்களுக்கு எதிரான தங்களின் தாக்குதலில் தற்போது முழு வெற்றி கிடைத்தால், பர்மாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இம்முறையினை விரிவாக்குவோம் எனக் கொக்கரித்துள்ளான் விராத்து.

(காண வேண்டிய வீடியோ : http://www.guardian.co.uk/world/video/2013/apr/16/burma-bin-laden-buddhist-monk-video)

விராத்துவின் பயங்கரவாத முகத்தை ஆதாரங்களுடன் விவரித்து, ஜூலை 1, 2013  இன் அட்டைப்படக் கட்டுரையாக டைம் இதழும் வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இவ்விதழை பர்மா அரசு தடை செய்தது. பர்மா அரசு முஸ்லிம்களுக்கு எதிராக 969 அமைப்பு நடத்தும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள ஒரு மாதிரியே இது.

பயங்கரவாதிகளாய் மாறிப் போன புத்தத் துறவிகளுக்கு, பர்மாவின் ஆளும் அரசு மட்டுமன்றி எதிர் கட்சிகளும் துணை போவது வேதனையின் உச்சம். இன்றைய ஆளும் அரசே கவிழ்ந்தாலும், புதிய அரசைத் துறவிகளின் துணை இன்றி அமைக்க இயலாது என்ற தொலைநோக்கு அரசியல் அது.

துறவிகளின் பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக வாயைத் திறந்தால் பின்னாளில் அது தமக்குப் பாதகத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை அனைத்து அரசியல் கட்சிகளிடமும் காண முடிகிறது.  அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மியான்மரின் பிரபலமான ஜனநாயகப் போராளியான ஆங் சூன் சுகியும் கூட இஸ்லாமியர்களுக்கு எதிரான புத்தத் துறவிகளின் இந்த இன அழிப்பிற்கு எதிராக இதுவரை வாயைத் திறக்காததில் பர்மாவில் துறவிகளின் ஆளுமை பயங்கரம் உறைய வைக்கிறது.

“969 அமைப்பின் இந்த இன வன்முறையினைச் சர்வதேசச் சமூகம் உடனடியாகத் தலையிட்டுத் தடுத்து நிறுத்த வில்லையேல், ஜெர்மனியின் நாஜி இன அழிப்பின் மறுவடிவமாக 969 அமைப்பு மாறும்!” எனச் சமூகச் சிந்தனையாளர்கள் கவலை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டதை இங்கே குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் தோன்றிய புத்தமதம், பார்ப்பனீயத்தின் கொடுங்கோன்மையால் ஹிந்துத்துவ ஆதிக்கத்தின் பிடியில் சிக்கி இந்தியாவிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட நிலையில் சீனா, ஜப்பான், பர்மா, தாய்லாந்து, இலங்கை முதலான நாடுகளில் மக்களின் மனதில் தஞ்சம் புகுந்தது பழைய வரலாறு.

இந்திய மண்ணில் முன்னொரு நாளில் தனக்கு ஹிந்துத்துவா செய்த அதே சூழ்ச்சியை, புத்தம் இன்று பர்மிய முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்டுள்ளதை, முஸ்லிம்களுக்கு எதிரான ஹிந்துத்துவ ஃபாசிஸத்தின் நூற்றாண்டு காலத் திட்டமிட்ட சதிகளுடன் இணைத்து விரிந்த பார்வை பார்க்க  வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

– அபூ ஸாலிஹா

< பகுதி-1  |  பகுதி-2 | பகுதி-3 | இறுதிப்பகுதி >


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.