மோடி: நாடாளத் துடிக்கும் நாய்களின் நாயகன்

டந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை, இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அப்போதைய பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் இந்த நிகழ்வு குறித்து, “இனிமேல் வெளிநாட்டுத் தலைவர்களை எந்த முகத்துடன் சந்திப்பேன்?” என்று வருத்தப்பட்டிருந்ததும் “ராஜ தர்மத்தைப் பேணுங்கள்” என மோடியிடம் சீறியதும் குறிப்பிடத்தக்கன. இந்திய வரலாற்றில் மோடியைப் போன்று கொடுங்கோல் முதல்வர்கள் எவருமில்லை என்று சொல்லப்படும் அளவுக்கு மோடி தலைமையிலான குஜராத் அரசின் இனச்சுத்திகரிப்பு நிகழ்வு வர்ணிக்கப்பட்டது.

சில வருடங்களுக்குமுன் CNN-IBN தொலைக்காட்சியில் நடந்த கரன் தாப்பரின் Devils Advocate நிகழ்ச்சியில் இதுகுறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் திணறிய மோடி, நிகழ்ச்சியின்போது தண்ணீர் குடித்தும், நிகழ்ச்சி நடத்துனர்மீது சீறியும் பாதியிலேயே வெளியேறினார். தேர்தல்களின்போது பாஜகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையிலும், கூட்டணிக்கட்சிகளுக்குள் பிளவை ஏற்படுத்தும் வகையிலும் மோடியின் நடவடிக்கை இருந்து வருகிறது.

இந்நிலையில், ராய்ட்டர் செய்தி நிறுவன நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியில், குஜராத் இனச்சுத்திகரிப்புப் படுகொலைகள் குறித்து வருந்துகிறீர்களா என்ற கேள்விக்கு, “காரில் செல்லும்போது ஓட்டுனர் இருக்கையில் இருந்தாலோ அல்லது பின்னிருக்கையில் இருந்தாலோ, கார் சக்கரத்தில் நாய்க்குட்டி ஒன்று சிக்குண்டு இறக்கும்போது எத்தகைய வருத்தம் ஏற்படுமோ, அதேபோல் தானும் வருந்தியதாகச் சொன்னார்.

{youtube}XUiG452w5Mw{/youtube}

ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சின்னாபின்னமாக்கியும், பெண்களை வன்புணர்ந்தும், கர்ப்பிணியின் வயிற்றைக் கீறிக் கருவைத் தீயிலிட்டுப் பொசுக்கியும் மகிழ்ந்ததோடு, அவற்றை தேசப்பற்றின் அடையாளமாகச் சொல்லிப் புளகாங்கிதம் அடைந்த மனிதத் தன்மையற்ற மதவெறியர்களைத் தொண்டர்களாகக் கொண்டு அவர்களை ஊக்கப்படுத்திய மோடியின் செயல், ரோம் தீப்பற்றி எரிந்தபோது பிடில் வாசித்துக்கொண்டிருந்த நீரோ மன்னனின் கொடுங்கோன்மையையும் விஞ்சியது.

மோடியின் நாய்க் கருத்து தேசியளவிலான விமர்சனங்களை மதச்சார்பின்றி ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பாஜக செய்தித் தொடர்பாளர் மோடியின் பேட்டி தவறாகத் திரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் எச். ராஜா, குஜராத் முஸ்லிம்களை நாய்க்குட்டியோடு ஒப்பிட்டதைக் கேவலாமக் கருதாமல் பைரவர் என்ற இந்து சமயக் கடவுளுடன் ஒப்பிட்டதாக எடுத்துக்கொள்ளலாமே என்று வியாக்கியானம் பேசியுள்ளார். எச்.ராஜாவை வெறிநாயோ சொறிநாயோ கடித்தால் பைரவர் கடித்துவிட்டதாக உயர்வாகக் கருதி, தொப்புளைச் சுற்றி ஊசி போடாமல் இருப்பாரா?

நாகரிக உலகில் மனித உயிர்களின் மேன்மையைப் போற்றும் எவரும் மோடியின் கீழ்த்தர ஒப்பீட்டை ஏற்கமாட்டார்கள் என்பதோடு கண்டிக்கவும் செய்வர். ஆனால், மோடியைப் பிரதமராக்கி அகண்ட பாரதம் அமைக்கலாம் என்ற கனவில் மிதந்து கொண்டிருக்கும் அவரது பரிவாரங்கள் இதைப் பூசிமெழுகி நியாயப்படுத்துவது வெந்த புண்ணில் சூலாயுதத்தைப் பாய்ச்சுவதாக உள்ளது.

ஆயிரக்கணக்கான குடிமக்களை உள்நாட்டு அகதிகளாக்கி, தேர்தலில் வாக்களிக்க முடியாமல் நாடோடிகளாக்கி விட்டு மூன்றாவது முறையாக முதலமைச்சராக மத வெறியர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள மோடியின் ஆசிர்வாதத்துடன்தான் இனச் சுத்திகரிப்பு நடத்தப்பட்டதாக குற்றவாளிகளின் வாக்குமூலங்கள் தெரிவிக்கின்றன. எனினும், மோடி பொறுப்பான பதவியில் இருப்பதால் நடந்த தவறைக் கண்டித்து, கலவரத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்தித் தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெயரளவிலாவது சொல்லியிருக்கலாம். ஆனால், இன்னும் மேட்டுக்குடி ஆதிக்க மனப்பான்மையில் மிதப்பதையே மோடியின் கருத்து உறுதி செய்கிறது.

தப்பித் தவறி அடுத்த வருடம் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வென்று சாபக் கேடாக மோடி பிரதமராகும் பட்சத்தில் நாய்க்குட்டிகள் அடிபட்டு இறந்தால் வருத்தப்படும் பிரதமரைக் கொண்டிருப்பதற்காக நாய்கள் வேண்டுமானால் சந்தோசப்படலாம்.

-எழில் பிரகாசம் (நன்றி: இந்நேரம்.காம்)

தொடர்புடைய ஆக்கங்கள்:

மாநில முதல்வராக ஒரு கொலைகார வெறிநாய் – குமுதம்!

“குஜராத் கொலைகளுக்கு அனுமதியளித்தவர் மோடி” EX-DGP, Gujarat

குஜராத் : உடைந்து நொறுங்கும் வளர்ச்சி பிம்பம்

நரவேட்டை நரேந்திர மோடியைத் தூக்கில் போடுவது எப்போது?

விலகும் திரை; வெளுக்கும் மோடியின் சாயம் : “இஷ்ரத் கொலை, போலி என்கவுண்ட்டர்” SIT

மோடிக்கு அஜ்மல் கசாப் ஈடாவானா?

அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்கள்!

அதிர வைத்த ஓர் ஆவணப்படம்!

பாசிச மோடிக்குப் புரியுமா ஒரு தாயின் பரிதவிப்பு?

நீதி நின்று கொல்லும்?