ஆண்கள் மேலாடையின்றித் தொழலாமா?

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும், நான் தற்போது கட்டாரில் உள்ளேன். எனது ரூமில் ஒரு முஸ்லிம் சகோதரர் தொழும்போது, இடுப்பில் ஒரு கைலி மட்டும் கட்டி கொண்டு மார்பில் துணி இல்லாமல் நெஞ்சை மறைக்காமல் தொழுகிறார். அவ்வாறு தொழலாமா? தொழுதால் கூடுமா?

அவ்வாறு தொழக் கூடாது என்று கூறினால், அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறார். தயவுசெய்து விளக்கவும். (சகோதரர் ஷமீம், கத்தர்)

தெளிவு:

வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்…)

‘ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழும் வேளைகளில் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்’ என்று திருக்குர்ஆனிலே ஸூரத்துல் அஃராஃப், வசனம் 31 ல் என இறைவன் கூறியுள்ளான்.
 
பள்ளிவாசல்களில் தொழும்போது, உங்களை ஆடைகளால் அலங்கரித்துக் கொள்ளுங்கள் என்று இறைவன் கூறுகின்றான். நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் நபியும் நபியைப் பின்பற்றிய நபித்தோழர்கள் பலரும் மேலாடை கீழாடை என இரு ஆடைகளைப் பெற்றிருக்கவில்லை. இடுப்பில் கட்டிக் கொள்ளும் வேஷ்டி போன்ற ஓர் ஆடையே வைத்திருந்தனர். இன்னும் சொல்வதென்றால் பனியன் டவுசர் போன்ற நவீன உள்ளாடைகள் எதுவும் அவர்களிடம் இருக்க வில்லை. நபியின் நிலையும் பெரும்பான்மையான நபித்தோழர்களின் நிலையும் இதுதான். மேலாடை கீழாடை என அணிந்து தங்களை அலங்கரித்துக் கொள்ள போதிய ஆடைகளின்றி ஏழ்மையில்தான் வாழ்ந்து வந்தனர். இவற்றை வரும் அறிவிப்புகளிலிருந்து விளங்கலாம்.

‘ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ஒரே ஆடையை அணிந்து தொழுவதைப் பற்றிக் கேட்டதற்கு, ‘உங்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகள் இருக்கின்றனவா?’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கேட்டார்கள்” (அறிவிப்பாளர் – அபூ ஹுரைரா(ரலி) நூல்கள் – புகாரி 358 முஸ்லிம் 893)

இடுப்பில் கட்டிக்கொள்ளும் ஒற்றை ஆடையான அந்தக் கீழாடையைத்தான் தொழும்போது இடுப்பிலிருந்து அவிழ்த்து வலது முனையை இடது தோள் மீதும் இடது முனையை வலது தோள் மீதும் மாற்றிப் போடடுக் கொண்டு இரு முனைகளையும் பிடரியில் முடிச்சுப் போட்டு அணிந்து கொண்டனர். இவ்வாறுக் கட்டிக்கொண்டால் வலது இடது இருநெஞ்சுகளும் மறைக்கப்பட்டுவிடும் இருதோள்களிலும் ஆடை அணிந்ததாகிவிடும்.

‘உம்மு ஸலமா(ரலி) அவர்களின் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து, அதன் இரண்டு ஓரத்தையும் இரண்டு தோள்களின் மீது மாற்றிப் போட்டு தொழுதார்கள்” (அறிவிப்பாளர் – உமர் இப்னு அபீ ஸலமா (ரலி) புகாரி 355. 356 முஸ்லிம் 896. 897 மேலும் இந்த அறிவிப்பு பல நபித்தொழர்கள் அறிவித்து அனேக நபிவழித் தொகுப்புகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன)

அணிவதற்கு ஓராடை மட்டும் இருந்தால் மேற்கண்ட அறிவிப்பின்படி அதை தோள்களின் மீது மாற்றிப் போட்டு தோள்களை மறைத்துக்கொண்டு தொழவேண்டும். இடுப்பில் அணியும் வேஷ்டி போன்ற ஆடையின் இரு முனைகளையும் தோள்களுக்கு உயர்த்தி பிடரியில் முடிச்சுப் போட்டுக் கட்டினால் கால்களை மறைக்க வேண்டிய ஆடை உயர்ந்துவிடும். அதே நிலையில் தொழுகையில் ஸஜிதா செய்தால் பின்புறத்தில் மறை உறுப்புகள் மறைக்கப்படாமல் வெளியில் தெரியும் என்பதனால் நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு இவ்வாறு கூறினார்கள்:

சில ஆண்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தனர். அவர்கள் சிறுவர்களைப் போன்று தங்களுடைய (சிறிய) வேஷ்டியை கழுத்தில் கட்டியிருந்தனர். (இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ஆண்களின் பின்னால் தொழுதுகொண்டிருந்த) பெண்களிடத்தில் “ஆண்கள் ஸுஜுதிலிருந்து எழுந்து அமர்வது வரை நீங்கள் உங்களுடைய தலைகளை ஸுஜுதிருந்து உயர்த்த வேண்டாம்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர் – ஸஹ்ல் பின் ஸஅது (ரலி) நூல் – புகாரி 362)

இங்கு கவனத்திற்குரியது: மறைக்கப்பட வேண்டிய மறை உறுப்பு வெளிப்படும் என்றிருந்தாலும் ஆடையை உயர்த்திக் கட்டி தோள்களை மறைத்திட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளனர்.

உங்களில் ஒருவர் தம் தோள்களை மறைக்காமல் ஓர் ஆடையை அணிந்து கொண்டு தொழவேண்டாம். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் – அபூஹுரைரா (ரலி) நூல்கள் – புகாரி 359 முஸ்லிம் 894)

தொழுபவர் தமது தோள்களை மறைக்காமல் தொழவேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருப்பதால் ஒவ்வொரு முஸ்லிமும் தொழும்போது தமது தோள்களை மறைத்தாக வேண்டும் என்பது கட்டாயம். தொழுகை தலையாய இபாதத்தாகும். தொழுகையின் நிலைகளில் எவ்வாறு நிற்க வேண்டும் என்னென்ன ஓதவேண்டும் என்பதில் அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றுகிறோமோ அதுபோல் தொழுகையில் ஆடை அணியும் போதும் அவற்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டிப்பாக பின்பற்றவேண்டும். அலட்சியப் படுத்தினால் அமல்கள் பாழாகிவிடும்.

மேலும், “தொழுமிடங்களில் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்!”  என்ற அல்லாஹ்வின் கட்டளையைச் சிறிது சிந்தித்துப் பாருங்கள். ஓர் அலுவலகத்துக்கோ அல்லது கடை வீதிகளுக்கோ அல்லது கல்யாண வீட்டுக்கோ போகும்போது “டிப் டாப்” என அலங்கரித்துக் கொண்டு போவோர், படைத்த இறைவன் முன் நிற்கும்  தொழுகைக்கு மட்டும் அரைகுறை ஆடை அணிந்து நிற்பது என்பது நெருடலாக இல்லையா?  ‘அவன்’ தந்த வாழ்வையும் வசதிகளையும்  அவனது அடிமைகளின் முன் காட்டிக்கொள்ளும் ஓர் அடிமட்ட அடிமை, ‘அவன், முன்னே அரைகுறையாக நிற்பது எப்படிச் சரியாகும் என்று சிந்தித்துப் பார்த்து, தோள்களைக் கட்டாயம் மறைத்தே தொழ வேண்டும். இரண்டு தோள்கள் திறந்த நிலையில் ஒரு போதும் தொழக்கூடாது.

(இறைவன் மிக்க அறிந்தவன்)
 
தொடர்புடைய முஸ்லிம் ஹதீஸ்:

http://www.satyamargam.com/muslim/index.php?offset=0&sno=0&chapter=4.52&show_hadeeth=1