வித்ருத் தொழுகையில் குனூத்

Share this:

ஐயம்:-

அஸ்ஸலாமு அலைக்கும்.

கீழ்க்கண்ட என்னுடைய சந்தேகங்களுக்கு நபிவழியின்படி தெளிவு தாருங்கள். ஜஸாக்கல்லாஹு கைரா.
1) வித்ருத் தொழுகையில் குனூத் மட்டும்தான் ஓத வேண்டுமா? அல்லது அத்துடன் சப்தமிட்டு நீண்ட துஆக்களை ஓதவேண்டுமா?
2) ஈதுப் பெருநாள் தொழுகைகளில் அதிகப்படியாக கூறப்படும் ஒவ்வொரு தக்பீருக்கும் கைகளை உயர்த்துவது நபிவழியா?

– சகோதரி உம்மு ஜைனப்

தெளிவு:-

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தந்த பிரார்த்தனைகளை, பள்ளிக்கூடத்தில் படிக்கும் மனப்பாடப் பகுதிகளை மனனமிட்டு அப்படியே ஒப்பிப்பதுபோல் சரியாக ஒதிப் பிரார்த்திக்கவேண்டும். 

நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வதுபோல் உளூச் செய்துகொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர் ‘யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டுவிட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னைவிட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்’ என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ பிரார்த்தித்துவிட்டு உறங்கி) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக்கொள்” என்று என்னிடம் இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது ‘நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸுலையும் நம்பினேன்’ என்று சொன்னேன். உடனே நபி(ஸல்) அவர்கள் ‘இல்லை, நீ அனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்’ என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்” அறிவிப்பவர் பராவு இப்னு ஆஸிப் (ரலி) (நூல்கள் – புகாரி 247, 6311, 6313, 6315, 7488 முஸ்லிம் 5249, திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத், இப்னுமாஜா, தாரமீ).

இரவில் உறங்குவதற்குமுன் துஆச் செய்து, தம்மை அல்லாஹ்விடம் ஒப்படைக்கும்படியான பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்ததை நபித்தோழர் மனனமிட்டுத் திரும்ப ஓதிக் காண்பிக்கும்போது ‘நபி’ எனும் சொல்லுக்குப் பகரமாக ‘ரஸுல்’ என்று கூறியதால் உடனே ”உன்னுடைய நபியை நம்பினேன்” என்று சொல்வீராக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திருத்தம் செய்கிறார்கள்.

நபி – ரஸுல் என்ற இரு வாசகங்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையேக் குறிப்பிடும் என்றிருந்தாலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆவின் வார்த்தைகளில் நாம் மாற்றம் செய்திடக் கூடாது என்பதற்கு இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளலாம். அல்லாஹ்வின் வார்த்தையாகிய இறைமறை வசனங்களை மாற்றி ஓதிட முடியாததுபோல் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனைகளும் மாற்றமில்லாமல் நபியின் வார்த்தையாகவே இருக்கவேண்டும்!

இந்த வகையில், வெளியில் ஓதும் துஆவில் வார்த்தை மாற்றம் செய்யக் கூடாது என்றால் நபி (ஸல்) அவர்கள் தொழுகையினுள்ளே ஓதும்படிக் கற்றுத் தந்த வித்ரு தொழுகையின் கடைசி ரக்அத்தில் ஓதும் குனூத் துஆவை தொழுகையில் ஓதும்போது வார்த்தை மாற்றமில்லாமலும், அதைவிடக் கூட்டாமல் இன்னும் எச்சரிக்கையுடன் அப்படியே ஒப்பித்திட வேண்டும். நாமாகச் சேர்த்து ஓதும் துஆக்கள் குனூத் எனும் நபி துஆவோடு கலந்துவிடக் கூடாது.

நான் வித்ரில் ஒதுவதற்காக,

اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ فَإِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ”அல்லாஹும்மஹ்தினி ஃபீமன் ஹதைத்த, வஆஃபீனி ஃபீமன் ஆஃபைத்த, வதவல்லனீ ஃபீமன் தவல்லைத்த, வபரிக்லீ ஃபீமா அஃதைத்த, வகினீ ஷர்ரமா களைத்த, ஃபஇன்னக்க தக்னீ வலா யுக்ளா அலைக்க, இன்னஹு லாயதில்லுமன் வாலைத்த தபாரக்த ரப்பனா வ தஆலைத்த” என்று நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கற்றுத்தந்தார்கள். அறிவிப்பவர் ஹஸன் இப்னு அலீ (ரலி) (நூல்கள் – திர்மிதீ 426, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், தாரமீ).

(பொருள்:- இறைவா! நீ நேர்வழி காட்டியவர்களுடன் சேர்த்து எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! நீ ஆரோக்கியம் அளித்தவர்களுடன் சேர்த்து எனக்கும் ஆரோக்கியம் அளிப்பாயாக! நீ பொறுப்பேற்றுக் கொண்டவர்களுடன் சேர்த்து எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ எனக்குத் தந்திருப்பவற்றில் பரகத் செய்வாயாக! நீ விதியாக்கியவைகளில் உள்ள கெடுதியை விட்டும் என்னைக் காப்பாயாக! நிச்சயமாக நீயே விதிப்பவன், உன் மீது எதையும் விதிக்க முடியாது. நிச்சயமாக நீ யாரை நேசித்து விட்டாயோ அவர் இழிவடைய மாட்டார். எங்கள் இறைவா! உன் அருள் விசாலமானது, உன் மகத்துவம் மேலானது).

”நான் தலையை உயர்த்தி ஸஜ்தாவைத் தவிர வேறு எதுவும் எஞ்சியிராதபோது ”அல்லாஹும்மஹ்தினீ.. என்ற குனூத்தை ஓதுமாறு நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கற்றுத் தந்தார்கள்” என்ற ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களின் அறிவிப்பு ஹாகீம் நூலில் இடம்பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் வித்ரில்,

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَأَعُوذُ بِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ وَأَعُوذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِك ”அல்லாஹும்ம இன்னீ அவூது பி ரிளாக மின் ஸஹ்திக, வ அவூது பிமுஆ.ஃபாதிக மின் உகூபதிக, வ அவூது பிக மின்க லாஉஹ்ஸீ ஸனாஅன் அலைக்க, அன்த கமா அஸ்னைத்த அலா நஃப்ஸிக” என்று ஓதுவார்கள். அறிவிப்பவர் அலீ இப்னு அபூதாலிப் (ரலி) (நூல்கள் – திர்மிதீ 3489, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா).

(பொருள்:- இறைவா! உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உன் கோபத்தை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன். எனது துணைகொண்டு உனது வேதனையை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன். உன்னை முழுமையாகப் புகழ நான் இயலமாட்டேன். நீ உன்னை எவ்வாறு புகழ்ந்து கொள்கிறாயோ அவ்வாறு நீ இருக்கிறாய்!)

நபிவழிப்படி வித்ருத் தொழுகையில் குனூத் ஓதும்போது மேற்கண்ட இரண்டு விதமாகவும் ஓதுவதற்கு ஆதாரமிருப்பதால் இரு துஆக்களையும் ஓதிக் கொள்ளலாம். ஆனால், வித்ருத் தொழுகைக்கென்று சிறப்பாக நபி (ஸல்) கற்றுத் தந்த குனூத்தை ஷாஃபியாக்கள் ஃபஜ்ருத் தொழுகையில் ஓதும் பிழையான வழக்கம் நடைமுறையில் இருக்கிறது.

”நபி (ஸல்) அவர்கள் வித்ருத் தொழுகையில் ருகூவுக்கு முன் குனூத் ஓதுவார்கள்” அறிவிப்பவர் உபை இப்னு கஃப் (ரலி) (நபிமொழிச் சுருக்கம், நூல்கள் – நஸயீ 1699, இப்னுமாஜா 1182).

வித்ருத் தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவுக்குமுன் அல்லது ருகூவுக்குப் பிறகு குனூத் ஓதிக்கொள்ளலாம். மேற்கண்ட நபிமொழிகளில் இரு நிலைகளிலும் குனூத் ஓத ஆதாரங்கள் உள்ளன. ஜமாஅத்துடன் வித்ருத் தொழும்போது இமாம் சப்தமாக குனூத் ஓதினால் இமாமைப் பின்பற்றித் தொழுபவர்கள் அதற்கு ஆமீன் கூறவும், கைகளை உயர்த்திடவும் நபிவழியில் ஆதாரம் எதுவுமில்லை! வித்ருத் தொழுகையில் குனூத் ஓதவேண்டிய ரக்அத்தில் நீண்ட துஆவைத் தவிர்த்து, நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த குனூத் துஆவை மட்டும் ஓதவேண்டும்.

oOo

ஐயம் 2 :- ஈதுப் பெருநாள் தொழுகைகளில் அதிகப்படியாகக் கூறப்படும் ஒவ்வொரு தக்பீருக்கும் கைகளை உயர்த்துவது நபிவழியா?

பெருநாள் தொழுகையில் கூடுதலான தக்பீர் கூறும்போது ஒவ்வொரு தக்பீருக்கும் கைகளை உயர்த்தி மீண்டும் கைகளைக் கட்டிக்கொள்ள நமக்குத் தெரிந்தவரையில் நபிவழியில் நேரடியான, உறுதியான ஆதாரமில்லை. வழக்கமான மற்றத் தொழுகையைப் பின்பற்றி முதல் தக்பீர் கூறி கைகளைக் கட்டிக்கொண்டு, அடுத்தடுத்து தக்பீர்களை மட்டும் கூறிக்கொள்ளலாம்!      

(இறைவன் மிக்க அறிந்தவன்).


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.