தோற்றுப் போனவர்களின் ஈன சுரம் (Innocence of Anti Muslims)

Share this:

அமெரிக்கத் திரைப்படத் துறையினால் அறியப்படாதவனும் அமெரிக்கக் குடியுரிமை பெற்று, அமெரிக்காவின் புலனாய்வுத்துறையான எஃப்.பி.ஐ.யின் ஏஜெண்டாகப் பணியாற்றிக்கொண்டு கலிஃபோர்னியாவில் வாழ்ந்து வருபவனுமான சாம் பேஸிலி (Sam Bacile) (எ) நகூலா பேஸிலி நகூலா (Nakoula Basseley Nakoula) என்பவனும், அல்குர்ஆனை இழிவு படுத்துவதாக எண்ணிக் கொண்டு அதன் பிரதிகளை எரித்துச் சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த அடிமுட்டாள் டெர்ரி ஜோன்ஸ் என்பவனும் இணைந்து Innocence of Muslims என்ற படத்தைத் தயாரித்துள்ளனர். இதற்கான ட்ரெய்லர் ஒன்றினைக் கடந்த ஜூலை 2ந்தேதி யூட்யூப் தளத்தில் வெளியிட்டனர். இதனைக் கண்ணுற்றவர்கள் துவக்கத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், அதனுடைய அரபுப் பதிப்பை எகிப்தில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்று வாழும் மொரீஸ் ஸதெக் என்பவன் (இவனும் அமெரிக்க ஏஜெண்டாக இருக்கக்கூடும்) இம்மாதம் 8ஆம் தேதி யூட்யூபில் வெளியிட்டான். அது பிற சமூக வலைத் தளங்கள் மூலம் லிபியா, எகிப்து மற்றும் எமனில் காட்டுத் தீயாய்ப் பரவியது. பின்னர் மெல்ல மெல்லக் கொழுந்து விட்டெரிந்து, லிபியாவின் பென்காஸியிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டது. அமெரிக்கத் தூதரக வீரர்கள்(!) தம் தலைவரைப் புகை மூட்டத்தில் தவிக்கவிட்டுத் தங்களின் உயிர் பிழைக்க ஓடிப்போனதில் உயிருடனிருந்த அமெரிக்கத் தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸும் தூதரக அதிகாரிகள் மூவரும் மூச்சுத் திணறி இறந்து போயினர்.

இந்தளவு களேபரத்தை ஏற்படுத்திய அந்தப் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களிடம்கூட, “2000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்து வந்த எகிப்தியர் மாஸ்டர் ஜார்ஜ் என்பவரைப் பற்றிய படம்” என்றும் படத்தின் பெயர் “பாலைவன வீரர்கள்” என்றும் பொய் சொல்லியே இப்படம் தயாரிக்கப் பட்டிருக்கிறது. இஸ்லாத்தைப் பற்றியும் முஹம்மது (ஸல்) பற்றியும் பேசப்படும் குரல்கள் அனைத்தும் Voice Over டப்பிங் முறையில் Post production இல் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் முஹம்மது(ஸல்) அவர்களாகவும், அன்னை கதீஜா(ரலி), அன்னை ஆயிஷா(ரலி) ஆகியோராகவும் உருவகிக்கப்பட்டு, பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து இப்படத்தில் நடித்த சிண்டி லீ் கார்சியா மற்றும் அன்னா குர்ஜி உட்பட கதாபாத்திரங்கள் பெரும்பாலானோர், இப்படத்தை இயக்கிய சாம் பேஸிலியின்மீது பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்திருப்பதும் டைரக்டரின் “நேர்மை”யை வெளிப்படுத்துகின்றன.

வரலாற்றுக்கு நேர்மாறான குப்பைகள் பேஸிலியின் படத்தில் குவிந்திருப்பது ஒரு பக்கம் என்றால் – ஆடியோ, வீடியோ, எடிட்டிங் – ஏன் – நடிப்பில்கூட துளியும் தரம் இல்லாமல், மிகக் குறைந்த செலவில் ஒரு அறைக்குள்ளாகவே நடிகர்களை நிறுத்தி ஒரு நீலப்படத்திற்குச் சமமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது இதன் ட்ரெய்லர். இந்த நாலாந்தரப் படத்தை எடுப்பதற்காகத் தன்னை யூதன் எனக் கூறி 5 மில்லியன் டாலரை இஸ்ரேலிய ‘நண்பர்’களிடமிருந்து நன்கொடையாகப் பெற்றதாகப் பத்திரிகையாளர்களிடம் சொல்லியிருக்கிறான் அப்பனையே மாற்றிக்கொண்ட பேஸிலி.

ஐந்தாண்டுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இப்படம் மூலம் சாம் பேஸிலி எதிர்பார்த்த மலிவு விளம்பரம், அதிக அளவிலான ஹிட்ஸ், முஸ்லிம்கள் வன்முறையாளர்கள் எனும் “கதை”யை மீள்கருத்துருவாக்கும் முயற்சி, அதன் மூலம் இஸ்லாத்தை நெருங்க எத்தனிப்பவர்களைத் தடுத்து,  “இஸ்லாமோஃபோபியா”வை [http://www.satyamargam.com/530] ஊட்டுவது எனப் பல எதிர்பார்ப்புகள் நிறைவேறி சாம் பேஸிலி குழுவினரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. இதுபோன்ற பாசாங்குத் தந்திரத்துக்கு முஸ்லிம்கள் இரையாகிவிடக் கூடாது என்று “இஸ்லாமோஃபோபியா” தொடரில் சத்தியமார்க்கம்.காம் எச்சரித்திருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். அதிலும், தங்களின் தலைவர் நபி(ஸல்) அவர்களைக் கொச்சைப்படுத்துவதைச் சகித்துக் கொள்ளாமல் பொங்கிவிடுவர் என்பதே இந்த சாம் மற்றும் பாதிரியார் டெர்ரி கூட்டணியின் கணிப்பு. அந்தக் கணிப்பைப் பொய்யாக்கிட முஸ்லிம்கள் முன்வரவில்லை. ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, லெபனான், லிபியா, மொராக்கோ, இந்தியா, இராக், ஈரான், சூடான், கத்தர், பாகிஸ்தான், துருக்கி, எமென் ஆகிய முஸ்லிம்கள் கணிசமாக வாழக்கூடிய நாடுகளில் மட்டுமின்றி மேற்கத்திய நாடுகளிலும் முஸ்லிம்களின் எதிர்ப்புக்குரல் ஓங்கி ஒலித்துள்ளது.

இந்தக் கழிசடைப் படத்தை எடுத்த கயவன் சாம் பேஸில் நகூலா என்பவனின் போலிப் பெயர்கள்:

 1. Sam Bacile,
 2. Mark Basseley Youssef,
 3. Yousseff M. Basseley,
 4. Nicola Bacily,
 5. Robert Bacily,
 6. Erwin Salameh,
 7. Thomas J. Tanas,
 8. Matthew Nekola,
 9. Ahmad Hamdy,
 10. Amal Nada,
 11. Daniel K. Caresman,
 12. Sobhi Bushra,
 13. Kritbag Difrat,
 14. PJ Tobacco,
 15. Malid Ahlaw

ஆகியன.

 • லட்சக்கணக்கான டாலரில் வங்கி மோசடிகள்,
 • வரி மோசடிகள்,
 • ச்செக் மோசடிகள்,
 • ஆபாச சினிமா படமெடுத்தல்,
 • போதைப் பொருள் தயாரிப்பு,
 • பெயர்/ஆள் மாறாட்டம்

போன்ற பல்வேறு குற்றப் பின்னணிகள் கொண்டவன்தான் பேஸிலி.

இவன் செய்த அடுக்கடுக்கான குற்றங்களுக்காக இவனுக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை திடீரென்று தளர்த்தப்பட்டது. சிறிது காலம் சென்றவுடன் விடுதலை செய்யப்பட்டான் பேஸிலி. காரணத்தை அவனே சொல்கிறான் : Nakoula stated, “I decided to cooperate with the government to retrieve some of these mistakes or damage happened …”

எதிர்பார்த்தபடி உலக முஸ்லிம்களின் எதிர்ப்புக்குரலைக் கேட்டவுடன் இந்தக் கயவனை ஒளித்து வைத்துக்கொண்டு, அவனுடைய குடும்பத்தாரைத் தகுந்த பாதுகாப்புடன் அவனிடம் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு, “பேஸிலி எங்கிருக்கிறான் என்று சொல்லமுடியாது” என்று உலக போலீஸ் அமெரிக்கா திமிராகப் பேசுகிறது. அதற்கு, “பரவாயில்லை, நாங்கள் கண்டுபிடிப்போம்” என்று ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

உணர்ச்சிகளைக் கிளறிவிட்டு, “இஸ்லாமிய பயங்கரவாதம்”, “முஸ்லிம் தீவிரவாதி” ஆகிய பட்டங்களைப் புதுப்பிப்பதற்காக எஃப்.பி.ஐ, பேஸில் மற்றும் டெர்ரி ஜோன்ஸ் கூட்டணி விரித்த வலையில் உலக முஸ்லிம்கள் விழுந்துவிட்டனர்; கொந்தளித்துவிட்டனர்.

இதற்குப் பிறகும் ஒருவர் கொந்தளிக்கவில்லை எனில் அவர் முஸ்லிமே இல்லை. ஆனால், இஸ்லாம் துளியும் காட்டித் தராத வன்முறையில் இறங்கி, பொதுச்சொத்துகளை, உடைமைகளை, உயிர்களைச் சேதப்படுத்துவதும், மறியல், ஆர்ப்பாட்டம், பேரணியில் செருப்பால் அடிப்பது, கொடியை எரிப்பது, சாணியைக் கரைப்பது, விளக்குமாறில் வீரம் காட்டுவது, கொடும்பாவியைக் கொளுத்துவது போன்ற இஸ்லாம் காட்டித் தராத பண்பற்ற அரசியலுக்கு மட்டுமே உதவும் அநாகரிகச் செயல்களில் ஈடுபடுவது முஸ்லிம்களுக்கு அழகல்ல. ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகி விடாது என்பதை முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் நினைவில் நிறுத்த வேண்டும். நம் உணர்ச்சிகளைக் காட்டவேண்டும்; ஆனால், அது நமக்கு இடர் தராத மக்களுக்கு இடைஞ்சலாகக் கூடாது.

முஸ்லிம்களின் அறிவார்ந்த எதிர்வினை எவ்வாறு இருக்க வேண்டும்? {youtube}62xHNvvGsFU{/youtube}

இந்தக் கழிசடைப் படத்தின் மூலம் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள், தாங்கள் எப்படிப் பாதிப்பட்டுள்ளோம் என்பதைப் பிற மதச் சகோதரர்களுக்கும், மதத்தை ஏற்காத நல்ல மனிதர்களுக்கும் உணர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஒரு முஸ்லிம், தன்னையோ தன் பெற்றோரையோ, தன் குடும்பத்தினரையோ பிறர் எள்ளி நகையாடுவதையும் இழிவுபடுத்துவதையுங்கூட சகித்துக் கொள்வான். ஆனால், தன் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஏளனம் செய்யப்படுவதைப் பொறுத்துக் கொள்ளமாட்டான். ஏனெனில் அவர் இவனுடைய உயிரினும் மேலானவர் என்பதை அவர் காட்டித் தந்த வழிமுறையோடு எதிர்வினையாற்ற வேண்டும். திட்டமிட்ட எதிர்வினை, இனியொரு முறை எதிரிகள் விஷமம் செய்ய எத்தனிக்கையில், ஒரு கோடி முறை யோசிக்க வைக்கும்.

பிற மதத்தவர்களிடம், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வீரியமுடன் ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்தை அதன் சரியான வடிவில் எடுத்துச் சொல்ல வேண்டும். “நான் முஸ்லிம்” என்று வாயால் மட்டும் சொல்லாமல் “நான் முஸ்லிம்” என்பாதை வாழ்வால் காட்டுவதற்கு நாம் முன்வரவேண்டும். இது ஏதோ ஆடியோ, வீடியோ, டிவிடி, புத்தகங்கள், இணைய தளங்கள் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும்,  நபியவர்கள் போதித்த நெறியைத் தமது வாழ்க்கையாகவே ஆக்கிக் கொள்ளல் வேண்டும்.  ஒரு முஸ்லிமின் சொல், செயல் அனைத்திலும் ஒரு நறுமணம் போல சுகந்தமாய் இஸ்லாம் வெளிப்படுமாறு “தஃவா” வெளிப்படல் வேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்த மெசேஜ் போன்ற சிறந்த திரைப்படங்கள் தயாரிக்கப்படல் வேண்டும். இதற்கு வணிக நிறுவனங்கள், முஸ்லிம்களில் பெரும் பணக்காரர்கள் முன் வரவேண்டும்.

நபிமார்கள், சத்திய சஹாபாக்கள் ஆகியோரின் தியாக வரலாறுகள் [http://www.satyamargam.com/articles/history/thozharkal.html] பரவலாக்கப்பட வேண்டும்.

யூட்யூப் இணைய தளத்திற்குப் பரவலாக (Flag as inappropriate)  க்ளிக்குவதுடன் இமெயில், கடிதம், ஃபேக்ஸ் எழுதி கண்டனம் தெரிவித்து, இந்த விடியோவை முழுமையாக நீக்கக் கோரலாம். இவை தவிர வீடியோவை பிற தளங்களில் காண நேரிட்டால், அழகிய முறையில் அந்த தள நிர்வாகத்திற்கு உண்மை நிலையை எடுத்தெழுதி நீக்கக் கோர முடியும். [http://www.satyamargam.com/english/2027-how-to-ban-innocence-of-muslims-video-online.html] சுய விளம்பரத்திற்காக அந்த வீடியோவை முழுமையாகத் தடை செய்ய யோசிக்கும் யூட்யூப், நாட்டளவில் தடை செய்வது நடப்பிலுள்ளது.

ஆங்கிலம் அறிந்த அத்தனை குழுமங்களுக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர், அனைவருக்கும் அனுப்பி இதன் உண்மை நிலையை அறியச் செய்யலாம். அதன் மூலம் அவர்களும் இத்தகைய விஷம வீடியோக்களைத் தடை செய்ய உதவக்கூடும்.

“தீமையிலும் நன்மையுண்டு” எனும் முதுமொழிக்கேற்ப தம் எதிர்ப்புக் குரலைக் காட்டுவதற்காக தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் ஒற்றுமையுடன் ஒன்று திரண்டதையும் கண்டோம்.

இராக்கில் காட்டப்பட்ட எதிர்ப்பில் ஸன்னிகளும் ஷியாக்களும் ஒன்றாய்க் கலந்ததையும் கண்டோம். புண்பட்ட முஸ்லிம்களின் உள்ளங்கள் ஆற, வன்முறைச் செயல்களை அறவே தவிர்த்து, மற்ற நாடுகள்/மாநிலங்களுக்கு முன்மாதிரியாக – ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டிய பொறுப்பு தமிழக முஸ்லிம்களுக்கு உள்ளது.

பொய், மோசடி, பித்தலாட்டம் கலந்து எந்த அளவிற்கு இஸ்லாத்திற்கு தீங்கிழைக்க எதிரிகள் எண்ணுகிறார்களோ அதைவிட மேலாக இறைவன் இஸ்லாத்தைப் பிற மதத்தவர் அறியும் வண்ணம் செய்கிறான். இந்தக் கழிசடைப் படத்துக்குப் பதிலடி தரும் வண்ணம் நபி(ஸல்) அவர்களின் உண்மையான வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்துக் கொண்டிருப்பவர்கள் [http://www.satyamargam.com/1378] விரைந்து அதை வெளியிட முயலவேண்டும். ஏனெனில், அதற்குள் சிண்டி லீயும் அன்னா குர்ஜியும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுவிடக்கூடும்.

பாவம், இறைவனின் ஒளியைத் தம் வாயால் ஊதி அணைத்துவிடுவதற்குப் பகல் கனவு கண்டு தோற்றுப்போன இன்னொரு Innocence of Anti Muslims!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.