தோழர்கள் – 50 அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் عبد الله بن جحش

Share this:

அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ்

عبد الله بن جحش

காற்றில் அந்த வீட்டின் கதவுகளும் சன்னல்களும் ‘தப் தப்’ என்று அடித்துக்கொண்டன. மக்க நகருக்கே உரிய அனல், காற்றில் கலந்திருந்தது. புழுதி படிந்திருந்த வீட்டிலிருந்து தூசு பறந்தது. ஆளரவம் அற்று வெறிச்சோடி பேரமைதியுடன் காட்சியளித்தது அந்த வீடு.

யாரெல்லாம் கிளம்பிவிட்டார்கள், எவரெல்லாம் இன்னமும் தங்கியிருக்கிறார்கள் என்று ஊரைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தனர் குரைஷித் தலைவர்கள். இந்த வீட்டைக் கண்டதும் அவர்களுள் இருவரது நடை தடைபட்டது. எட்டிப் பார்த்ததில் வீட்டில் ஆளரவமில்லாமல் போட்டது போட்டபடி காலியாகக் காட்சியளித்தது வீடு.

“பாழடைந்து போய் சோகமாய்க் காட்சியளிக்கும் இந்த வீடு, தனது உரிமையாளர்கள் பனூ ஜஹ்ஷ் மக்களை நினைத்து வருந்திக் கிடப்பதைப்போல் தெரியவில்லை?” தன் சகா அபூ ஜஹ்லைப் பார்த்துக் கேட்டான் உத்பா இப்னு ரபீஆ.

“யார் பனூ ஜஹ்ஷ்? அவர்கள் என்ன பெரிய உசத்தி என்று இந்த வீடு வருந்திக் கிடப்பதற்கு?” ஆத்திரமுடன் பதில் கேள்வி கேட்டான் அபூ ஜஹ்லு. அந்த அளவிற்குக்கூட அந்த வீட்டை விட்டு வெளியேறிவிட்ட மக்களை அவன் அங்கீகரிக்கத் தயாராய் இல்லை. பேச்சில் ஆத்திரம் தொக்கி நிற்க கண்கள் மட்டும் அந்த வீட்டைக் கண்டதும் மயங்கின. சாமான்கள், வசதிகள் நிறைந்து கிடந்த வீடு ‘இங்கே வாயேன்’ என்று அவனை அழைத்தது. அவ்வளவுதான்!

“இன்றிலிருந்து இந்த வீடு என்னுடையது. இதிலுள்ள சாமான்களும் என் உடைமை. நானே இதன் எசமானன்” என்று அறிவித்துவிட்டான். பட்டப்பகலில் பகல் கொள்ளை நிகழ்ந்தது. அந்த வீட்டையும் அதிலிருந்த அத்தனை சொத்தையும் செல்வத்தையும் அப்படியே சுருட்டிக் கபளீகரம் செய்தான் அபூ ஜஹ்லு.

oOo

அப்துல் முத்தலிபின் குடும்பம் மிகப் பெரியது என்று முன்னர் அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவர் மகள்களுள் ஒருவர் உமைமா பின்த் அப்துல் முத்தலிப். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அத்தை. உமைமாவின் மகன்களுள் ஒருவர் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ், ரலியல்லாஹு அன்ஹு. தம் மாமன் மகனார் அறிவித்த ஏகத்துவச் செய்தியின் உண்மை அவருக்குப் பிடித்துப்போனது. அதிலிருந்த உண்மை அவருக்குப் புலப்பட்டது. இஸ்லாமிய மீளெழுச்சியின் ஆரம்பத் தருணங்கள் அவை. தோழர் அர்கமின் வீட்டில் நபியவர்கள் அமர்ந்திருந்தபோது வந்து, அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் அவர். அவரின் சகோதரி ஸைனப் பின்த் ஜஹ்ஷ் பின்னர் நபியவர்களுக்கு மனைவியாக அமைந்தவர்.

மக்காவில் குரைஷிகளின் துன்புறுத்தல் தாளாமல் முஸ்லிம்கள் அபிஸீனியாவிற்குப் புலம்பெயர்ந்தபோது அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷும் தம் உறவினர்களுடன் புலம்பெயர்ந்து சென்றார். அங்குச் சிலகாலம் தங்கியிருந்து, பின்னர் முஸ்லிம்களுள் சிலர் மக்காவிற்குத் திரும்பும்போது தாமும் திரும்பினார். பின்னர் இஸ்லாமிய வரலாற்றில் பற்பல நிகழ்வுகள். இறுதியில் நபியவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர,  பெரியதொரு திருப்புமுனை நிகழ்ந்தது. மதீனா, தன் வாசல் திறந்து இருகை நீட்டி வரவேற்கிறது என்று அறிந்ததும் நபியவர்களைத் தொடர்ந்து புலம்பெயர்ந்தவர் அபூ ஸலமா; அவரைத் தொடர்ந்து அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ்.

குடும்பச் செல்வாக்கு, வீடு, வாசல், என்று வசதி குறைவின்றி வாழ்ந்து கொண்டிருந்தாலும், குரைஷிகளின் அட்டூழியமும் ஈவிரக்கமற்ற செயல்களும் அப்துல்லாஹ்வுக்கு எந்த விலக்கையும் அளிக்கவில்லை. இகலோக வசதி வாய்ப்புகளைவிட இறைவனும் அவன் தூதரும் அவருக்கு வெகுமுக்கியமாயினர். தட்டுத் தடங்கலின்றி அந்த ஏகஇறைவனை வழிபடுவதும் மறுமையும் முன்னுரிமை பெற்றன. ஒருநாள் தம் குடும்பத்தினரிடம், “எல்லோரும் கிளம்புங்கள்; போவோம் மதீனா” என்றார்.

சொத்து, சுகத்தைத் துறப்பது ஆண்களைவிட பெண்களுக்குச் சிரமம். இயற்கை அமைப்பு அப்படி. ஆனால் அப்துல்லாஹ்வினுடையது நல்லதொரு குடும்பம். நபியவர்கள் பயிற்றுவித்த பல்கலைக் கழகம். “போகலாமே!” என்று மறுபேச்சின்றிக் கிளம்பியது அவரது குடும்பம். அன்று முஸ்லிம்களுக்கு இருந்த சூழ்நிலையில் வீட்டைக் காலி செய்து மூட்டை, முடிச்சுக் கட்டி, குரைஷிகளைக் கட்டியணைத்து பிரியாவிடை பெற்றா கிளம்ப முடியும்? வாழ்வாதாரத்துக்குத் தேவையான சொற்ப பொருட்களை மட்டும் சேகரித்துக்கொண்டு வீட்டையும், சாமான்களையும் அனைத்தையும் போட்டது போட்டபடி மதீனாவுக்குப் புலம்பெயர்ந்தனர் அப்துல்லாஹ்வும் அவருடைய குடும்பத்தினரும்.

அப்படித் திறந்துகிடந்த வீட்டில்தான் நுழைந்தான் அபூ ஜஹ்லு. “இனி இது என்னுடையது” என்று அப்படியே எடுத்துக்கொண்டான். இச்செய்தி அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷை அடைந்தபோது அவர் மிகுந்த வருத்தமடைந்தார். நபியவர்களைச் சந்தித்துத் தம் கவலையைப் பகர்ந்தார்.

“அனைத்தையும் சுருட்டி எடுத்துக்கொண்டான் அல்லாஹ்வின் எதிரி.”

அமைதியாக அவரைப் பார்த்த நபியவர்கள், “அப்துல்லாஹ்! அல்லாஹ்வின் பொருட்டு இவ்வுலக சுகத்தைத் துறந்த உமக்கு, அதற்குப் பகரமாய்ப் பன்மடங்கு சிறப்பான இல்லம் ஒன்றை அவன் உமக்கு சொர்க்கத்தில் அளித்தால் மகிழ்வளிக்காதா?” என்று கேட்டார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக மகிழ்வடைவேன்.” சடுதியில் அவரது சோகம் மாறிப்போனது; துன்பம் விலகியது. நம்பினார்கள். இறைத் தூதர் வாக்களிப்பது அப்படியே நிகழும் என்று எள்ளளவும் சந்தேகமின்றி நம்பினார்கள். நபியவர்களின் சொல்லில் எழுத்துக்கு எழுத்து நம்பிக்கை அவர்களுக்கு அமைந்திருந்தது. இவ்வுலக இழப்பெல்லாம் துச்சமாகி, “அடுத்து என்ன?” என்று ஏவலுக்குக் காத்திருந்தார்கள். நபியவர்களும் ‘இவன் இது செய்வான்’ என்று தேர்ந்தெடுத்து ஏவல் இடுவார்கள். அவ்விதம் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷுக்குப் பணி ஒன்று வந்து அமைந்தது.

ஒருநாள் நபியவர்கள் 12 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்தார்கள். இருவருக்கு ஓர் ஒட்டகம் என்று ஆறு ஒட்டகங்கள் ஏற்பாடாயிற்று. “உங்களுக்குத் தலைவர் ஒருவரை நியமிக்கப் போகிறேன். அவர் பசி, தாகம் தாங்குவதில் அலாதிப் பொறுமைசாலி” என்றார்கள் நபியவர்கள். அனைவரும் ஆவலுடன் பார்க்க, அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ், குழுவின் தலைவராய் நியமிக்கப்பட்டார். அடைமொழி போலன்றி இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம் படைப்பிரிவின் முதல் தளபதி! கிடைத்தற்கரிய தகுதி கிடைத்தது அப்துல்லாஹ்வுக்கு. அவரது கையில் கடிதம் ஒன்றை அளித்து, கட்டளை இட்டார்கள் நபியவர்கள். “நீ இவர்களை அழைத்துக்கொண்டு குறிப்பிட்ட திசையில் செல்ல வேண்டும். இரண்டு நாள் பயணம் செய்து முடிக்கும்வரை எக்காரணம் கொண்டும் இக்கடிதத்தைப் பிரிக்கக்கூடாது. அதன் பிறகு இதைப் பிரித்து என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதன்படி செயல்பட வேண்டும்.”

“அப்படியே ஆகட்டும்” என்று கடிதத்தை வாங்கிப் பத்திரப்படுத்திக்கொண்ட அப்துல்லாஹ், தமது குழுவினருடன் உடனே புறப்பட்டார். இருநாள் பயணம் முடிந்ததும் ஓலையைப் பிரித்துப் படித்தார் அப்துல்லாஹ். “இக்கடிதத்தை நீர் படித்ததும், தாயிஃப்-மக்கா நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள நக்லாவை நோக்கிச் செல்லவும். அங்குக் குரைஷியர்களின் நடமாட்டத்தை உளவு பார்த்துவந்து நமக்குத் தகவல் அளிக்கவும்” என்று எழுதப்பட்டிருந்தது.

“இறைத் தூதரின் நோக்கம் நமக்குக் கட்டளையாகும்” என்றார் அப்துல்லாஹ். மக்காவைவிட்டு குரைஷிகளின் துன்புறுத்தலிலிருந்து தப்பித்து வெளியேறி வந்தவர்கள், குரைஷிகள் நடமாட்டம் மிகுந்த பகுதிக்குச் சென்று வேவு பார்ப்பது சாமானிய காரியமல்ல. புலியின் குகைக்குள் வலியச்சென்று தலையைச் செருகுவதைப் போலான செயல் அது. அவர்களிடம் பிடிபட்டால் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பது தெளிவாகப் புரிந்ததால் தம் குழுவினரிடம், “அல்லாஹ்வின் தூதர் என்னை நக்லாவிற்குச் செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்கள். அங்குக் குரைஷிகளின் நடமாட்டத்தை அறிந்து நபியவர்களுக்குத் தகவல் தரவேண்டும். இத்திட்டத்தில் என்னுடன் இணைய உங்களுள் யாரையும் வற்புறுத்தக்கூடாது என்று நான் தடுக்கப்பட்டிருக்கிறேன். நீங்கள் யாரேனும் இறைவழியில் உயிர் துறந்து ஷஹீதாக விரும்பினால் இது உங்களுக்கு நல்லதொரு வாய்ப்பு. பிரியமில்லை; ஊர் திரும்ப விழைகிறேன் என்பீர்களானால் உங்கள்மீது யாதொரு குற்றமும் இல்லை. நீங்கள் அப்படியே செய்யலாம்.”

ஒத்த குரலில் பதில் வந்தது. “இறைத் தூதரின் நோக்கம் நமக்குக் கட்டளையாகும். நீர் எங்கெல்லாம் செல்லக் கட்டளை இடப்பட்டிருக்கிறீரோ அங்கெல்லாம் நாங்களும் பின்தொடர்வோம்.” நக்லாவை நோக்கி நகர்ந்தது குழு.

ஸஅத் இப்னு அபீ வக்காஸ், உத்பா இப்னு கஸ்வான் ரலியல்லாஹு அன்ஹுமா இருவரும் இக்குழுவில் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் ஓர் ஒட்டகம். அதுவரை சமர்த்தாய் இருந்த அந்த ஒட்டகம் என்ன நினைத்ததோ, திடீரென்று பிய்த்துக் கொண்டு ஓடியது. ஸஅதும் உத்பாவும் அதைத் துரத்திக் கொண்டு செல்ல, ‘சரி அவர்கள் தானாய் வந்து சேரட்டும்’ என்று மற்றவர்கள் நக்லா வந்தடைந்தார்கள். தனித்தனியாகப் பிரிந்து சாலைகளையும் ஊரையும் நோட்டமிட ஆரம்பித்தனர்.

அந்த நேரம் பார்த்து அந்த ஊரைக் கடந்துச் செல்ல வந்திருந்தது குரைஷியர்களின் ஒரு வணிகக் கூட்டம். அதில் குரைஷியருள் முக்கியமான நால்வர் இருந்தனர். அம்ரிப்னுல் ஹத்ரமீ, அல்-ஹகம் பின் கைஸான் ஆகிய இருவரும் கூடவே அப்துல்லாஹ் இப்னுல் முகீராவின் இரு மகன்களான உத்மானும் நவ்ஃபலும். அவர்களின் ஒட்டகங்கள் தோல், உலர்ந்த திராட்சைப் பழங்கள் என்று கனத்த வளமுடன் பொருட்பொதிகளைச் சுமந்திருந்தன. இந்த வணிகக் கூட்டம் முகாமிட்டிருந்த இடத்திற்கு அருகிலேயே முஸ்லிம்களும் வந்து சேர்ந்தனர். அறிமுகமில்லாத அந்த அந்நியர்களைக் கண்டதும் குரைஷி வணிகக் கூட்டத்திற்கு இலேசான பதட்டம் தொற்றியது. அதைக் கவனித்த உக்காஷா இப்னு முஹ்ஸின் ரலியல்லாஹு அன்ஹு ஒரு தந்திரம் செய்தார். தம் தலைமுடியை மழித்துக் கொண்டார். அவர்கள் மத்தியில் யதார்த்தமாய் நடமாட ஆரம்பித்தார். மக்காவிற்கு யாத்திரை செல்பவர்கள் அவ்விதம் முடியை மழித்துக் கொள்வது அக்காலத்தில் வழக்கமாயிருந்தது. அதனால் அவரும் யாரோ ஒரு யாத்ரீகர் என்று நினைத்த குரைஷிகள் பதட்டம் தணிந்தனர்.

அரபு மாதங்களில் நான்கு மாதங்கள் அரபியர் அனைவருக்கும் புனித மாதங்கள். ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம். பண்டைய காலத்திலிருந்தே அரேபியர்களுக்கு அப்படித்தான். முஸ்லிம்கள் மற்றவர்கள் என்று அரபுகள் அதைப் பாரபட்சமில்லாமல் பின்பற்றி வந்தனர். அந்த நான்கு மாதங்களில் போர், சண்டை, சச்சரவு எதுவும் கிடையாது. குரைஷிக் குலத்தினர் ஏதாவது சுண்டைக்காய் சமாச்சாரத்துக்கு காட்டுத்தனமாய் மாய்ந்து மாய்ந்து போர் புரிந்து கொண்டிருப்பவர்கள், இந்த மாதங்கள் வந்ததும் ஆயுதங்களை இறக்கி வைத்துவிட்டு, “உனக்கு அப்புறம் இருக்கு. வந்து வெச்சுக்கிறேன்” என்று ஒருவருக்கொருவர் உறுமி எச்சரித்துவிட்டு ஓய்வெடுத்துக் கொள்வார்கள்.

அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷின் தலைமையில் இருந்த முஸ்லிம்கள், அந்த வணிகக் கூட்டத்தைக் கண்ட நேரம் ரஜப் எனும் புனித மாதத்தின் இறுதி நாள். கண்ணெதிரே வசமாய்ச் சிக்கி நிற்கும் குரைஷிகள். நாளோ புனித மாதங்களில் ஒன்று. எனவே குரைஷிகளிடம் போர் தொடுக்க முடியாது. அதேநேரம் கைக்கு எட்டிய வணிகக் கூட்டம் வாளுக்கு எட்டாமல் விட்டுவிடவும் அவர்களது மனம் இடம் தரவில்லை. என்ன செய்யலாம் என்று பரபரத்தார்கள். ஆலோசனை நிகழ்ந்தது.

“இப்பொழுது நாம் அவர்களைத் தாக்கி, அவர்களில் யாராவது ஒருவன் இறந்து போனாலும், புனித மாதத்தின் புனிதத்தன்மையை நாம் மீறிவிட்டதாக முழு அரேபியாவும் நம்மை இகழும், ஏசும். நாம் அரபுகளின் ஒட்டு மொத்த கோபத்துக்கும் ஆளாக நேரிடலாம். ஆனால் இன்று ஒருநாள் கழியட்டும் என்று நாம் காத்திருந்தால் அவர்கள் நாளை மக்க நகரின் புனித எல்லைக்குள் நுழைந்துவிடுவார்கள். மக்காவின் புனிதத்தன்மையை நாம் எக்காரணம் கொண்டும் மீற முடியாது. என்ன செய்வது?”

ஒருவர் மாற்றி ஒருவர் பேசினார்கள், கருத்துத் தெரிவித்தார்கள், இறுதியில் ஏகமனதாக முடிவாகியது. “தாக்குவோம் அல்லாஹ்வின் எதிரிகளை.”

சடேரென தாக்க ஆரம்பித்தார்கள் முஸ்லிம்கள். வாகித் இப்னு அப்துல்லாஹ் எய்த அம்பு அம்ரு இப்னுல் ஹத்ரமீயைத் தாக்கி, கொல்லப்பட்டான் அவன். உத்மான் இப்னு அப்துல்லாஹ்வும் அல்-ஹகம் இப்னு கைஸானும் சிறை பிடிக்கப்பட்டனர். நவ்ஃபல் இப்னு அப்துல்லாஹ் மட்டும் சமாளித்து, தப்பித்து ஓடிப்போனான். சட்டுபுட்டென்று அனைத்தும் நிகழ்ந்து முடிந்து, வணிகப் பொருட்கள் முஸ்லிம்கள் வசமாகின.

கைதிகளுடனும் பொருட்களுடனும் மதீனா வந்தடைந்தது முஸ்லிம்களின் குழு. நபியவர்களைச் சந்தித்து, சமர்ப்பித்து, நடந்ததை விவரித்தனர். வெற்றிக்குப் பாராட்டை எதிர்பார்த்த அவர்களுக்கு நபியவர்களிடமிருந்து வந்த பதில் அவர்கள் சற்றும் எதிர்பாராதது.

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உங்களைப் போரிடச் சொல்லி உத்தரவிடவில்லையே! குரைஷிகளின் நடமாட்டத்தை உளவு பார்த்துவந்து சொல்ல வேண்டும் என்பது மட்டும்தானே நான் உங்களுக்கு இட்டிருந்த பணி. இந்தக் கைதிகள் தற்சமயம் காவலில் இருக்கட்டும். கைப்பற்றப்பட்ட பொருள்களை யாரும் தொட வேண்டாம்.”

மக்காவில் அனைத்தையும் இழந்து, குரைஷிகளால் தங்களது செல்வம் அபகரிக்கப்பட்டு, முஹாஜிர்கள் படு அவல நிலையில் இருந்த காலம் அது. கொழுத்த செல்வத்துடன் இருந்த அந்த வணிகப் பொருட்கள் அவர்களுக்கு மிகவும் தேவையானதாக இருந்தது. ஆயினும் நபியவர்களின் கட்டளை அமல்படுத்தப்பட்டது. அது ஒருபுறமிருக்க, அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் மற்றும் அவருடன் அக்குழுவில் இடம்பெற்றிருந்த தோழர்களின் நிலை பரிதாபத்திற்குரியதானது. நபியவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டதே என்று தாள மாட்டாத கவலையும் சோகமும் அவர்களுக்கு. அல்லாஹ்வின் தூதரின் கட்டளையை மீறியதால் இறைவனின் கோபத்திற்கும் சாபத்திற்கும் நாம் ஆளாகப் போகிறோம் என்று மாய்ந்து மருகினார்கள். அந்த அச்சம் அவர்களைப் பிடுங்கித் தின்றது. இதெல்லாம் போதாதென்று சக முஸ்லிம்களின் பார்வையும் வார்த்தைகளும் மேலும் அவர்களைச் சங்கடப்படுத்தின. அவர்களைக் காண்பவர்கள், “அதோ பார்! அவர்கள்தாம் நபியவர்களின் கட்டளையை மீறியவர்கள்“ என்று அடையாளம் காட்டிக்கொண்டிருந்தார்கள். மதீனாவின் வெயிலைவிட அந்த வார்த்தைகள் அவர்களைப் பொசுக்கின.

இதனிடையே செய்தி கேள்விப்பட்டு மக்காவில் குரைஷிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு உருவானது. “முஹம்மது புனித மாதங்களின் புனிதத்தை மீறிவிட்டார். ரத்தம் சிந்தப்பட்டு, பொருட்கள் கைப்பற்றபட்டு, சிறை பிடிக்கப்பட்டு… போச்சு! எல்லாம் போச்சு! ஆண்டாண்டு காலமாய் நாம் போற்றிப் பாதுகாத்துவந்த புனிதம் தீட்டுப்பட்டுவிட்டது.”

மக்காவின் இந்தக் களேபரச் செய்தி காதில் விழுந்ததும் அப்துல்லாஹ்வும் குழுவினரும் மேலும் துவண்டு போனார்கள். ”நமது அவசர புத்தியால் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தித் தந்துவிட்டோமே!”

இவ்விதம் இங்கே புவியில் சங்கடமும் குழப்பமும் கவலையும் நிலவியிருக்க, விண்ணிலிருந்து இறைவன் அளித்த தீர்ப்பு வித்தியாசமாக இருந்தது; மாய்ந்து மருகிய மனங்களின் சோர்வுக்கு  முத்தாய்ப்பாக வந்து இறங்கியது.

(நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்;. நீர் கூறும்; “அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்;. (இணைவைத்தல் எனும்) ஃபித்னா, கொலையைவிடக் கொடியது. அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும்வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள். உங்களுள் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும். இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்”

‘புனிதமான மாதங்களில் போர் புரிவது பெரும் குற்றம்தான். அது உங்களுக்குள் அடித்துக்கொள்ளும்போது. அல்லாஹ்வுக்கு எதிராய்க் குற்றம் இழைத்து, அக்கிரமம் புரிந்து, குழப்பம் விளைவித்து, இறைவனின் புனிதத்தலமான கஅபாவுக்குள் முஸ்லிம்களை நுழையவிடாமல் துரத்தியடிப்பது, இவையெல்லாம் அதைவிட மாபெரும் குற்றங்களாகும். அதனால் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் குழுவினரின் நடவடிக்கை சரியே!’ என்று இறைவனின் வசனம் தெள்ளத்தெளிவாய்த் தீர்ப்பு வழங்கியது. குர்ஆனின் 2ஆவது அத்தியாயத்தின் 217 ஆவது வசனமாகப் பதிந்துபோனது.

இந்த இறை அறிவிப்பு வெளியானதும் நபியவர்களின் கோபம் தணிந்தது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் முஸ்லிம்களுக்கு அனுமதிக்கப்பட்டு, பிரித்து வழங்கப்பட்டன. இதற்குள் முஸ்லிம்களிடம் பிடிபட்ட தங்கள் மக்கள் இருவரையும் மீட்பதற்கு இழப்புத் தொகையுடன் மதீனாவிற்கு ஆள் அனுப்பியிருந்தனர் குரைஷிகள்.

ஸஅதும், உத்பாவும் மிரண்ட ஒட்டகத்தைத் துரத்திச் சென்றவர்கள் குழுவிலிருந்து பிரிந்துவிட்டார்கள் என்று பார்த்தோமில்லையா? அவர்கள் அதுவரை மதீனாவுக்குத் திரும்பவில்லை. அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதும் தெரியாமல் இருந்தது. அதனால் நபியவர்கள் பிணைத் தொகையுடன் வந்திருந்த குரைஷித் தூதுவர்களிடம், “ஸஅதும் உத்பாவும் திரும்பும்வரை ஒன்றும் செய்வதற்கு இல்லை. நீங்கள் அவர்களைக் கொன்றிருந்தால் நாங்கள் இவர்களைக் கொல்வோம்” என்று அறிவித்துவிட்டார்கள். பின்னர் ஒருவழியாக ஸஅதும் உத்பாவும் மதீனாவுக்கு வந்துசேர, பிணைத் தொகை ஏற்றுக் கொள்ளப்பட்டு கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அப்பொழுது ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. அல்-ஹகம் இப்னு கைஸான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு மதீனாவிலேயே தங்கிவிட்டார். உத்மான் இப்னு அப்துல்லாஹ் மட்டும் மக்கா திரும்பினான்.

இஸ்லாமிய வரலாற்றில் பதியப்பட்டுள்ள முதல் ராணுவ நடவடிக்கை இது. போரில் முதன்முறையாக முஸ்லிம்கள், எதிரிகளின் பொருட்களைக் கைப்பற்றியது இந்த நிகழ்வில்தான். ராணுவ நடவடிக்கையால் முஸ்லிம்களால் முதலில் கொல்லப்பட்ட எதிரியும் இந்தப் போரில்தான். முதன்முறையாக முஸ்லிம்களின் கொடியேந்திச் சென்றது அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ். இப்படியாக பல ‘முதல்’கள் இந்நிகழ்விற்கு ஏற்பட்டுப்போயின.

‘ஒன்றுமில்லாத பரதேசிக் கூட்டம் என்று நாம் நினைத்திருந்த முஸ்லிம்கள், ஊரைவிட்டு ஓடிப்போய் அவ்வளவு தூரத்தில் இருக்கும்போதும், 300 மைல் தாண்டி நமது எல்லைவரை வந்து, நம்மில் ஒருவனைக் கொன்று, நம் வணிகப் பொருட்களைப் பறிமுதல் செய்தது மட்டுமின்றி குரைஷிகள் இருவரைக் கைதும் செய்து பஞ்சம் பிழைக்கப் போன மதீனாவுக்குக் கொண்டு சென்றுவிட்டார்களே’ என்று குரைஷிகளுக்குப் பொங்கி எழுந்த ஆத்திரம், பின்னர் அவர்கள் படையெடுத்த பத்ரு யுத்தத்திற்கு ஒரு காரணமாக அமைந்துபோனது உண்மை. பத்ரு யுத்தத்திலும் தம் பங்குக்கு உரிய வீரத்தை வாளால் எழுதினார் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ்.

அதற்கு அடுத்த ஆண்டு உஹது யுத்தம் நிகழ்ந்தது. இதுபற்றிய நிகழ்வுகளைப் பகுதி பகுதியாக பல தோழர்களின் வரலாற்றில் பார்த்துக்கொண்டே வந்தோம். போர் துவங்கும்முன் தோழர் ஸஅத் பின் அபீ வக்காஸிடம் வந்தார் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ். “வா நாம் இறைவனிடம் இறைஞ்சுவோம்” என்றார்.

“நல்லது, வா” என்று அவரைத் அழைத்துக்கொண்டு தனியிடத்தில் ஒதுங்கினார் ஸஅத். முதலில் அவர் இறைவனிடம் பிரார்த்தனை புரிந்தார். “யா அல்லாஹ் நாங்கள் எதிரியைச் சந்திக்கும்போது, மிக வலிமையான, கடுமையான, மூர்க்கமான போர் வீரனை நான் எதிர்கொள்ள வேண்டும். அவனை நான் வென்று அவனது ஆயுதங்களைக் கைப்பற்ற வேண்டும்.”

“ஆமீன்” என்றார் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ்.

பின்னர் அவர் இறைவனிடம் பிரார்த்தனை புரிந்தார். ”யா அல்லாஹ்! மிக வலிமையான, கடுமையான, மூர்க்கமான போர் வீரனை எனக்கு அனுப்பிவை. நான் அவனுடன் போரிட வேண்டும். இறுதியில் அவன் என்னை வென்று எனது காது, மூக்கை சேதப்படுத்த வேண்டும். அவ்விதம் அங்கம் பாதிப்படைந்த நிலையில் நான் உன்னைச் சந்திக்க வேண்டும். ஏன் உனது அங்கங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன? என்று நீ என்னைக் கேட்பாய். உனக்காகவும் உன் தூதருக்காகவும் இவ்விதம் நிகழ்ந்தது என்று நான் பதில் உரைப்பேன். நான் உண்மையை உரைத்தேன் என்று நீ சொல்ல வேண்டும்.” (இபுனு ஷாஹீன்).

தம்மைவிட அப்துல்லாஹ் சிறப்பான பிரார்த்தனை புரிந்ததாய் உணர்ந்து, வியந்துபோய் அவரைப் பார்த்தார் ஸஅத். அன்று மாலை அந்த வியப்பு உண்மையானது. போர் நிலவரம் மாறிப்போய், முஸ்லிம்களுக்கு நிகழ்வுற்ற சேதம் நமக்கு நன்கு அறிமுகமான நிகழ்வுகள் இல்லையா? அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் கொல்லப்பட்டிருந்தார். அங்கங்கள் சிதைக்கப்பட்டு, அவரது காதும் மூக்கும் ஒரு மரத்தில் கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டிருப்பதைக் கண்டார் ஸஅத். அல்லாஹ்வின் பொருட்டு உயிர்த் தியாகத்திற்காகவே உயிர் வளர்த்திருக்கிறார்கள் அவர்கள்!

“திண்ணமாக நான் உங்களுக்காகக் கவ்தருக்கருகில் காத்திருப்பேன். உங்களுக்காக நான் சாட்சி கூறுவேன் …” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உஹதுத் தியாகிகளுக்கு உறுதியளித்தார்கள்.

தம் தாய் மாமன், அல்லாஹ்வின் சிங்கம் ஹம்ஸா இப்னு முத்தலிபுடன் உஹது களத்தில் ஒரே குழிக்குள் நல்லடக்கம் செய்யப்பட்டார் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ்.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்!

< தோழர்கள் முகப்பு | தோழர்கள்-48 >


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.