சத்தியமார்க்கம்.காம் எந்த அமைப்பைச் சார்ந்தது?

சத்தியமார்க்கம்.காம் தளம், சத்திய மார்க்கமாம் இஸ்லாத்தைச் சார்ந்தது.

இவ்வுலகைப் படைத்து அதில் தன்னுடைய தீனை நிலை நாட்டப் போதுமான வழிகாட்டியாக “அல்குர்ஆனுடன்”, சத்தியமார்க்கமான இஸ்லாத்தினை அருளிய எல்லாம் வல்ல அல்லாஹ், தன்னுடைய அடியானிடம் என்ன எதிர்பார்க்கிறானோ அதனை மட்டும் செய்து அவனிடமிருந்து பெறற்கரிய சுவர்க்கத்தைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் சில முஸ்லிம் சகோதரர்களால் துவங்கப்பட்ட தளமே சத்தியமார்க்கம்.காம்.

இவ்வெண்ணத்தில் உறுதியுடன் இருந்து சத்தியத்தை சத்தியமாக நெஞ்சுறுதியுடன் எவ்விடத்திலும் உரத்துக் கூற விழையும் ஒவ்வொரு அடியானையும் தன்னகத்தே இணைத்துக் கொண்டு மறுமையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது சத்தியமார்க்கம்.காம்.

மேலதிக விவரங்களுக்கு இந்த இணைப்பைப் பார்வையிடவும்.

சத்திய வழியை நிலை நாட்டுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்த சத்தியமார்க்கம்.காம் தளத்தின் உயரிய சிந்தனை எக்காலகட்டத்திலும் பிறழ்ந்து போகாமல் இருக்கவும், எடுத்துக் கொண்ட நோக்கத்தினை பூர்த்தி செய்து ஈருலக வெற்றியினை ஈட்டவும் சகோதரர்கள் இறைவனிடம் பிரார்த்திக்கக் கோருகிறோம்.

மேலும் சத்தியமார்க்கம்.காம் தளத்திற்கு சகோதரர்கள் அனைவரின் ஒத்துழைப்பினையும் எதிர்பார்க்கிறோம்.

இன்று தமிழக முஸ்லிம் சமூகத்தில் குடிகொண்டு விட்ட “இவன் எந்த அமைப்பைச் சார்ந்தவனாக இருப்பானோ? என்கிற இந்த கேடு கெட்ட சிந்தனை, சமூகத்திலிருந்து துடைத்தெறியப்படுவதில் தான் இச்சமூகத்தின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

நடுநிலைச் சமுதாயமாக எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் திருக்குர்ஆனில் அடையாளப் படுத்தப்படும் அந்த சமூகம் நிச்சயமாக இது போன்ற சிந்தனை கொண்ட சமுதாயமாக இருக்க வாய்ப்பில்லை.

இன்று ஒரு முஸ்லிம் தன் உடன்பிறந்த சகோதரனையே இவ்வாறு “புலனாய்வுத் துறை ரேஞ்சுக்கு” சந்தேகப்பட்டு கேள்வி கேட்கும் நிலையில் இச்சமூகம் உள்ளது. இதுவா நடுநிலை சமுதாயத்தின் பணி? நடுநிலை சமுதாயம் எப்படியிருக்கும் என இறைவன் திருக்குர்ஆனில் கூறும் பண்புகளில் ஒன்றா இது? இச்சமுதாயம் இன்று இக்கேள்வியை தன்னைத் தானே கேட்க வேண்டிய கேடுகெட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்த சிந்தனையில் சில தன்னார்வ சகோதரர்களால் உருவாக்கப்பட்டதுதான் சத்தியமார்க்கம்.காம். இறைவன் சிறப்பித்துக் கூறும் அந்த நடுநிலை சமுதாயமாக இருக்க எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக. ஆமீன்.

மன்றம் பகுதிக்கு வந்த ஐயத்திற்கான தெளிவை இங்கே மற்ற சகோதரர்களின் பார்வைக்காக வைத்துள்ளோம். -நிர்வாகி