தஸ்பீஹ் தொழுகை – ஓர் ஆய்வு (பகுதி 1)

தஸ்பீஹ் தொழுகைக்கான ஆதாரங்கள் குறித்தும் அவற்றின் நம்பகத்தன்மை குறித்தும் அவற்றினைக் குறித்து அறிஞர்களின் கருத்துக்களைக் குறித்தும் இப்பகுதியிலிருந்து விரிவாக அலசி ஆராயலாம்.

 

தஸ்பீஹ் தொழுகை உண்டு என கூறுபவர்கள் எடுத்து வைக்கும் ஹதீஸ்களில் அபூராஃபிவு (ரலி), இப்னுஅப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அலீ (ரலி), இப்னு உமர்(ரலி), ஜாஃபர் பின் அபீதாலிப் (ரலி), ஃபழ்ல் பின் அப்பாஸ் (ரலி), உம்முஸலமா(ரலி), அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) போன்ற ஸஹாபிகள் அறிவிப்பதாக வரும் ஹதீஸ்கள் முக்கியமானவைகளாகும்.

மேற்கண்ட ஸஹாபிகள் அறிவிப்பதாக வரும் செய்திகளை ஆய்வு செய்த அறிஞர்கள், தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக நான்கு விதமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

1. தஸ்பீஹ் தொழுகை மார்க்கத்தில் உள்ளதுதான் அதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.

2. தஸ்பீஹ் தொழுகை தொடர்பான செய்திகள் இட்டுக்கட்டப்பட்டவை. எனவே மார்க்கத்தில் தஸ்பீஹ் தொழுகை என்பது இல்லை.

3. தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக வரும் செய்திகள் பலவீனமானவையாக இருந்தாலும் பல வழிகளில் இடம்பெறுவதால் அது ஹஸன் எனும் தரத்தில் அமைகிறது.

4. தஸ்பீஹ் தொழுகை தொடர்பான அனைத்து செய்திகளும் பலவீனமானதாகும். எனவே பலவீனமான செய்தியை ஆதாரமாகக் கொண்டு செயல்படக் கூடாது.

இந்த நான்கு கருத்துக்களில் எது சரியானது என்பதை ஸஹாபிகள் அறிவிப்பதாக வரும் ஒவ்வொரு ஹதீஸினையும் அதனைக் குறித்த அறிஞர்களின் கருத்துக்களையும் விரிவாக காண்போம்.

1. அபூ ராஃபிவு (ரலி) அறிவிக்கும் செய்தி

நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) யை நோக்கி, ”என் பெரிய தந்தையே! உங்களுடன் உள்ள உறவுக் கடனை நிறைவேற்றட்டுமா? உங்களுக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் வழங்கட்டுமா? உங்களுக்கு நான் பயனுள்ளதைக் கூறட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பாஸ் (ரலி), ”ஆம்! அல்லாஹ்வின் தூதரே!” என்றார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”என் பெரிய தந்தையே! நீங்கள் நான்கு ரக்அத்கள் தொழுங்கள்! ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து அத்தியாயத்தையும் இன்னொரு அத்தியாயத்தையும் ஓதுங்கள்!

ஓதி முடித்ததும் அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ் வலாயிலாஹ இல்லல்லாஹ் என்று ருகூவிற்கு முன் 15 தடவை கூறுவீராக! பின்னர் ருகூவு செய்து அதில் 10 தடவை அதனைக் கூறுவீராக! பின்னர் தலையை உயர்த்தி அதிலும் பத்து தடவை கூறுவீராக! பின்னர் ஸஜ்தாச் செய்து அதிலும் பத்து தடவை கூறுவீராக! பின்னர் தலையை உயர்த்தி, அதிலும் 10 தடவை கூறுவீராக. பின்னர் ஸஜ்தா செய்து அதிலும் 10 தடவை அதனை கூறுவீராக! பின்னர் தலையை உயர்த்தி எழுவதற்கு முன்னால் பத்து தடவை கூறுவீராக! ஒவ்வொரு ரக்அத்திலும் இவ்வாறு எழுபத்து ஐந்து தடவைகள், நான்கு ரக்அத்துகளிலும் மொத்தம் முன்னூறு தடவைகள் செய்தால் அடர்ந்த மணல் எண்ணிக்கையளவு உமது பாவங்கள் இருந்தாலும் அல்லாஹ் உம்மை மன்னித்து விடுவான்” என்று கூறினார்கள்.

அதற்கு அப்பாஸ் (ரலி) ”அல்லாஹ்வின் தூதரே! தினமும் இதைச் செய்ய எல்லோருக்கும் இயலுமா?” என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”தினமும் உமக்குச் செய்ய இயலாவிட்டால் வாரம் ஒரு முறை செய்வீராக! ஒரு வாரத்தில் ஒருமுறை செய்ய இயலாவிட்டால் ஒரு மாதத்தில் ஒரு தடவை செய்வீராக!” இவ்வாறு சொல்லிக் கொண்டே வந்து ஒரு வருடத்தில் ஒரு தடவை செய்யுமாறு கூறினார்கள்.

அறிவிப்பவர்:அபூராஃபிவு (ரலி), நூல் திர்மிதீ (444)

இதே செய்தி இப்னுமாஜாவில் (1376) ஆவது ஹதீஸாகவும் இடம்பெற்றுள்ளது.

அபூராஃபிவு (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த செய்தி திர்மிதீ, இப்னுமாஜா, இமாம் பைஹகீ அவர்களின் அஸ்ஸுனுஸ் ஸுக்ரா, இமாம் தப்ரானீ அவர்களின் அல்முஃஜமுல் கபீர் ஆகிய நான்கு நூல்களில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸில் இடம்பெறும் மூஸா பின் உபைதா பின் நஷீத் அர்ரபதீ என்பவரைப் பற்றி ஆட்சேபகரமான பல கருத்துக்கள் ஹதீஸ்கலை வல்லுனர்களிடையே உள்ளது. இவரைப் பற்றி இந்த நான்கு இமாம்களும் தங்களது நூலில் கீழ்க்கண்டவாறு கருத்து கூறி இருக்கின்றனர்.

இமாம் திர்மிதி அவர்கள்,

மூஸா பின் உபைதா என்பவர் நல்லவர். எனினும் அவரின் நினைவாற்றல் (குறைவு) காரணத்தினால் ஹதீஸ் துறையில் அவரை பலவீனமானவராக ஆக்கியுள்ளனர்.” (நூல்: திர்மிதீ 1078)

மேலும் “மூஸா பின் உபைதா அர்ரபதீ என்பர் அபூ அப்துல் அஜீஸ் என்ற புனைப்பெயர் சூட்டப்பட்டவர். இவரின் நினைவாற்றல் காரணமாக யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் மற்றும் இவரல்லாதவர்களும் விமர்சித்துள்ளனர். மூஸா பின் உபைதா என்பவர் ஹதீஸ் துறையில் பலவீனமாக்கப்பட்டவர். யஹ்யா பின் ஸயீத் மற்றும் இவரல்லாதவர்களும் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள்.” (நூல்: திர்மிதீ3262)

இவரைப்பற்றி இமாம் புகாரியிடம் இமாம் திர்மிதீ அவர்கள் கேட்டபோது,

“முஜாலித், மூஸா பின் உபைதா ஆகியோரின் ஹதீஸ்களை நான் எழுதிக் கொள்ளமாட்டேன் என இமாம் புகாரீ குறிப்பிட்டார்கள்.” (நூல்: இலலுத் திர்மிதீ அல்கபீர், பாகம் 1, பக்கம் 309)

மூஸா பின் உபைதா வழியாகப் இந்த ஹதீஸைப் பதிவு செய்த மற்றொரு இமாம் பைஹகீ அவர்கள் தனது அஸ்ஸுனுல் குப்ரா என்று நூலில் இவர் இடம்பெறும் வேறொரு செய்தியைப் பற்றி கூறும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

“இச்செய்தியை மூஸா பின் உபைதா தனித்து அறிவிக்கிறார். அவர் பலவீனமானவராவார்.” (நூல்: பைஹகீ பாகம் 5, பக்கம் 117)

இமாம் புகாரி அவர்கள் தனது தாரிகுல் கபீர் என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

மூஸா பின் உபைதா பின் நஷீத் என்பவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர். இவ்வாறு அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் கூறினார்கள். அந்நாட்களில் (அவர் வாழும் நாட்களில்) அவரை விட்டும் நாங்கள் தவிர்ந்து வந்தோம் என்று கத்தான் அவர்கள் குறிப்பிட்டார்கள்.”  (தாரிகுல் கபீர் பாகம் 7, பக்கம் 291)

இதே கருத்தை இமாம் புகாரி அவர்கள், அவர்களின் இன்னொரு நூலான அத்தாரிகுஸ் ஸகீரிலும் குறிப்பிட்டுள்ளார்கள் (பாகம் 2, பக்கம்93)

மூஸா பின் உபைதா என்பவரை கடுமையாக விமர்சனம் செய்தவர்களில் முக்கியமானவர் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ஆவார்கள்.

எனது கருத்துப்படி மூஸா பின் உபைதா என்பவரின் அறிவிப்புகளை பதிவு செய்வது அனுமதி இல்லை” என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: அல்காமில் லி இப்னு அதீ பாகம் 6, பக்கம் 334)

மூஸா பின் உபைதா என்பவரின் அறிவிப்புகள் எழுதப்படாது. அவரிடமிருந்து எந்த ஒன்றையும் நான் வெளியிடமாட்டேன். அவரின் ஹதீஸ்கள் மறுக்கப்படவேண்டியவை” என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: அல்காமில் லி இப்னு அதீ பாகம் 6, பக்கம் 334)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மூலம் மூஸா பின் உபைதா என்பவர் அறிவித்த ஹதீஸை கடந்து சென்ற போது இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் இது மூஸா பின் உபைதா என்பவரின் சரக்கு என்று கூறிவிட்டு தனது வாயை மூடி கோணலாக்கியவாறு தனது கையை உதறினார்கள். மேலும் “இவர் ஹதீஸை (முறைப்படி) மனனம் செய்தவரில்லை” என்றும் குறிப்பிட்டார்கள். (நூல்: அல்காமில் லி இப்னு அதீ பாகம் 6, பக்கம் 334)

“மூஸா பின் உபைதா, இஸ்ஹாக் பின் அபீஃபர்வா, ஜுவைபிர், அப்துர்ரஹ்மான் பின் ஸியாத் ஆகிய நான்கு நபர்களின் செய்திகள் எழுதப்படாது” என்று அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: லுஅஃபாவுல் உகைலீ பாகம் 3, பக்கம் 161)

“மூஸா பின் உபைதா அர்ரபதீ, அப்துர்ரஹ்மான் பின் ஸியாத் அல்இஃப்ரிகீ ஆகியோரின் ஹதீஸ்களை நான் எழுதமாட்டேன்” என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: ஹாகிம், பாகம் 2, பக்கம்251)

“அவருடைய(மூஸா பின் உபைதா அர்ரபதீ) ஹதீஸ் என்னிடத்தில் எந்த மதிப்பும் அற்றது” என்று அஹ்மத் பின் ஹன்பல் கூறினார்கள். (நூல்: தஹ்தீபுத்தஹ்தீப் பாகம்10, பக்கம் 320)

இமாம் இப்னுஹிப்பான் அவர்கள் மூஸா பின் உபைதாவைப் பற்றி,:

உறுதியான நினைவாற்றல் கோட்டைவிடுபவர்; எதற்கு அடிப்படை இருக்காதோ அப்படிப்பட்ட செய்திகளை யூகமாகக் கொண்டு வருவார். நம்பகத்திற்குப் பாத்திரமானவர்களின் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு அடிப்படையற்ற செய்தியை அறிவிப்பார். எனவே தகவல் என்ற கோணத்தில் இவரை ஆதாரமாகக் கொள்ளுதல் நீங்கிவிடுகிறது. அவர் தன் அளவில் சிறந்தவராக இருந்தாலும் சரியே” (நூல்: மஜ்ரூஹீன் பாகம் 2, பக்கம் 235) என்று கூறியிருக்கிறார்

இமாம் இப்னு மயீன் அவர்கள் மூஸா பின் உபைதாவைப் பற்றி சொன்ன செய்தி:

மூஸா பின் உபைதா பலவீனமானவர்.” (நூல்: தாரீக் இப்னு மயீன் பாகம் 1, பக்கம் 199)

“இவருடைய ஹதீஸ்களை ஆதாரமாக கொள்ளக்கூடாது” என்று இப்னுமயீன் அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: தஹ்தீபுத்தஹ்தீப் பாகம் 10, பக்கம்320)

“மூஸா பின் உபைதா என்பவர் எந்த மதிப்பும் இல்லாதவர்” என்று இப்னு மயீன் குறிப்பிட்டார்கள். (நூல்: தஹ்தீபுத்தஹ்தீப் பாகம் 10, பக்கம்320)

மூஸா பின் உபைதா என்பவரைப் பற்றி இன்னும் பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

மூஸா பின் உபைதா என்பவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவராவார். இவர் மறுக்கப்படவேண்டிய ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என்று அலீ பின் அல்மதீனீ அவர்களும் ஹதீஸ்துறையில் வலிமை வாய்ந்தவர் இல்லை என்று அபூஸுர்ஆ அவர்களும் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்று அபூஹாத்தம் அவர்களும் பலவீனமானவர் என்று ஒரு சந்தர்பத்திலும் இன்னொரு சந்தர்பத்தில் நம்பகமானவர் இல்லை என்றும் இமாம் நஸயீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: தஹ்தீபுத்தஹ்தீப் பாகம்10, பக்கம் 320)

இமாம் அஹ்மத் அவர்களிடம் மூஸா பின் உபைதா என்பவர் எந்த மதிப்பும் அற்றவர் என்று ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை கூற நான் செவியுற்றுள்ளேன் என அபூதாவூத் அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: தஹ்தீபுல் கமால் பாகம் 29, பக்கம் 112)

எனவே தெளிவாக ஹதீஸ் துறையில் நம்பகமற்றவராக பெரும்பாலான அறிஞர்களால் கருதப்படும் “மூஸா பின் உபைதா” என்பவர் இந்த ஹதீஸில் இடம் பெறுவதால் இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்ற தரத்தினை இழந்து விடுகிறது.

அடுத்தடுத்த பகுதிகளில் தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதரவாக வைக்கப்படும் பிற ஹதீஸ்களின் தரம் குறித்து இன்ஷா அல்லாஹ் அலசி ஆராய்வோம்.

(இன்ஷா அல்லாஹ் வளரும்)

< முன்னுரை படிக்க | பகுதி-2 படிக்க >