இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் – வல்லுறவுச் சட்டங்களில் பெரும் திருத்தங்கள்

இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் - வல்லுறவுச் சட்டங்களில் பெரும் திருத்தங்கள்
2006 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைகளின் கீழ் நடுவண் அரசு இந்தியக் குற்றவியல் சட்டத்தின் வல்லுறவுத் தண்டனைப் பிரிவில் பெரும் திருத்தங்கள் கொண்டு வர உள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில் குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டுகள் முதல் ஆயுள் சிறை வரை தண்டனைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

அதேவேளையில், பெண்களுக்கெதிரான கொடுமைகளைக் குறைக்கும் எண்ணத்தில் அரசு பெண்களுக்கெதிராக அவர்களை அவமானப்படுத்தும் எண்ணத்துடன் செய்யப்படும் மேலும் சில செயல்களைத் தண்டனைக்குரியதாக மாற்றியுள்ளது.

பெண்களின் உடல் பாகங்களை அவர்கள் அனுமதியில்லாமல் தொடுவதும், அவர்களை அவமானப்படுத்தும் எண்ணத்துடன் கெட்ட வார்த்தைகள் பேசுவதும் கைப்பாவனைகள் செய்வதும் ஒலியெழுப்புவதும் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெற்றுத் தரக்கூடிய குற்றங்களாக இந்த சட்ட முன்வரைவில் குறிக்கப்பட்டுள்ளன.

இருபாலரும் இனி இச்சட்டத் திருத்தத்தின் மூலம் தண்டிக்க ஏதுவாக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக் கருதி பல மாற்றங்களை அரசு ஏற்கனவே செய்துள்ளது. அதன்படி, காலையில் சூரியன் உதிக்கும் முன்னும், மாலையில் மறைந்த பின்னும் பெண்களை ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்கள் தவிர கைது செய்ய இயலாது.

அரசுப் பொறுப்புகளில் இருப்போர் தம் பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலியல் குற்றங்கள் புரிவதைத் தடுக்கவும் இந்த சட்ட முன்வரைவில் தண்டனைகள் கடுமையாக்கப்படும் எனவும் தெரிகிறது.

தகவல் நன்றி : தேசியப் பெண்கள் ஆணையக்குழுமத் தளம்