சிறுமிக்கு (மஷ்ரூம் கட் ஸ்டைலில்) தலைமுடி கத்தரிக்கலாமா?

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். நான் முன்பு கேட்டிருந்த கேள்விக்கு விடையை இன்னும் எதிர்பார்த்திருக்கிறேன்.

இப்போது 3 வயதாகும் என் மகளுக்கு Mushroom cut தலைமுடி கத்தரிக்க முயன்றபோது என் தோழி ஒருவர், "இஸ்லாத்தில் இது கூடாது" என்று கூறுகிறார். இந்தக் குழப்பத்தை உடனடியாகத் தீர்த்து வைப்பீர்களா?

இது சாதாரண கேள்வியாக இருந்தால் மன்னித்துவிடவும். என் மனதில் குழம்பம் நீங்கி தெளிவு பெறவே கேட்டுள்ளேன்.

ஜஸாக்கல்லாஹ் கைர்

மின்னஞ்சல் வழியாக சகோதரரி மெஹர்.

தெளிவு: வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்…

சகோதரி, இஸ்லாத்தில் சாதாரணம் எனக்கருதி அலட்சியப்படுத்தும் விஷயம் எதுவும் இல்லை!

உங்கள் தோழியின் கூற்றில் ஓரளவு உண்மை இருக்கிறது. ஏனெனில், மஷ்ரூம் கட் என்பது "பகுதி முடியை" அதிகமாக கத்தரித்தலும், "பகுதி முடியை" குறைவாக கத்தரித்தலுமாகும். எனவே கத்தரிக்கும் ஒன்றை மழிப்பது என்னும் ஹதீஸுடன் இதை ஒப்பிட முடியாது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விடுவதைத் தடை செய்தார்கள் (அறிவிப்பாளர் : இபுனு உமர் – ரலி, நூல் : புகாரீ 5921).

மேற்காணும் ஹதீஸ் ஆண்-பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவானதாக இருப்பினும் பெண்கள் தங்கள் தலைமுடியை முழுதுமாக மழித்துக் கொள்வதைத் தடைசெய்யும் ஹதீஸும் உண்டு:

பெண்கள் தமது தலையை மழிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (அறிவிப்பாளர்: அலீ – ரலி, நூல்கள்: நஸயீ 4963, திர்மிதீ 838).

நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது யாதெனில், தலைமுடியை ஒருபக்கம் மழித்தும் மறுபக்கம் மழிக்காமல் விடுவதும்தான் தடுக்கப் பட்டிருக்கின்றதேயன்றி, தலைமுடியை ஒருபக்கம் அளவு கூட்டியும் மறுபக்கம் அளவு குறைத்தும் வளர்த்துக் கொள்வதற்கு இஸ்லாத்தில் தடையில்லை என்பதே. உதாரணமாக, ஆண்களின் தலைமுடி, பிடறியில் இருக்கும் அளவைவிட முன் நெற்றியில் கூடுதலாகவே இருக்கும்; காதோரம் குறைவாகவே இருக்கும். இதை அழகு படுத்துவதாகத்தான் கருத வேண்டும். பெண்களுக்கு இயல்பாகவே பிடறிப்பகுதிமுடி, பிறபகுதியைவிடக் கூடுதல் நீளமாக இருக்கும்.

பொதுவாக, 'தஃபஹ்ஹுஷாத்' எனப்படும் அலங்கோலமாகக் காட்சியளித்தல் இஸ்லாத்தின் பார்வையில் வெறுக்கத் தக்கதாகும். அதற்கு மாறாக, ஒருவர் தம்மை அழகுபடுத்திக் கொள்வதை இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது.

நமது தளத்தின் ஸஹீஹ் முஸ்லிம் பகுதியில், 'எண்வழித் தேடல்' பெட்டியில் 131 இட்டு நீங்கள் தேடினால் (சுட்டி: https://satyamargam.com/muslim/numbersearch.php?bnumber=131) கீழ்க்காணும் ஹதீஸ் உங்களுக்குக் கிடைக்கும்:

"… தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் மறைப்பதும் மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான் …" (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் – ரலி, நூல்: முஸ்லிம்).

ஆனால், அழகு என்ற பெயரில் பெண்கள் பரவலாகப் பயன்படுத்தும் செயற்கை/ஒட்டு முடிக்கு இஸ்லாத்தில் தடை இருக்கிறது.

மதீனத்து அன்ஸாரிப் பெண்களுள் ஒருவர் தம் மகளுக்குத் திருமணம் செய்து வைத்தார். (நோய்வாய்ப் பட்டதில்) அப்பெண்ணுடைய தலைமுடி உதிர்ந்து விட்டது. அவள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'என் கணவர் எனது தலையில் ஒட்டுமுடி வைத்துக் கொள்ளச் சொல்கிறார்' என்று கூறினாள். "வேண்டாம்! ஒட்டுமுடி வைத்துக் கொள்ளும் பெண்கள் சபிக்கப் பட்டுள்ளனர்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடுத்தார்கள். (அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா – ரலி, நூல் புகாரீ 5205).

பெண்கள் தலையை முழுதுமோ பகுதியோ மழித்துக் கொள்ளக்கூடாது என்றே இஸ்லாம் தடைவிதித்துள்ளது; தலை முடிகளைக் குறைத்துக் கொள்வதைத் தடைசெய்யவில்லை.

தலைமுடி நீளமாக இருந்து அதைப் பராமரிப்பதில் பெண்களுக்கு சிரமம் ஏற்படுமெனில் குறைத்துக்கொள்வதில் தவறில்லை! குழந்தைகள் தமது தலைமுடியை சுயமாக பராமரிக்கத் தெரியாதவர்கள். சிறுமிகள் மற்றும் பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கத்திரிப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளதாக நாமறிந்தவரையில் சான்றுகள் கிடைக்கவில்லை.

எனவே, சிறுமியருக்கு 'மஷ்ரூம் கட்' சிகையலங்காரம் செய்வதை, "கூடாது" எனச்சொல்லித் தடுக்க முடியாது.

(இறைவன் மிக்க அறிந்தவன்)