சாதனைக்கு மொழி ஒரு தடையல்ல! உதவி தேடும் மாணவி!

Share this:

சாதனைகள் படைக்க வறுமை ஒரு தடையல்ல; திறமை இருந்தால் போதுமானது என்பதைக் கேள்விபட்டுள்ளோம். இங்கே ஒரு மாணவி, சாதனைக்கு மொழியும் கூட ஒரு தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார். ஆம்! மலையாள மொழியில் நான்காம் வகுப்பு வரை படித்த, கேரளாவைச் சேர்ந்த மாணவி புஷ்ரா பானு, அதன் பின்னர் தமிழ் மொழியினைக் கற்று கடந்த +2 தேர்வில் 994 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். அவரது இந்தச் சாதனையை எட்டுவதற்கு அவர் கடந்து வந்த பாதை கடினமானதாகும்.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் – சாராம்மா தம்பதியின் மகள் புஷ்ரா பானு. இவர் கேரளத்தில் 4-ம் வகுப்புவரை படித்தார். குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் ரஹ்மத்துல்லாஹ் குடும்பத்தினர் பிழைப்புத் தேடி பனியன் உற்பத்திக்குப் பெயர் பெற்ற திருப்பூர் வந்தனர். தாய்மொழி மலையாளம் என்பதாலும் தொடர்ந்து கல்வியைத் தொடரும் அளவுக்குக் குடும்ப வருமானம் இல்லாமையினாலும் புஷ்ரா பானு திருப்பூரிலுள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

இச்செய்தியறிந்த, குழந்தைத் தொழிலாளர்களை வேலை வாங்குவதற்கு எதிராகச் செயல்படும் கோவை ‘கிளாஸ்’ அமைப்பினர் அவரை மீட்டு, ஆரம்பத்தில் தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தனர். தமிழ் மொழியினைக் கற்றுக்கொண்டபின், அரசுப் பள்ளியில் சேர்ந்து 12-ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியிலேயே படித்தார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் அவர் 994 மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைத்துள்ளார். இதில் ஆச்சரியம் என்னெவெனில், மலையாள மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவி புஷ்ரா பானு, தமிழில் 176 மதிப்பெண்கள் பெற்றார் என்பதாகும். பாடவாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

பாடம்

மதிப்பெண்

தமிழ்

176

கணிதம்

179

கனினி அறிவியல்

169

இயற்பியல்

164

வேதியியல்

161

மொத்தம் 1200க்கு

994

அடுத்தவேளை உணவிற்கே வழியின்றி குடும்பம் இருந்த போதிலும் மாணவி புஷ்ராவிற்கு இறைவன் வழங்கிய அறிவு அளப்பரியது. தனக்கு இருக்கும் திறமையைப் பயன்படுத்தி முன்னேறத் துடிக்கும் மாணவி புஷ்ரா,

“நான் பொறியாளராக விரும்புகிறேன். ஆனால், குடும்ப வறுமை காரணமாகப் படிப்பைத் தொடர முடியாத நிலை உள்ளது. யாரேனும் உதவி செய்தால் படிப்பைத் தொடர முடியும்” என்று கூறுகிறார்.

ஒருவரின் மரணத்திற்குப் பின்னரும் அவரது நற்செயல்களுக்கான புத்தகம், அவர் செய்த “கல்விக்கான செலவுகளுக்காக” மறுமைநாள்வரை மூடப்படுவதில்லை. திறமையுள்ள மாணவி புஷ்ராவின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அவரிடமுள்ள திறமை மட்டுமே ஒரே மூலதனமாகும். அவரது உயர்கல்விக்குச் செய்யும் உதவி என்பது, “கல்விக்காகச் செய்யும் உபகாரம் மட்டுமன்றி, ஒரு தலைமுறையினையே அடிமட்டத்திலிருந்து மேலே கொண்டு வருதற்குச் செய்யும் அடித்தளமாகும்”.

பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பல பிள்ளைகள் படிப்பு ஏறாமல் பெற்றோர்களைக் கவலை கொள்ளச் செய்யும் பல நிகழ்வுகளை நாம் பரவலாகக் காணுகின்ற அதேவேளை, கால்வயிறு உணவு உண்டு, கல்வியில் சிறந்து விளங்கும் நம் சமுதாயச் சொந்தங்கள் கல்விக் கட்டணம் கட்டமுடியாத ஒரே காரணத்தால் உயர்கல்வி பயிலமுடியாத அவலநிலையையும் பெருவாரியாகக் காண முடிகிறது.

நம் சமுதாயத்தில் மனத்தால் வள்ளல்களாகத் திகழும் நமது வாசகர்களின் வாரிவழங்கும் தன்மையைத் தகுதிக்குரிய உதவிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் முகமாக கடந்த ஆண்டு ஸாஜிதா பேகம் என்ற மாணவியின் உயர்கல்வி உதவிக்காக சத்தியமார்க்கம்.காம் விண்ணப்பித்தபோது, நமது வாசகர்களுள் சிலர் அளித்த உதவியால் அவர் தற்போது நுட்பவியல் இரண்டாம் ஆண்டுக் கல்லூரி மாணவியாகத் திகழ்கிறார்.

நன்றாகப் படிக்கக் கூடிய ஏழை மாணவ-மாணவியருக்கு, அவர்தம் கல்வி பொருளாதாரக் குறைவால் தடைபட்டுவிடக் கூடாது என்ற எண்ணம் கொண்ட நமது வாசகர்கள், தொடர்ந்து உதவுவார்கள் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு.

எனவே, கனிவுள்ளம் கொண்ட சகோதரர்கள் தங்களின் உதவிகளை மாணவி புஷ்ராவிற்கு வாரி வழங்கி, அவரது உயர்கல்விக்கான அடித்தளத்தைச் செம்மையாக அமைக்க முன்வருமாறு சத்தியமார்க்கம்.காம் அன்போடு கேட்டுக் கொள்கிறது.

இறுதியாகக் கிடைத்தத் தகவல்படி, திருப்பூர் ஏஞ்சல் பொறியியல் கல்லூரியில் சேர சகோதரி விண்ணப்பித்துள்ளார். ஓர் ஆண்டு கல்விக்கட்டணம் ரூ.65,000/- + இதரச் செலவுகள்.

அவருக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்ட சகோதரர்கள், சகோதரியின் கீழ்கண்ட வங்கிக் கணக்கு முகவரிக்கு உதவிகளை அனுப்பலாம். தனிப்பட்ட முறையில் சகோதரியின் குடும்ப நிலவரங்களையும் வீட்டு முகவரி மற்றும் தற்போதைய கல்வி விவரங்களை அறிய நாடும் சகோதரர்கள், சத்தியமார்க்கம்.காம் நிர்வாகியின் admin@satyamargam.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

வங்கிக் கணக்கு விபரம்:

Mrs. Sarama.T.M.

A/c No: 1510101018238

Swift Code: CNRBINBBATPN

Branch DP Code: 1510

Canara Bank, Thiruppur.

 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.