களாத் தொழுகை கூடுமா?

Share this:

பதில்:

ஒரே இறைவனையும் அவனது தூதர்களையும் ஏற்றுக் கொண்ட ஒரு முஸ்லிமின் மீது இஸ்லாம் சில கடமைகளை விதித்துள்ளது. இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள சில கடமைகளைப் பொதுவாக ஒரு சிலர் அவர் தம் இயலாமையின் காரணமாக நிறைவேற்ற முடியாது போயின், அவர்களுக்கு அவ்வாறு விட்டுப் போன கடமைகளைக் காலம் தாழ்த்தி நிறைவேற்றுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டு.

உதாரணத்திற்கு, மாதவிடாய் உண்டான பெண்களும், நெடிய பயணத்திலிருக்கும் பயணிகளும் நோன்பை விட்டுப் பின்னர் நிறைவேற்ற இஸ்லாத்தில் அனுமதி உண்டு. இதனை களா நோன்பு என்பர். ஆனால் ஐவேளைத் தொழுகை விஷயத்தில் களா (பிற்படுத்துதல்) தொழுகை என்றொரு தொழுகையே கிடையாது. அவ்வாறு உண்டெனில் அதனை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்கு காண்பித்துத் தந்திருக்க வேண்டும். அவர்கள் காட்டித் தராத எதுவுமே மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட மாட்டாது.

தொழுகையைப் பொறுத்தவரை,

நிச்சயமாகத் தொழுகை மூமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக அமைந்துள்ளது. (அல்குர்ஆன் 4:103)

என இறைவன் தெளிவாகக் குறிப்பிடுகின்றான்.

ஐவேளைத் தொழுகைகளின் ஆரம்ப நேரம் எது அதன் கடைசி நேரம் எது என்பதையெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக நமக்கு விளக்கி விட்டார்கள்.

களாவாக ஆக்கித் தொழுவதற்கு அனுமதி இருந்தால் அதை அல்லாஹ்வோ அவனது தூதரோ தான் சொல்ல முடியும். பிரயாணத்திலிருப்போரும் வேறு சில காரணங்களுக்குரியவர்களும் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழாது வேறு நேரங்களில் தொழவும், தொழுகை ரக்அத் எண்ணிக்கைகளைக் குறைத்துத் தொழவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவும் பிரயாணத்தின் போது ஏற்படும் இடைஞ்சல்களைக் கணக்கில் எடுத்து மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளனர். தற்போதைய வளர்ச்சியடைந்த கால கட்டத்தில் எவ்வளவு தூரப் பிரயாணமாக இருந்தாலும் சவுகரியக் குறைவு ஏற்படாத பொழுது இந்த அனுமதியை நாம் உபயோகிப்பது சிறந்ததா என்பதை அவரவர் மனதில் கேட்டுப் பின்பற்றுவது சிறந்தது.

ஏனெனில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மிகவும் இக்கட்டான போர் முனைகளில் கூட தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழாமல் பிற்படுத்தியது கிடையாது. ஒரே ஒரு முறை அகழிப் போரின் போது மட்டுமே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுகையைப் பிற்படுத்தித் தொழுதுள்ளார்கள்.

அகழ் யுத்தத்தின் போது சூரியன் மறையும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அஸர் தொழ முடியவில்லை. சூரியன் மறைந்த பின்பு அஸரைத் தொழுது அதன் பின்னர் மஃரிப் தொழுதார்கள் என்று அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இதுகூட அச்சநிலையின் போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்ட நிலைபாடாகும். இந்த சம்பவத்தை வைத்து நாம் களா கூடும் என வாதிட்டாலும் அது அச்ச நிலைக்கு மட்டுமே பொருத்தமாகும். எனினும் இச்சம்பவத்துக்குப் பின் அச்ச நிலையின் போது கூட தொழுகையை அதற்குரிய நேரத்தில் நடந்து கோண்டோ இருக்கும் நிலையிலேயோ கண்டிப்பாகத் தொழுதே ஆக வேண்டும் என  இறைவன் உறுதிபடத் தெரிவித்து விட்டான்.

அகழிப் போரின்போது லுஹர், அஸர் ஆகிய தொழுகை போரில் ஈடுபட்டதனால் தவறிவிட்டது. நபி(ஸல்) அவர்கள், சூரியன் மறைந்த பிறகு பிலாலை அழைத்து லுஹருக்கு இகாமத் சொல்லச் செய்து லுஹர் தொழுகையை நிறுத்தி நிதானமாக அதற்குரிய நேரத்தில் தொழுவதுபோல் தொழுதார்கள். பின்பு அஸர் தொழுகைக்கு இகாமத் சொல்லச் செய்து அஸரை, அதன் நேரத்தில் தொழுவது போல் அழகிய முறையில் நிறைவேற்றினார்கள். பின்பு மஃரிப் தொழுகையையும் இதே போல் தொழ வைத்தார்கள். இது நீங்கள் பயந்தால் நடந்து கொண்டோ வாகனத்திலோ தொழுது கொள்ளுங்கள் (அல்குர்ஆன் 2:239) என்ற வசனம் இறங்குவதற்கு முன்னர் நடந்த நிகழ்ச்சியாகும் என அபூஸயீத் (ரலி) அறிவிக்கிறார்கள். (சுருக்கம் : நஸயீ, அஹ்மத், முஅத்தா ஆகிய நூல்களில் இந்த விபரம் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.)

போர்க்காலம் போன்ற அச்சம் தரும் சூழல் என்றாலும் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுதாக வேண்டும் என்ற இறைவனின் கட்டளை வருவதற்கு முன் இது நடந்துள்ளதால் அந்த சலுகை இந்த வசனத்தின் மூலம் ரத்துச் செய்யப்பட்டு விட்டது என்பது தெளிவு.

தொழுகையை அதற்குரிய நேரத்தை விட்டு மற்ற நேரத்தில் தொழ உறங்கியவருக்கும், மறந்தவருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

"உங்களில் எவரேனும் தொழுகையை விட்டும் உறங்கி விட்டால் அல்லது மறந்து விட்டால் நினைவு வந்ததும் தொழ வேண்டும்" என்பது நபிமொழி. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

இங்கு மறந்து தூங்கியவருக்கு மட்டுமே இந்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை எடுத்துக் கொண்டு நாம் வேண்டுமென்றே படுத்துத் தூங்குவது கூடாது.

தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது அவசியமான ஒன்று. அதைத் தவற விடுபவன் மாபெரும் குற்றவாளியாகின்றான். கடும் தண்டனைக்கு ஆளாகின்றான். ஆயினும் மறதி, உறக்கம் போன்ற மனித சக்திக்கு அப்பாற்பட்ட காரணங்களினால் அதற்குரிய நேரத்தில் தொழத் தவறியவன் விழிப்பு ஏற்பட்டதும் தொழுதுவிடும் போது குற்றமற்றவனாகி விடுகின்றான். மறதி, உறக்கம் போன்ற நியாயமான காரணங்கள் இவனுக்கு இருப்பதால் இவனைக் குற்றவாளியாக்க முடியாது.

ஆனால் வேண்டுமென்றே தொழுகையை விட்டவன் மாபெரும் குற்றவாளியாகி நிற்கின்றான். இறைவனின் கட்டளையை அலட்சியப்படுத்தி இருக்கின்றான். இவன் குற்றவாளியாவதிலிருந்து சலுகை பெறுவதற்குரிய நியாயமான காரணங்கள் எதுவுமில்லை. மறதியாக விட்டவன் குற்றவாளியாக ஆகாதது போல் வேண்டுமென்று விட்டவனும் குற்றாவாளியாக மாட்டான் என்று நாம் யாரும் கூற மாட்டோம்.

எனவே இஸ்லாத்தில் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழாமல் பிற்படுத்தி(களாவாக்கி)த் தொழுவது கூடாது என்பதை விளங்கலாம்.

இறைவன் மிக்க அறிந்தவன்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.