“கில்லட்டின்” கருவியால் அறுக்கப்பட்டப் பிராணிகளின் இறைச்சியை உண்ணலாமா?

Share this:

பதில்:

அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு, எந்த ஆயுதம் இரத்தத்தை ஓட்டச் செய்யுமோ அதன் மூலம் அறுக்கப்பட்டதைப் புசியுங்கள். பல்லாகவோ, நகமாகவோ அந்த ஆயுதம் இருக்கக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.  அறிவிப்பவர் : ராஃபிவு பின் கதீஜ் (ரலி), நூல் : புகாரி 2488, 2507, 3075, 5498, 5503, 5506, 5509, 5543, 5544

பல், நகம் தவிர கருவி எதுவானாலும் பிரச்சினையில்லை. இரத்தத்தை ஓட்டச் செய்யவேண்டும் என்பதும், அறுக்கப்படும் பிராணியைச் சித்திரவதை செய்யாமல் அறுக்க வேண்டும் என்பதும் தான் நிபந்தனையாகும்.

அதேபோல அறுபடும் பிராணியின் இரத்தம் முழுமையாக அதன் உடலில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முக்கியமான நிபந்தனை தலை துண்டாகாமல் இருக்க வேண்டும் என்பதும் ஆகும். எல்லா உயிரினங்களின் மீதும் நல்ல முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். அதற்கான ஆதாரமாக பின்வரும் ஹதீஸைக்காணலாம்.

…. நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! (விரைவாக) அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹிதாத் இப்னு அவ்ஸ்(ரலி) ஆதார நூற்கள்: முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா (3170))

மேலும்,

ஆயிஷா கத்தியைக் கொண்டு வா! அதைக் கல்லில் கூர்மையாக்கு! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூற்கள்: முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

அறுக்கும் பொழுது பிஸ்மில்லாஹ் கூறப்படுவதும், இரத்தம் ஓட்டப்படுவதும் தான் நிபந்தனை. இந்த இரண்டு நிபந்தனைகளும் பேணப்பட்டு பல், நகம் தவிர வேறு எவ்விதமான கருவிகளை உபயோகித்து அறுக்கப்படும் பிராணிகளையும் உண்ணலாம்.

அம்பு எய்து வேட்டையாடும் போது அம்பு பிராணியைக் கொன்றால் அந்த அம்பு பிஸ்மில்லாஹ் கூறி விடப்பட்டிருக்குமானால் அதை உண்ணலாம் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நூல் : புகாரி 5478, 5488, 5496

ஆனால் கில்லட்டின் (படம் காண்க) கருவி மூலம் வெட்டப் படும் பிராணியின் தலை ஒரே வெட்டில் துண்டாக்கப்படும் என்பதாலும், இரத்தம் முழுமையாக ஓட்டப்படுவதற்கான சாத்தியக்கூறு இல்லாத காரணத்தாலும் இது போன்ற கருவிகளால் வெட்டப்படும் பிராணிகளைச் சாப்பிடுதல் கூடாது.

தற்போதைய அறிவியல் வளர்ச்சியினால், ஹலாலான முறையிலும் மேற்கண்ட கருவிகள் மூலம் பிராணிகளை அறுப்பதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு, சில வழிமுறைகள் பேணப் படுகின்றன. இவ்வகை வழிமுறைகள் பேணப் படுவது உறுதியாகத் தெரியும் பட்சத்தில் மட்டுமே இவ்வகைக் கருவிகளால் அறுக்கப்பட்ட கால்நடைகளின் இறைச்சியை உண்ணலாம்.

இறைவன் மிக்க அறிந்தவன்.

மேலதிக விபரங்கள் வேண்டுவோருக்காக, மருத்துவரும் பிரபல இஸ்லாமியப் பிரச்சாரகருமான டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் விளக்கத்தை இங்கே தருகிறோம். 

"ஸபிஹா" என்றழைக்கப்படும் – இஸ்லாமியர்கள் கால்நடைகளை அறுக்கும் விதம் குறித்து மக்களில் பெரும்பாலோரிடமிருந்து விமரிசனங்கள் வருகின்றன. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் முன் – மேற்படி பொருள் குறித்து – ஒரு சீக்கியருக்கும் – ஒரு இஸ்லாமியருக்கும் நடந்த ஒரு நகைச்சுவையான கற்பனை உரையாடலை கீழே காணலாம்.

சீக்கியர் ஒருவர் இஸ்லாமியரைப் பார்த்து கேட்டார் – நாங்கள் ஆடு மாடுகளை அறுக்கும் போது – அதன் பின்புற மண்டையில் ஒரே போடு போட்டு – கொன்று விடுகிறோம். அதுபோல செய்யாமல் – நீங்கள் ஏன் அவைகளின் கழுத்தை அறுத்து – சித்ரவதை செய்து கொல்கிறீர்கள்?.

மேற்படி கேள்வி கேட்கப்பட்ட இஸ்லாமியர் சொன்னார்: கால்நடைகளை பின்புறம் இருந்து தாக்கிக் கொல்வதற்கு உங்களைப் போல நாங்கள் ஒன்றும் கோழைகளல்லர். நாங்கள் தைரியசாலிகள். அதனால்தான் முன்பக்கமாக அதன் கழுத்தை அறுத்து கொல்கிறோம் என்று.

மேற்படி சம்பவம் வேடிக்கையாக இருந்தாலும் – "ஷாபிஹா" என்றழைக்கப்படும் – இஸ்லாமியர்கள் கால்நடைகளை அறுக்கும் விதம்தான் மனிதத்தன்மை உள்ளது மற்றும் அறிவியல் ரீதியாகச் சிறந்த முறை என்பதை கீழ்க்காணும் விபரங்கள் நமக்கு தெரிவிக்கும்.

இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும் விதம்.

அரபிமொழியில் "ஸக்காத்" என்றால் "தூய்மை" என்ற பொருள். மேற்படி சொல்லிலிருந்து "ஸக்கய்தும்" (தூய்மைப்படுத்துதல்) என்ற வினைச்சொல் பெறப்பட்டது. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுப்பதற்கு கீழக்காணும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

A. கால்நடைகளை அறுக்க பயன்படும் கத்தி அல்லது வாள் மிகக் கூர்மையானதாக இருக்க வேண்டும். கால்நடைகள் மிகக் கூர்மையான கத்தி அல்லது வாளால் அறுக்கப்பட வேண்டும். அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது மிகக் குறைவாகவே வலியை உணருமாறு – மிக வேகமாக அறுக்கப்பட வேண்டும்.

B. "ஸபிஹா" என்றால் அரபிமொழியில் அறுத்தல் என்று பொருள்படும். மேற்படி இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது கழுத்தில் உள்ள மூச்சுக் குழாயும் இரத்தக்குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு கால்நடைகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

C. அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும். இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்வதன் நோக்கம், அறுக்கப்பட்ட கால்நடைகளின் இரத்தம் இரத்தக் குழாய்களில் தங்கி கிருமிகள் உருவாகாமல் இருக்க வேண்டியாகும். கால்நடைகளை அறுக்கும் போது தண்டுவடம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். தண்டுவடம் துண்டிக்கப்படுவதால் இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு இதயம் திடீரென நின்று போகக் கூடிய நிலை உண்டாகலாம். இதனால் இதயத்தில் உள்ள இரத்தம் இரத்த நாளங்களிலேயே தங்கிவிடக் கூடும்.

D. இறைச்சியில் நோய்க்கிருமிகள் உருவாகக் காரணமாக அமைவது ஓட்டப்படாத இரத்தமே. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது, கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்யப்படுவதால் நோய்க்கிருமிகள் உருவாவதற்கான சாத்தியக்கூறு பெருமளவு குறைக்கப்படுகிறது.

E. கால்நடைகளின் கழுத்திலிருக்கும் இரத்ததக்குழாயும், சுவாசக்குழாயும் மிக வேகமாக அறுக்கப்படுவதால், இரத்தம் அனிச்சைச் செயலாக அப்பகுதிக்கு விரைவாக அனுப்பப்படுகிறது. இதனால் வலியை மூளைக்குக் கடத்திச் செல்லக்கூடிய நரம்புமண்டலம் இச்செயலுக்கான கட்டளைப்  பொதியைச் சுமப்பதால் அறுக்கப்படும் கால்நடைகள் வலியை உணர்வதில்லை.

F. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது, கால்நடைகள் வலியை உணர்வதில்லை. இரத்தம் உடலிலிருந்து வெளியேறுவதால், உடலில் உள்ள சதைப்பாகங்கள் இரத்த இழப்பால் சுருங்கி விரிவதால் ஏற்படும் மாற்றத்தால் தான் அறுக்கப்பட்ட மிருகங்கள்  துள்ளுவதாகவும், துடிப்பதாகவும் நமக்குத் தெரிகின்றதே தவிர வலியால் அல்ல.

அல்லாஹ் மிக அறிந்தவன்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.