ஆண்கள் வெள்ளி ஆபரணங்கள் அணியலாமா?

ஐயம்:-

ஆண்கள் வெள்ளி மாலைகள் கை செயின்கள் அணியலாமா? தங்கம் தவிர்ந்த வேறு ஆபாரனங்கள் அணிவது கூடுமா? கூடுமாயின் காடையர்களைப்போல் கனமானதை அணியலாமா? தயவு செய்து நபிவழியில் தெளிவான விளக்கம் தரவும்

– சகோதரர் Nasar

தெளிவு:-

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

நாகரீக முன்னேற்றம் எனச் சொல்லி இன்று பெண்களைப்போல் ஆண்களும் கழுத்தில், கையில் சங்கிலி – செயின், விரல்களில் மோதிரங்கள், காதில் கடுக்கன் அல்லது வளையம், மூக்கிலும் சிறு வளையம், போன்ற ஆபரணங்களை அணிகின்றனர். தற்காலப் பெண்கள் அணியும் கொலுசுபோல் அல்லாமல், முற்கால தண்டை, காப்பு, சிலம்பு போன்ற காலணி ஆபரணங்களையும் ஆண்களில் சிலர் அணிகின்றனர். தங்கத்திலும் வெள்ளியிலும் செய்யப்பட்டு அணிந்து கொள்ளும் ஆபரணங்களின் வடிவம் வித்தியாசமிருக்குமே தவிர பெண்களைப் போலவே சில ஆண்களும் தங்கம், வெள்ளி ஆபரணங்களை அணிந்து காட்சி அளிப்பதை நேரடியாகப் பார்க்கிறோம்.

இவ்வாறு பிறமதத்தவருள் சிலர் ஆபரணங்களை அணிந்து காட்சியளிப்பதைப் பார்த்து, “கண்டதே காட்சி கொண்டதே கோலம்” என அவற்றை அப்படியே பின்பற்றாமல் ஆண்கள் ஆபரணங்கள் அணிவது குறித்து இஸ்லாம் கூறியுள்ளது என்ன? என்று தேட நீங்கள் முயன்றிருப்பது உண்மையான ஒரு முஸ்லிமின் பண்பினை வெளிப்படுத்திள்ளது. ஜஸாக்கல்லாஹு கைரன்.

தங்கம் ஆண்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளதால், ஆண்கள் வெள்ளி ஆபரணங்களை அணியலாமா என்பதற்கான நபிவழி ஆதாரங்களைப் பார்ப்போம்,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பைஸாந்திய) ரோமர்களுக்குக் கடிதம் எழுத விரும்பியபோது மக்கள், “முத்திரையிடப்படாத எந்தக் கடிதத்தையும் ரோமர்கள் வாசிக்கமாட்டார்கள்” என்று கூறினர். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து அதில், ‘முஹம்மதுர் ரஸுலல்லாஹ்’ எனும் இலச்சினையைப் பொறித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையில் (ஒளிர்ந்த) அந்த மோதிரத்தின் வெண்மையை இப்போதும் நான் (மனக் கண்ணால்) பார்கிறேன். – அறிவிப்பவர் அனஸ் பின் மாலிக் (ரலி) (நூல்கள் -புகாரி 65, 2938, 5872, 5875, 7162, முஸ்லிம் 4247-4249, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).

அயல் நாடுகளின் மன்னர்களுடன் கடிதத் தொடர்பு கொள்வதற்கென முத்திரை மோதிரம் அவசியம் எனக் கருதி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு வெள்ளி மோதிரம் தயார்செய்து அதில் ‘முஹம்மது, ரஸுல், அல்லாஹ்’ என மூன்று வரிகளைக் கொண்ட எழுத்துகளையும் இலைச்சினையாகப் பொறித்து, அந்த முத்திரையைப் பதித்த கடிதங்களையே அயல் நாட்டு மன்னர்களுக்கு அனுப்பிச் செய்திகளைப் பறிமாறிக்கொண்டார்கள் என அறியமுடிகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களின் ஆட்சித் தலைவராகவும் முஸ்லிம்களின் ஆன்மீகத் தலைவராகவும் விளங்கினார்கள். அதனால் முத்திரை மோதிரம் அவர்களுக்கு அவசியமாக இருந்தது. நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் அபூபக்ரு (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய மூன்று ஆட்சித் தலைவர்களிடமும் மோதிரம் கைமாறியுள்ளது. பின்னர் அந்த மோதிரம் கிணற்றில் விழுந்து தொலைந்து போனது.   

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அது (அவர்களின் வாழ்நாளில்) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, அபூபக்ரு (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உமர்(ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உஸ்மான்(ரலி) அவர்களின் கையில் இருந்தது. இறுதியில் அது ‘அரீஸ்’ எனும் கிணற்றில் (தவறி) விழுந்துவிட்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த இலச்சினை ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (இறைத்தூதர் முஹம்மது) என்றிருந்தது. – அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) (நூல்கள் – புகாரி 5873, முஸ்லிம் 4245, அபூதாவூத், அஹ்மத்).

ஆண்கள் வெள்ளி மோதிரம் அணிய நபிவழி அனுமதி

நபி(ஸல்) அவர்கள் மோதிரம் ஒன்றை தயார் செய்து, ‘நாம் மோதிரம் ஒன்றை தயார் செய்துள்ளோம். அதில் (‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’) இலச்சினை ஒன்றைப் பொறித்துள்ளோம். எனவே, அதைப் போன்று வேறெவரும் இலச்சினை பொறிக்க வேண்டாம்’ என்றார்கள். நபி(ஸல்) அவர்களின் சுண்டுவிரலில் அது மின்னியதை இப்போதும் நான் (என் மனத்திரையில்) பார்க்கிறேன். – அறிவிப்பவர் அனஸ் பின் மாலிக் (ரலி) (நூல்கள் – புகாரி 5874, 5877, முஸ்லிம் 4246, திர்மிதீ).

ஆண்கள் தங்கம் தவிர்த்து வேறு ஆபரணங்கள் அணியலாமா? என்கிற கேள்விக்கு நபிவழியில் தெளிவான விளக்கம் மேற்கண்ட அறிவிப்புகளில் உள்ளன.

நபி (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தாயாரித்து அதில், ‘முஹம்மது ரஸுலல்லாஹ் – அல்லாஹ்வின் தூதர் முஹம்மது’ என்ற தமக்கு அல்லாஹ் வழங்கிய பதவியையும் இலச்சினையாக எழுதிக்கொண்டார்கள். ஆட்சித் தலைவர் என்கிற அடிப்படையில் அது அவர்களுக்கு அவசியமாகவும் இருந்தது. அந்த இலச்சினையைப் பொறித்துக் கொள்ளும் தகுதி வேறு எவருக்குமில்லை என்பதால் “இந்த இலச்சினையை வேறெவரும் எழுதிக்கொள்ள வேண்டாம்” என்றும் தடை விதித்துள்ளார்கள். எனவே, வெள்ளி மோதிரம் அணியலாம். – விரும்பினால் இஸ்லாமியப் பார்வையில் அனுமதிக்கப்பட்ட வேறு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரத்தை ஆண்கள் அணிவது கூடும் என விளங்குகிறோம்.

வசிக்கும் நாடு எதுவென்றாலும் முஸ்லிம்களுக்கென்று கண்ணியமான புறத் தோற்றமுள்ளது. ஸ்டைலுக்காகக் கையில் கயிறு கட்டிக்கொள்வது, காப்புகளை அணிவது, சங்கிலிகள் – செயின்கள் போன்ற வெள்ளி ஆபரணங்கள் மற்றும் பாசி, பவளம் போன்ற மாலைகளாக இருந்தாலும் அவற்றை ஆண்கள் அணிவதைத் தவிர்த்திட வேண்டும். பிறர் அணிந்துள்ளனர் அதுபோல் நாமும் அணியலாமே என்ற முன்னுதாரணத்தைத் தவிர, இஸ்லாமிய முன்னுதாரணம் அவற்றுக்கு இல்லை.

வெள்ளி மோதிரம் அணிபவர்களிலும் இது ‘ராசிக்கல்’ என்று சில கற்களை மோதிரத்தில் பதித்துக்கொண்டு இன்னின்ற கற்களுக்கு இன்னின்ன ராசி உண்டு என்றும் தவறான நம்பிக்கையில் சிலர் விளம்பரப்படுத்துவதையும் காண்கிறோம். இதற்கும் இஸ்லாத்திற்கும் துளியும் தொடர்பில்லை என்பதையும் கவனத்தில் கொள்க!

(இறைவன் மிக்க அறிந்தவன்).

குறிப்பு: ‘முஹம்மது ரஸுலல்லாஹ்’ என்ற இலச்சினை பொறிக்கப்பட்ட நபி (ஸல்) அவர்களின் வெள்ளி மோதிரம் அவர்களின் மறைவுக்குப்பின் மூன்று கலீஃபாக்களிடம் கைமாறி இருந்தாலும் அந்த மோதிரத்தை முத்திரை மோதிரமாக கலீஃபாக்கள் பயன்படுத்தியதில்லை. “வேறெவரும் இந்த இலச்சினையைப் பொறிக்க வேண்டாம்” என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளை, முதல் மூன்று கலிஃபாக்களையும் கட்டுப்படுத்தும் என்பதால் ஆட்சியாளர்கள் என்ற ஆங்கீகாரத்தில் நபி (ஸல்) அவர்களின் முத்திரை மோதிரம் ஒருவர் மாற்றி ஒருவர் என மூவரிடமும் பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது).