பயங்கரங்களின் நிழலில் …

Share this:

குஜராத் இனப்படுகொலையை நிகழ்த்திய நரேந்திர மோடியின் அடியாட்கள் 116 பேருக்கு கடுமையான தண்டனைகளை நீதிமன்றம் அளித்துள்ளது. இந்தப் படுகொலைகளை நடத்தியவர்களில் ஒருவரான மாயாபேன் கோட்னானிக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் நரேந்திர மோடி. பஜ்ரங் தளத்தின் பாபு பஜ்ரங்கி ஓர் அமைச்சருக்கு இணையான அந்தஸ்துடன்தான் இந்தத் தீர்ப்பு வரும்வரை வலம் வந்தார். குஜராத் 2002 இனப் படுகொலை பற்றிய தெகல்காவின் புலனாய்வு வெளிவந்தபோது அதற்கு நான் எழுதிய முன்னுரையை இங்கே பகிர்கிறேன்:

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான நாட்களாக நினைவு கொள்ள வேண்டியவை – அக்டோபர் 25,26, 2007. இந்த இரு நாட்களிளும் பல செய்தித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்ட காட்சிகள், ஒரு நாட்டையே கொஞ்சம் கொஞ்சமாக மவுனத்தில் உறையச் செய்தது. 2000 முஸ்லிம்களைக் கொன்று குவித்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்தியவர்கள், முதல் முறையாக காமிராக்கள் முன் தோன்றி பெருமிதம் பொங்க – தங்களின் செயல்களை துல்லியமாக விவரித்தார்கள். அரசு அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், பா.ஜ.க தலைவர்கள், பஜ்ரங் தள் தொண்டர்கள் எனப் பலரும் கொலைகாரர்களில் அடக்கம்.

இந்தக் குற்றங்களின் பாதுகாவலர்களான தில்லி பா.ஜ.க. தலைவர்கள் கமுக்கமாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், காங்கிரஸ் ஏன் அமைதி காக்கிறது? இந்தக் கொலைக்காரர்களில் பலர் தற்பொழுது காங்கிரஸ் கட்சியின் பெரும் பொறுப்புகளில் உள்ளதாலா? அல்லது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர், கோத்ரா இனப்படுகொலையிலேயே பங்கு கொண்டதாலா? இல்லை எனில் இவர்களின் மவுனம், துல்லியமான சமிக்ஞைகளை கொண்டிருக்கிறதா?

தெகல்காவின் அரிய புலனாய்வு பற்றி நாடாளுமன்றத்தில் பேசியவர்கள் இடதுசாரிகள், லாலு பிரசாத், மாயாவதி ஆகியோர் மட்டுமே. மனித உரிமை ஆர்வலர்கள், அறிவுஜீவிகள் என இந்தச் சமூகத்தின் ஒரு சிறிய பகுதி பேசியிருக்காவிட்டால், மொத்தத்தில் அந்தப் புலனாய்வுகள் கரைந்து போயிருக்கும் ஊடகங்கள்கூட மேலோட்டமாகப் பேசிவிட்டு, வேறு கதைப்புகள் நோக்கிச் சென்று விட்டன. அதிலும் பலர் தொடர்ந்து தெகல்காவின் இந்த பாணி இதழியலை வசை பாடத் தவறவில்லை. ஊடகங்களுக்கு இன்று அரசு மற்றும் இந்திய – வெளிநாட்டு முதலாளிகளின் தயவின்றி வாழத் தெரியாது. தனித்துவமான ஒரு வாழ்க்கையைத் தீர்மானித்த தெகல்காவால் எந்தத் தயக்கமுமின்றி – அதிகாரங்களுக்கு எதிராகத் துணிவுடன் உரக்கப் பேச முடிகிறது.

ஆயுத போர ஊழல், ஷகிரா ஷேக், ஜெசிகா லால், சஞ்சய் தத், மோடியின் போலி என்கவுன்டர்கள் என 25-க்கும் மேற்பட்ட மறைக்கபட்ட உண்மைகளை வெளிக்கொணர முடிந்தது. இதுபோன்ற இதழியலாளர்கள் இல்லையென்றால், மெல்ல மெல்ல ஒரு நிலப்பரப்பின் மக்கள் சமூகம் அடிமைகளாக உருமாற்றம பெரும் என்பதில் சந்தேகம் இல்லை. மறுபுறம் நீதிக்காகக் குரல் கொடுப்பவர்களை, போராடுபவர்களை இந்த நாடு அடையாளம் காண மறுக்கிறது. கிரிகெட் விளையாடும் சச்சின் தேண்டுல்கர் உலகப் பிரபலம். ஆனால், தன் உயிரைப் பணயம் வைத்து குஜராத் இனப்படுகொலை தொடர்பான வழக்குகளை 5 ஆண்டுகளாக நடத்தும் தீஸ்தா செதல்வாத்தை, ஏன் ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை? ஒரு மாபெரும் நாகரீகம், வளரும் பொருளாதாரமாக, மட்டுமே சுருங்கிப்போனது.

தெகல்கா புலனாய்வு உண்மைகள் வெளிவந்ததும் உலகம் முழுவதிலிருந்தும் குடிமைச் சமூகத்தின் குரல்கள் உருப்பெறத் தொடங்கின. உயிரைப் பணயம் வைத்து ஆறு மாதங்கள் புலனாய்வை மேற்கொண்ட ஆஷிஷ் கேத்தன் மற்றும் தெகல்கா குடும்பத்தினருக்கு – வழக்கறிஞர்கள், சட்டநிபுணர்கள், எழுத்தாளர்கள், போராளிகள் எனப் பெருங்கூட்டம் பாராட்டுகளை தெரிவித்தார்கள். நம் காலத்தின் உண்மையான நாயகர்களாக இவர்கள் திகழ்கிறார்கள். ஆம், அதிகாரத்துக்கு எதிராக கலகம் செய்யும் வீரர்கள்.

வேறு வகையில் பார்த்தால், இது யார் செய்திருக்க வேண்டிய வேலை? 2002 பிப்ரவரி இறுதியில் இனப்படுகொலை நடத்தப்பட்டது. அடுத்த ஆறுமாத காலத்தில் விசாரணைகள் நிகழ்ந்து, மறு விசாரணையும் நடந்து நவம்பர் 2003 வாகிலாவது அரசாங்கம் தனது தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டும். இந்த தெகல்காவின் வாக்குமூலங்களை குஜராத் காவல்துறை அல்லவா பெற்றிருக்க வேண்டும்? இதுபோன்ற இனப்படுகொலைகளைச் செய்து வரும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மறுபுறம் ‘பண்பாட்டுக் காவலர்”களைப்போல வலம் வருகின்றன. குருதி தோய்ந்த கரங்களால் கடவுளைத் தொழுதல், தேர்தலில் முழக்கமிடுதல் என ஒப்பனைகளை கச்சிதமாய் தொடர்கின்றன.

இவ்வளவு கொடூரங்கள் ஆதாரங்களுடன் வெளிவந்த பிறகும், மீண்டும் நரேந்திர மோடி வெற்றி வாகை சூடி பதவியில் அமர்ந்திருக்கிறார். இதில் வியப்படைவதற்கு ஏதும் இருக்கிறதா? எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. மதவாதத்தைக் கொள்கையாகக் கொண்டவர்கள், குஜராத் சமூகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக தங்கள் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அதற்கான சூழலை உருவாக்கி வருகிறார்கள். பால்வாடிகள், பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள், மருத்துவமனைகள் என அவர்களின் கரங்கள் நுழையாத இடமேயில்லை. 1985 முதல் நரோடாவிலும் கேதாவிலும் ஆயுதப்பயிற்சியளிக்கும் ‘ஷாகா’க்களை ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து நடத்தி வருகிறது. லத்தி கம்புகளை எறிந்துவிட்டு அவர்கள் தானியங்கி துப்பாக்கிகளை கையில் பிடித்து, இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன.

தொடர்ந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த வன்ம முகாம்களில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள், அடுத்த கட்டமாக இந்த முகாமில் பங்கு கொண்டவர்கள், குஜராத் அரசின் பல்வேறு துறைகளிலும் பணியில் அமர்த்தப்பட்டாட்கள். தெகல்கா வாக்குமூலங்களில் வரும் அனைவரும் இந்த வதை முகாம்களின் அங்கத்தினரே. ஆயுதங்களை வழங்கும் காவல் துறையினர், கொலைக்காரர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அரசு வழக்கறிஞர் எனப் பல வேடங்களை அவர்கள் ஏற்றிருக்கிறார்கள். இந்த மரண வியாபாரிகளுக்கு இந்திய முதலாளிகள் பக்கபலமாய் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அம்பானி, ரத்தன் டாடா என இப்பெரும்படை மோடியுடன் அளவளாவியதை நாம் தொலைக்காட்சிகளில் கண்டோம். ஆர்.எஸ்.எஸ்.க்குப் பெரும் நிதி வழங்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் இந்திய முதலாளிகளுக்கும் தெகல்கா இந்த வாக்குமூலங்களின் தனியான திரையிடலை ஏற்பாடு செய்யலாம்.

சமூகத்தில் விதைக்கபட்டுள்ள இந்த நஞ்சை எப்படி அப்புறப்படுத்துவது? தேர்தலுக்குத் தேர்தல் பா.ஜ.க.வை உக்கிரமாய் எதிர்த்து முழுக்கம் போட்டால், மதவாதம் அழிந்துவிடுமா? மதவாத எதிர்ப்புப் பிரச்சாரம் ஊடகப் புகைப்பட வெளியீட்டால் நிறைவுறுமா? மதச்சார்பின்மை பேசுகிறவர்கள் மதவாதத்தை மிகவும் தட்டையாகப் புரிந்து கொண்டுள்ளார்களா? மதவாதத்தை எதிர்ப்பதற்கான பண்பாட்டுத் தளத்திலான வேலைதிட்டம் ஏன் உருவாக்கப்படவில்லை? கே.என்.பனிக்கர், தீஸ்தா செதல்வாத், ராம் புனியானி போன்று மனத்தின் அடியாழத்தில் இருந்து தொடர்ந்து பேசுபவர்களின் வார்த்தைகளை நாம் வீணடித்து விட்டோமா? சாதி ஒழிப்பில் முனைப்பில்லாததால்தான், மத எதிர்ப்பைப் பெயரளவில் நிறுத்திக் கொள்கிறோமா? எத்திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் நாம்? மதவெறியின் ஆபத்தை உணராத, பெரியாரின் வழித்தோன்றல்களாகக் கருதிக்கொள்ளும் திராவிடக் கட்சிகள், கூச்ச நாச்சமின்றி மாறி மாறி பா.ஜ.கா.வைத் தோளில் சுமந்து தமிழகத்தில் வளர்ப்பது சரிதானா?

இந்த தெகல்கா ஆவணங்களின் வாயிலாக மதவெறியின் உண்மை முகத்தை நேரில் காணும் அரிய வாய்ப்பு மீண்டும் நமக்குக் கிடைத்திருக்கிறது. காலம் கனிந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரதிகள் கம்பீரமாய் வலம் வரும் போராசிரியர் பந்துக்வாலா, காவல் துறை அதிகாரி ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோர் நம்பிக்கையின் தூதுவர்களாகத் திகழ்கிறார்கள். இஹ்ஸான் ஜாப்ரியின் துணைவி ஜக்கியா ஜாப்ரி, தெஹல்காவின் இந்தப் பதிவுகளுடன் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கிறார். கோத்ராவில் இனப்படுகொலை செய்யபட்ட 2000 முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்; அகதிகளாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 2 லட்சம் முஸ்லிம்களின் வாழ்க்கை மீட்டெடுக்கப்பட வேண்டும்.

 

நன்றி : அ. முத்துக் கிருஷ்ணன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.