ஒருவர் தனது சித்தப்பா அல்லது பெரியப்பாவின் பேத்தியை மணம் முடிக்க இயலுமா?

பதில்: இரத்த சம்பந்தமான உறவுகளில் உடன் பிறந்த சகோதரியின் மகளும் உடன் பிறந்த சகோதரனின் மகளும் திருமணம் செய்யத் தடை செய்யப்பட்டவர்கள்.

மணம் முடிக்க விலக்கப்பட்டவர்களை அல்லாஹ் தன் திருமறையில் பட்டியலிட்டுள்ளான்.

“உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள் உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும் உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள். அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை மணமுடித்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் திருமணம் செய்யக்கூடாது. ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது. இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.. (அல்குர்ஆன் 4:23)

சித்தப்பா, பெரியப்பா மகளைத் திருமணம் செய்ய அனுமதியிருக்கிறது என்றால், சித்தப்பா, பெரியப்பா மகளின், மகளையும் திருமணம் செய்யலாம்!

மேலும் சித்தப்பா, பெரியப்பா மகன் வழிப் பிள்ளைகள், மகள் வழிப் பிள்ளைகள், மற்றும் சின்னம்மா, பெரியம்மா மகன் வழிப் பிள்ளைகள், மகள் வழிப் பிள்ளைகள்  திருமணம் செய்யத் தடை செய்யப்பட்டவர்கள் அல்லர்.

இறைவனே மிக்க அறிந்தவன்.

குறிப்பு: சத்தியமார்க்கம்.காம் தளக்குழுவினருக்கு ஒரு சகோதரர் எழுதிக் கேட்ட ஐயத்திற்கான பதில் இது. பிற சகோதரர்களுக்கும் இதே ஐயம் இருக்கலாம் என்பதால் பதிலை இங்கு வைத்திருக்கிறோம்.