இராக்கிலிருந்து பிரிட்டிஷ் இராணுவம் வெளியேற வேண்டும் – பிரிட்டிஷ் இராணுவ தளபதி

{mosimage}இலண்டன்: இராக்கிலிருந்து கூடிய விரைவில் பிரிட்டிஷ் இராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று பிரிட்டிஷ் இராணுவத் தளபதி ஜெனரல் ரிச்சர்ட் டன்னாட் தெரிவித்துள்ளார்.

இராக் மீதான பேரழிவு ஆயுதம் என்பன போன்ற பொய்க்காரணங்களை உலக நாடுகளின் முன் வைத்து, ஐநா-வின் ஒப்புதல் இல்லாமலேயே தன்னிச்சையாக அமெரிக்காவும், பிரிட்டனும் இராக் மீது போர் தொடுத்தன.

தற்போது இந்தப் காரணங்கள் பொய் என்று உலகிற்கு முன் வெட்ட வெளிச்சமாகி விட்டதால், புஷ் மற்றும் பிளேய்ர் இவர்களின் மீதான நம்பகத்தன்மை மக்களின் மத்தியில் வெகுவாகக் குறைந்து வருகிறது.

இதனைத் தூக்கி நிறுத்த அவ்வப்போது இந்த இரு தலைவர்களும் ஏதாவது அரசியல்  பேச்சுகளைப் பேசி வந்தாலும், ஜெனரல் டன்னாட் போன்ற உயர் இராணுவத் தளபதியின் இப்படிப்பட்ட கூற்று இவர்களின் வாதத்தில் உள்ள பொய்யையே நிரூபிக்கின்றது.

இராக்கின் பஸ்ரா பகுதியில் நிலை கொண்டிருக்கும் பிரிட்டிஷ் படைகளினால் 'அமைதி' ஏற்படுவதினால் பெறப்படும் நற்பெயரை விட களங்கமே அதிகரித்திருப்பதாகவும், இதனால் உண்மையில் அங்கு அமைதிக்குப் பதில் வன்முறைகள் தான் அதிகமாக ஏற்படுவதாகவும் ஜெனரல் டன்னாட் கூறினார். மேலும் இராக்கில் இந்தப் போர் மூலம் ஜனநாயகத்தை ஏற்படுத்தப் போவதாகச் சொல்வது சிறுபிள்ளைத்தனம் என அவர் பிளேய்ரை மறைமுகமாகச் சாடினார்.

இந்தப் போர் முறையைப் பொறுத்தவரை முதல் கோணல் முற்றும் கோணல் என்று ஆகிவிட்டதாகவும், உள்ளூர் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது அமைதியை நிலைநாட்டுவதாகச் சொல்லும் எந்த இராணுவத்துக்கும் அவசியம் என்றும், இராக்கைப் பொறுத்தவரை பிரிட்டிஷ் படையினர் இந்த விஷயத்தில் சரியான திட்டமிடல் இல்லாமல் ஈடுபட்டதால் நோக்கம் வெற்றி பெறவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

எவ்வளவு அதிக காலம் பிரிட்டிஷ் துருப்புகள் இராக்கில் இருக்கின்றனவோ அவ்வளவுக்கு அது இராக்குக்கும் பிரிட்டிஷ் சமூகத்துக்கும் கேட்டையே விளைவிக்கும் என்றும் தெரிவித்தார்.

இது குறித்து பிளேய்ரின் நெருங்கிய வட்டாரங்கள் அதிர்ச்சி அடைந்திருக்க, பிளேய்ர் சங்கடத்தில் ஆழ்ந்துள்ள சூழ்நிலையில், ஜெனரல் டன்னாட், தான் கூறுவதையே கூறுவதாகவும், படிப்படியாக பிரிட்டிஷ் படையினரைத் திரும்பப் பெறுவதைத் தானும் ஆதரிப்பதாகவும் கூறினார்.

அமெரிக்க இராணுவப் படையினர் இராக்கில் நிகழ்த்திய கொடூரங்களைக் காணச் சகிக்காமல் இராக் இராணுவப் பணியிலிருந்து விலகுவதாக அறிவித்த பென் கிரிஃபின், அமெரிக்கப் படையினரின் ஒழுங்கீனத்தால் உள்ளூர் மக்களிடையே பிரிட்டிஷ் படையினரும் அவமானப்பட்டு நிற்பதாகவும் இது நிச்சயம் உற்சாகம் தரக் கூடியதன்று எனவும் தெரிவித்தார்.

இதற்கிடையே கார்டியன் எனும் பத்திரிக்கை நடத்திய ஆய்வில் பெரும்பான்மையான பிரிட்டிஷ் மக்கள் பிளேய்ரின் தவறான வெளியுறவுக் கொள்கையே பிரிட்டனைத் தீவிரவாதிகளின் இலக்காக்கி இருப்பதாகக் கருதுவது தெரியவந்தது.