திருமணமும், வலீமாவும் ஒரே நாளில் நிகழ்த்தலாமா?

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

திருமணமும், வலீமாவும் ஒரே நாளில் செய்யலாமா? இதற்கு விளக்கம் அளிக்கவும். – மின்னஞ்சல் வழியாக சகோதரர் ஃபையாஸ்

தெளிவு: வ அலைக்கும் ஸலாம் வரஹ்..

மார்க்கத்தில் தெளிவுபெற வேண்டும் என்ற நோக்கில் விளக்கம் கோரிய சகோதரர் ஃபையாஸ் அவர்களுக்கு வல்ல நாயன் மார்க்க ஞானத்தை அதிகப்படுத்தியருள்வானாக.

''திருமணம் எனது வழிமுறை'' என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் திருமண விருந்தும் அளித்திருக்கிறார்கள். திருமண விருந்து அளிக்கும்படி மற்றவர்களை ஏவியும் உள்ளார்கள்.  'வலீமாவுக்கு உங்களை அழைத்தால் செவி சாயுங்கள்' என்று நபியவர்கள் நவின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்).  எனவே ஒரு முஸ்லிம் தான் மணம் முடிக்கும் போது தமது வசதிக்கேற்ப வலீமா அளிக்கலாம்.

அன்னை ஸைனப் (ரலி), அன்னை ஸஃபிய்யா (ரலி) ஆகியோரை நபி (ஸல்) அவர்கள் மணமுடித்தபோது வலீமா அளித்திருக்கிறார்கள் என்ற செய்தி புகாரி, முஸ்லிம் நூற்களில் இடம் பெற்றுள்ளது. 

அப்துர்ரஹ்மானிப்னு அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் உடையில் ஒருநாள் (வாசனைத் திரவத்தின்) மஞ்சள் கறையைக் கண்ட நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதுபற்றி வினவியபோது, ஒரு பேரித்தங் கொட்டையளவு தங்கத்தை மஹர் கொடுத்து திருமணம் செய்துள்ளதாக பதில் கிடைத்தபோது 'பாரகல்லஹு லக' என்று வாழ்த்தியதுடன், ஓர் ஆட்டை அறுத்தாயினும் வலீமா கொடுப்பீராக என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். – ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

ஆகவே, மணவிருந்து அளிப்பது நபிவழி என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.  மண விருந்தென்பது திருமணம் நிகழ்ந்த பிறகு தான் கொடுக்க வேண்டுமே தவிர இன்ன நாளில் தான் வலீமா கொடுக்க வேண்டும் என்று நபிவழி் குறிப்புகளில் குறிப்பிடப்படவில்லை. நபி(ஸல்) அவர்கள் தங்களுக்குத் திருமணம் முடித்த மறுநாளில் வலீமா விருந்து அளித்துள்ளார்கள்.

விருந்து என்பது அனைவரும் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வு என்பதால் இன்றைய நடைமுறையில் இதற்கு பொதுவாக விடுமுறை நாட்களையே தேர்வு செய்து அன்று விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுக்கப் படுகிறது.

அதேபோல் வலீமா அவரவருடைய சக்திக்கேற்ப கொடுக்கலாம்.  ஆயினும்  இது வசதியிருப்பின் கொடுக்கப்பட வேண்டிய ஒன்றே தவிர வலீமா-திருமண விருந்தின்றியும் திருமணம் நிறைவேறி விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  வசதியில்லாதவர்கள் சிரமப்பட்டு கடன் வாங்கியாவது பெரிய அளவில் வலீமா கொடுக்க வேண்டியதில்லை. இதில் வீண் விரயமும் கூடாது. அலி ரளியல்லாஹு அன்ஹூ அவர்கள் வலீமா கொடுத்தபோது பேரித்தம்பழமும், தூய்மையான தண்ணீரும் வழங்கினார்கள் என்ற குறிப்புகளையும் ஹதீஸ்களில் காண முடிகிறது.

எனவே திருமணம் முடிந்த பின் வசதிக்கேற்ப, வசதிபடும் நாளில் வீண் விரயத்திற்கு வழிவகுக்காத எளிமையான வலீமா விருந்து அளிக்கலாம்.
(இறைவன் மிக்க அறிந்தவன்)