ஆகுமானவையும் விலக்கப்பட்டவையும்!

Share this:

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:

يَا أَيُّهَا النَّاسُ كُلُواْ مِمَّا فِي الأَرْضِ حَلاَلاً طَيِّباً وَلاَ تَتَّبِعُواْ خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ

மனிதர்களே! பூமியில் உள்ளவற்றிலிருந்து (உணவாக) அனுமதிக்கப்பட்ட (நல்ல)வற்றையே உண்ணுங்கள்; ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு  வெளிப்படையான விரோதியாவான். (அல்குர்ஆன் 002:168) 

உங்கள் மக்கட் செல்வமும் பொருட்செல்வமும் சோதனையாக இருக்கின்றன. அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன், 008:028. 064:015)

ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும் இரண்டுவிதமான வாழ்க்கைத் தெரிவுரிமைகள் (choices) இருக்கின்றன. ஒன்று ஆகுமான-ஹலாலான வரம்புக்குட்பட்டது; மற்றொன்று இந்த வரம்புகளை மீறிய, அல்லது தடுக்கப்பட்ட – ஹராமான செயல்பாடுகளைக் கொண்டது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஹலாலான வரம்புகளில் இருக்கின்றவரை, அதுவே அவருக்கு நேரான வழியாகும். 

இந்த அல்லாஹுதஆலா அனுமதித்த நேரான வழியில் அவர்கள் செய்கின்ற சிறிய நற்செயலும் – பாதையில் கிடக்கும் கல், முள் போன்ற இடர் தரும் பொருட்களை அகற்றுவது முதல், பிறரைப் பார்க்கும்பொழுது சிரித்த முகத்துடன் பார்ப்பது, அவர்களுக்கு ஸலாம் கூறுவது, உண்ணல், உறங்கல் மற்றும் சுயதேவைகளைப் பூர்த்தி செய்தலின்போது மார்க்கம் கூறுகின்ற சுன்னத்தான முறைகளைக் கடைப்பிடிப்பதுவரை – இதுபோன்ற எண்ணற்ற நற்செயல்களைச் செய்யும் பொழுது, வல்ல அல்லாஹ், அவர்களுக்கு எண்ணிலடங்கா அதிகமான நன்மைகளை வாரி வழங்குகின்றான்.

இப்படிப்பட்ட நற்செயல்களைச் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை எவராலும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது; கணக்கிடவும் முடியாது. அவ்வளவு அதிகமான நன்மைகளை அவர்கள் செய்கின்ற நற்செயல்களுக்கு வல்ல அல்லாஹ் வைத்துள்ளான். உதாரணமாக, ஒருவர் “சுபுஹானல்லாஹ் – அல்லாஹ் மகாத்தூய்மையானவன்” என்று ஒரு தடவை சொல்வாரானால் ஏழு வான்களையும் ஏழு பூமிகளையும் ஏக காலத்தில் நிறுக்க வல்ல மீஜான் என்னும் தராசின் பாதிஅளவிற்கு நன்மைகளைக் கொண்டு நிரப்பிவிடுகின்றான். “அல்ஹம்துலில்லாஹ் – எல்லாப்புகழும் வல்லஅல்லாஹ்வுக்கே” என்று கூறினால் மீதமுள்ள பாதிஅளவையும் நன்மைகளைக் கொண்டு நிரப்பிவிடுகின்றான். “அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப்பெரியவன்” என்று கூறும்பொழுது வானம் பூமிக்கு இடையிலுள்ள பரப்பளவின் அளவுக்கு நன்மைகளால் நிரப்பிவிடுகின்றான். 

தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும், ”அல்ஹம்துலில்லாஹ் – எல்லாப்புகழும் இறைவனுக்கே” என்பது தராசை நிரப்பக்கூடியதாகும். ”சுபஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி – அல்லாஹ் தூயவன், எல்லாப் புகழும் அவனுக்கே உரியது” என்பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை (நன்மையால்) நிரப்பக்கூடியதாகும். தொழுகை ஒளியாகும், தானதர்மம் சான்றாகும், பொறுமை ஒரு வெளிச்சமாகும், குர்ஆன் உனக்கு ஒன்று ஆதரவான சான்றாகும், அல்லது எதிரான சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: நபித்தோழர் அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள். (முஸ்லிம், 0381)

இம்மாதிரியான நற்செயல்கள் செய்யும்பொழுது, வல்ல அல்லாஹ் நமக்கு எண்ணிலடங்கா நன்மைகளைத் தருவதோடு மட்டுமில்லாமல் நம்முடைய பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். உதரணமாக, நாம் உளூச் செய்யும்பொழுது நம்முடைய கைகளால், பேச்சினால், பார்வையினால், கேட்டதினால் மற்றும் நடந்ததினால் நிகழ்ந்திட்ட பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். 

நான் ”அல்லாஹ்வின் தூதரே! அங்கத் தூய்மை (உளூ) செய்வது பற்றி எனக்குச் சொல்லுங்கள்!” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”உங்களில் ஒருவர் அங்கத் தூய்மை செய்வதற்குத் தண்ணீரை நெருங்கி வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினால் அவரது முகம், வாய், மூக்கு ஆகியவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் (தண்ணீரோடு சேர்ந்து கீழே) விழுந்து விடுகின்றன.

பிறகு அவர் அல்லாஹ் உத்தரவிட்டதைப் போன்று தமது முகத்தைக் கழுவினால் அவரது முகத்தால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் அவரது தாடி ஓரங்களிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன. 

பிறகு அவர் மூட்டுவரை இரு கைகளைக் கழுவும்போது அவருடைய கைகளின் பாவங்கள் அனைத்தும் அவரது விரல் நுனிகளிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்து விடுகின்றன. பிறகு அவர் ஈரக் கையால் தலையைத் தடவி (மஸஹுச் செய்தி)டும்போது அவரது தலையின் பாவங்கள் அனைத்தும் தலைமுடியின் ஓரங்களிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன. 

பிறகு அவர் தம் பாதங்களைக் கணுக்கால்கள்வரைக் கழுவும்போது அவரது கால்களால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் அவரது விரல் நுனிகளிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன. (அதற்குப் பிறகு) அவர் எழுந்து தொழும்போது அல்லாஹ்வை அவனது தகதிக்கேற்றதைக் கூறிப் புகழ்ந்து பெருமைப்படுத்தித் தமது உள்ளத்தில் இறைவனுக்கு மட்டுமே இடமளித்தால் அவர் திரும்பிச் செல்கையில் அன்று பிறந்த பாலகனைப் போன்று பாவங்கள் நீங்கி (பரிசுத்தமாகத்) திரும்புகிறார்” என்று கூறினார்கள். (முஸ்லிம்) 

மேலும், மூமினான ஆணுக்கோ பெண்ணுக்கோ பெரும் துன்பங்கள், துயரங்கள் ஏற்படும்பொழுது அவையும் அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன. 

உங்கள் மக்கட் செல்வமும் பொருட்செல்வமும் சோதனையாக இருக்கின்றன. அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 008:028. 064:015)

ஒவ்வொருவரும் மரணத்தை சுகிப்பவரே. நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 021:035)

எந்தக் குற்றமும் அற்றவர்களாக அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை மூஃமினான ஆண், மூஃமினான பெண் ஆகியோர் தங்களின் செல்வம், தங்களின் பிள்ளைகள், தங்களின் உயிர் ஆகிய விஷயத்தில் சோதிக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, முஅத்தா)

வல்ல அல்லாஹ், நாம் செய்த நற்செயல்களுக்கு நம்முடைய பாவங்களை மன்னித்து நம்மைத் தூய்மைப்படுத்தி நன்மைகளையும் பலமடங்காக, நாம் நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு வழங்கக்கூடியவன் ஆவான். 

நாம் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய சிலச் செயற்பாடுகளை நம்மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். அந்தக் கடமையான செயற்பாடுகளை நாம் செய்யும்பொழுது அவை நமக்கு நன்மைகள் தரக்கூடியதாக ஆகிவிடுகிறது. இதில் அல்லாஹ்வுக்கு எவ்வித இலாபமும் ஏற்படுவதில்லை. அவன் விதித்த கடமைகளை நிறைவேற்றாமல் கைவிட்டோமெனில் அல்லாஹ்வுக்கு எவ்வித இழப்புமில்லை; அது நமக்குத்தான் இழப்பாகும்.  அல்லாஹ் கடமையாக்கிய செயற்பாடுகள் ஒட்டுமொத்தமாக நம்முடைய நலனுக்கேயாகும். அவற்றை நிறைவேற்றினால் கிடைக்கும் நன்மையும் நிறைவேற்றத் தவறினால் ஏற்படும் நன்மைகளின் இழப்பும் நமக்குத்தான்.  கடமையான செயற்பாடுகளைச் செய்வதற்கும் செய்யாததற்கும் நாம் பெறப் போகும் கூலி, நம்மால் நினைத்துப்பார்க்க முடியாத நன்மையாக அல்லது நஷ்டமாக அமையலாம். 

அல்லாஹ் வழங்கிய வாய்ப்புகளை நாம் உரிய வகையில் பயன்படுத்திக் கொண்டு, நன்மைகளை சேமித்துக் கொள்வதும் அவற்றுக்குப் பிரதி பலனாக, கொடிய-கொழுந்து விட்டெரியும் நரகத்தைவிட்டுப் பாதுகாப்புப் பெற்று, நமக்காக அல்லாஹ் தயார் படுத்தி வைத்துள்ள உயர்ந்த அந்தஸ்தையுடைய சொர்க்கத்தை அடைவதற்கு நம்மை நாமே தகுதி படைத்தோராய் ஆகிவிடுவதையுமே தன் அடியானுக்கு அல்லாஹ் விரும்புகிறான்.

அளவிடமுடியாத நன்மைகள் நமக்கு கிடைப்பதெல்லாம் நாம் ஹலாலான – ஆகுமான வரம்புக்குள் இருக்கின்றவரைதான். இதில் தவறிழைத்து விடுவோமானால் நாம் வரம்புகளை மீறி தடுக்கப்பட்ட – ஹராமானவற்றினுள் வீழ்ந்து படுவோம் என்பதை நாம் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். தடுக்கப்பட்டவை என்பது, அல்லாஹ் ஹராமாக்கிய அனைத்துச் செயல்களான, அல்லாஹ்விற்கு இணைவைப்பது, அல்லாஹ்வை மறுப்பது போன்ற படுபாதகச் செயல்களைச் செய்வதாகும். தடுக்கப்பட்ட வரம்புக்குள் புகுந்து கொண்டு எவ்வளவு அளப்பரிய நற்செயல்கள் செய்தாலும் அதில் நமக்கு ஒரு சிறிய நன்மைகூட கிடைக்க வாய்ப்பில்லை. 

இந்த ஹராமுடைய வரம்பென்பது ஷைத்தானின் வழியாகும். நமது செயற்பாடுகளில் ஷைத்தானுடைய வழியைப் பின்பற்றினால் அதனை அல்லாஹ் முற்றிலுமாக வெறுத்து ஒதுக்குகிறான். அதாவது ஒருவன் ஹராமான ஷைத்தானுடைய வழியில் இருந்து கொண்டு, ஹஜ்ஜு, உம்ரா, பெரிய பெரிய பள்ளிவாசல்கள் கட்டுவது, மதரஸாக்கள் கட்டுவது, வாழ்க்கை முழுவதும் வணக்கத்தில் கழிப்பது, நோன்பு நோற்பது போன்ற எண்ணற்ற நன்மையான செயற்பாடுகள் செய்தாலும் அந்த ஹராமான வரம்புக்குள் வீழ்ந்து இவற்றைச் செய்தால் அவற்றுக்குக் கடுகளவு நன்மைகூட அல்லாஹ்விடத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியாது. 

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள் அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும். அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது. அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது. இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள். இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை. (அல்குர்ஆன் 2:264)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு வழிபடுங்கள் – உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள். (அல்குர்ஆன் 47:33)

இஸ்லாம் கட்டளையிடாத வழியில் அறச்செயல்கள் செய்யும் போது அது பாழாகிவிடாமல் இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.. 

உதாரணமாக, திருட்டு, கொள்ளை போன்ற மோசடி செய்த பொருட்களிலிருந்து தர்மம் செய்வதை அல்லாஹ் ஏற்கமாட்டான்.

”தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடி பொருட்களிலிருந்து (செய்யப்படும்) எந்தத் தர்மமும் (இறைவனால்) ஏற்கப்படாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா)

இந்த பூமியில் வாழக்கூடிய நம்முடைய வாழ்க்கையில் எவ்வாறு நாம் வாழவேண்டும் என்று நமக்குத் தேர்வு செய்வதற்கான முழுச் சுதந்திரம் உண்டு. ஒன்று, அல்லாஹ்வுடைய ஹலாலான வரம்புக்கு உட்பட்ட வாழ்க்கையாகும். மற்றொன்று, அதற்கு மாற்றமாக ஷைத்தானின் ஹராமான வரம்புகளில் அமைந்த வாழ்க்கையாகும். ஒரு மனிதருக்கு ஹலாலான வழிமுறையான குர்ஆன், ஹதீஸுடைய வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அல்லாஹ்வுடைய வேதத்தின்படியும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தான வழிமுறையின்படியும் செல்லும் வழிதான் நேரானவழி. உலகத்திலேயே அனைத்து வழிமுறைகளைவிட மிகச் சிறந்த வழியுமாகும். இந்த வழிமுறை நேரான, நேர்மையான, எந்த ஒரு தவறும் இல்லாத, முழுமை பெற்ற வழிமுறையாக உள்ளது. வாழ்க்கையில் இந்த வழிமுறைகளைக் கடைபிடித்து நடக்கும்பொழுது, சின்னஞ்சிறு நற்செயல்களுக்கும் தயாளகுணமுடைய வல்லஅல்லாஹ் அளவிடமுடியாத நன்மைகளை நமக்கு வழங்குகிறான்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.