தொழுதுகொண்டிருப்பவர் மயங்கி விழுந்தால் …

ஐயம்:

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நாம் தொழுதுகொண்டிருக்கும்போது நம் பக்கத்திலுள்ளவர் மயங்கி விழுந்தாலோ காக்கா வலிப்பு (ஃபிட்ஸ்) வந்தாலோ நாம் என்ன செய்ய வேண்டும்? என்னுடைய சந்தேகத்தை நிவர்த்திபண்ண வேண்டுகிறேன்.


சகோ. சையது அஹமது, திருநெல்வேலி

கடையநல்லூர்-627751
தமிழ்நாடு-இந்தியா
(மின்னஞ்சல் வழியாக)

தெளிவு:

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

இஸ்லாம், மனிதநேயத்திற்கு மதிப்பளிக்கும் மார்க்கமாகும். இஸ்லாம் போதிக்கும் அறவுரைகள் அனைத்திலும் மனிதம் நிறைந்திருக்கும். தனக்கும் நன்மை செய்துகொண்டு, பிறருக்கும் நன்மைகள் செய்யத் தூண்டுவதே இஸ்லாம். பிறர் என்பவர் அக்கிரமக்காரராக இருந்தாலும் சரியே:

“ஒருவன் அநீதி இழைப்பவனாக இருந்தாலும் அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் அவனுக்கு நீ உதவி செய்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அப்போது ஒருவர், “இறைத்தூதர் அவர்களே! அநீதிக்குள்ளானவனுக்கு நான் உதவுவேன்; அநீதி இழைப்பவனுக்கு எப்படி நான் உதவுவது? கூறுங்கள்!” என்றார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள், “அவனை அக்கிரமம் செய்யவிடாமல் நீ தடுப்பாயாக! இதுவே நீ அவனுக்குச் செய்யும் உதவியாகும்” என்றார்கள் – புகாரீ 6952.

நபி (ஸல்) அவர்கள், “மார்க்கம் (தீன்) என்பதே நலன் நாடுவதுதான்” என்று கூறினார்கள். நாங்கள், “யாருக்கு?” என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கும்” என பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: தமீமுத்தாரீ (ரலி) (நூல்கள் – முஸ்லிம் 82, நஸயீ, அபூதாவூத், அஹ்மத்).

கூட்டுத் தொழுகையின் வரிசையில் நம்மோடு சேர்ந்து தொழும் ஒருவர் மயங்கிக் கீழே விழுவது திடுக்கிடச் செய்யும் சம்பவமாகும். பசி அல்லது நோய் போன்ற தாக்குதலால் மயங்கி விழுந்தவருக்கு உடனடியாக உதவி தேவைப்படும். அவர் இனிப்பு நோயாளியாக இருந்து, இரத்தத்தில் இனிப்பின் அளவு ஐம்பதுக்கும் குறைந்தால் அது உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறுவதால் மயங்கி விழுந்தவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்திடவேண்டும்.

வலிப்பு நோயுள்ளவராக இருந்தாலும் விழுந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்யவேண்டும்!

பாம்பு, தேள் ஆகிய இரண்டையும் தொழும்போது (தென்பட்டாலும்) கொன்று விடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் – திர்மிதீ 355, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, இப்னுகுஸைமா, அஹ்மத், தாரிமீ).

தொழுது கொண்டிருக்கும்போது விஷ ஜந்துக்களைக் காண நேரிட்டால் அவற்றைக் கொன்று விடுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். விஷ ஜந்துக்களால் மனிதருக்குத் தீங்கு ஏற்படும். அதனால் தொழும்போது இவற்றைக் கொல்ல அனுமதியுள்ளது. இங்கு இபாதத்தைவிட மக்கள் நலம் நாடுகிறது இஸ்லாம்.

தொழும்போது மயங்கி விழுந்தவரின் நலம் கருதி, வரிசையில் அருகில் நின்ற ஒருவரோ இருவரோ அத்தொழுகையிலிருந்து விலகி, அவருக்கு உடனடியாக உதவ வேண்டும். விடுபட்டத் தொழுகையை நோயுற்றவருக்கு உதவிய பின்னர் நிறைவேற்றிக் கொள்ளலாம்!

 

(இறைவன் மிக்க அறிந்தவன்).