முஸ்லிம் பெண்களின் மெளனப் புரட்சி

Share this:

Islamic Tamil Women (ITW) நடத்தும் இஸ்லாமிய பெண்கள் மாநாடு’ எனும் தலைப்பிட்டு நமது தளத்தில் கடந்த 19.1.2012இல் செய்தி வெளியிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். கடந்த 22 ஜனவரி 2012இல் நடைபெற்ற மாநாட்டைப் பற்றிய தகவல்களை, சத்தியமார்க்கம்.காம் வாசகர்களோடு இங்குப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். நம் சகோதரிகளுக்கான இத்தகைய விழிப்புணர்வுக் கருத்தரங்கங்கள் தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் நடைபெற வேண்டும்; அதன் மூலம் சமுதாயப் பெண்கள் நற்பயன் பெறுவதற்கு அல்லாஹ் அருள் புரியவேண்டும் – சத்தியமார்க்கம்.காம்.

இஸ்லாமியப் பெண்கள் அறக்கட்டளை(ITW) மாநாட்டுத் துளிகள்

கடையநல்லூரிலிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் இஸ்லாமியப் பெண்கள் அறக்கட்டளை(ITW) பெண்களுக்கான வாராந்திர வகுப்புகள், நூலகம், நூல் விற்பனை நிலையம், கம்ப்யூட்டர் சேவைக்கல்வி, தையல் பயிற்சிப் பள்ளி, சிறுசேமிப்புக் கடனுதவி, தாவா நெட், ஹைர உம்மத் காலாண்டிதழ், எனக் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பல தளங்களில் செயல்பட்டு வருகிறது.

சமீப காலமாகப் பெருகி வரும் கள்ளக் காதல், ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு எதிராக இந்த அறக்கட்டளை ‘ஆதலினால் காதல் செய்யாதீர்’ என்ற தலைப்பில் ஹைர உம்மத் சிறப்பிதழை வெளியிட்டது. தமிழகம் முழுவதும் மிகப்பெரும் விழிப்புணர்வு அலைகளை ஏற்படுத்திய இவ்விதழ் தற்போது IFT யின் வெளியீடாக புத்தகமாகவும் வெளிவந்துள்ளது.

இப்பணியின் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி 22ஆம் தேதி கடையநல்லூர் பேட்டை NMMAS ( நமாஸ்) பள்ளியில் ‘நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றீர்கள்?’ என்ற குர்ஆனின் 81:26ஆம் வசனத்தை மையமாக வைத்து, ஒருநாள் பெண்கள் மாநாட்டை நடத்தியது.

சகோதரி K.A.ஃபாத்திமாவின் திருக்குர்ஆன் விரிவுரையுடன் மாநாடு தொடங்கியது. மாநாட்டு அமைப்பாளர் சகோதரி V.I.ஆபிதா பர்வீன் தொடக்க உரையாற்றினார். “பெண்களால் சாதிக்கமுடியும் என்பதற்கான சான்றுதான் இந்த மாநாடு. இது இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை. இந்தத் தீமை முற்றிலும் ஒழியும்வரை நாங்கள் ஓயமாட்டோம். இன்ஷா அல்லாஹ் இன்னும் ஓரிரு மாதங்களில் ‘ஒழுக்கத்தை நோக்கி..’ எனும் தலைப்பில் கேம்பைன் நடத்த உள்ளோம்” என்று கூறினார்.

‘சமூக மாற்றத்தில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் உரையாற்றிய சகோதரி ஃபாத்திமா ஜலால், பெண்களின் பங்களிப்பைப் பட்டியலிட்டதுடன் பெண்களால்தான் சமூக மாற்றங்கள் நிகழும் என்பதை உதாரணங்களுடன் விளக்கினார்.

மாநாட்டின் மையக்கருத்தான ‘நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றீர்கள்?’ என்ற தலைப்பில் மெளலவி நூஹ் மஹ்ழரி உணர்வுப் பூர்வமான உரையை நிகழ்த்தினார். ‘சத்திய சஹாபாப் பெண்மணிகளின் பயணம் எங்கே சென்றது? நாம் இன்று எங்கே செல்கிறோம்? இனி நாம் எங்கே செல்ல வேண்டும்?’ என்று வரலாற்று உதாரணங்களுடன் தமக்கே உரிய தனிப்பாணியில் எடுத்தியம்பினார். இந்த உரையைக்கேட்டுப் பலர் கண்கலங்கினர்.

‘கலாச்சாரச் சீரழிவுகளுக்கிடையே கண்ணியமாக வாழ்வது எப்படி?’ என்ற தலைப்பில் டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மது அவர்கள் தமது உரையில் கலாச்சாரச் சீரழிவுகளையும் அதனை எதிர்த்துக் கொண்டு எவ்வாறு கண்ணியமாய் வாழவேண்டும் என்பதையும் நடைமுறைப்படுத்தும் விதத்தில் பட்டியலிட்டார்.

சகோதரி K.A.மெஹரின் ஹதீஸ் விளக்கத்துடன் இரண்டாம் அமர்வு தொடங்கியது. மதிய அமர்வில் ‘தீமைகள் புயலாய் வீசும்போது..’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ‘தீமைகளுக்கெதிரான ஆண்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் ITW தலைவி, சகோதரி நஜ்மா கருத்துரை வழங்கினார். பெண்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் சகோதரி உம்மு ரோஜானும், ‘சமுதாய இயக்கங்களின் பங்களிப்பு’ குறித்து சகோதரி ஆயிஷா பானுவும் கருத்துரை வழங்கினர். டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மத் அவர்கள் கருத்தரங்கை வழி நடத்தி நிறைவுரையாற்றினார். காலை உரையின் இரண்டாம் பகுதியாக இவ்வுரை அமைந்தது குறிப்பிடத்தக்கது.

நிறைவுப் பேருரையாற்றிய மெளலவி ஹனீஃபா மன்பஈ உணர்வுப்பூர்வமான ஆழமான உரையை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியை சகோதரி நிஸ்மியா தொகுத்து வழங்கினார்.

மாநாட்டுத் துளிகள்

  • சற்றேறக் குறைய இரண்டாயிரம் பெண்கள் ஒன்று திரண்டனர்.

  • 35 பெண் தொண்டர்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்தனர்.

  • 10மணி நிகழ்ச்சிக்கு 9:30 மணிக்கே அரங்கு நிரம்பிய காட்சி பெண்களின் விழிப்புணர்வைப் பறைசாற்றியது.

  • காலையிலும் மாலையிலும் தேனீரும், மதியம் சிறப்பான உணவும் வழங்கப்பட்டன.

  • டோக்கன் முறையில் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று உணவைப் பெற்றுக்கொண்டனர்.

  • மாநாட்டை அனைவரும் காணும் வகையில் வெளிஅரங்குகளிலும் கீழ்த்தளத்திலும் 6 LCD திரைகளில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

  • நாகர்கோவில், காயல்பட்டினம், உத்தமபாளையம், திருநெல்வேலி,தென்காசி, வீரசிகாமணி, புளியங்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பெண்கள் கலந்துகொண்டனர்.

  • வெளியூரிலிருந்து வந்த ஆண்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் சிறப்புத் திரையில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

  • புத்தகக் காட்சி, சமரசம், இளம்பிறை, ஹைர உம்மத், சந்தா, விற்பனைப் பிரிவும் இடம் பெற்றது.

  • நிகழ்ச்சி முடியும் வரை இடையிலேயே யாரும் செல்லாமல் பெண்கள் அமர்ந்து உரையைக் கேட்டது சிறப்பான முன்னுதாரணம்.


தகவல் : சகோ. Mohamed Ameen V.S.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.