நல்ல (?) ஸூஃபிகள்

Share this:

ஐயம்: இறைவனை அறிந்து கொள்ளுதலை திருமறை வலியுறுத்துகிறது. அதனை நோக்கமாகக் கொண்ட ஸூஃபிகளின் இறைவனைப் பற்றிய ஆராய்ச்சிகளை ‘பித் அத்’கள் என புறக்கணிக்க சிலர் தயாராக உள்ளனர். கவ்வாலி இசை, ஆட்டம் போன்ற அம்சங்களைப் பற்றி நான் கூறவில்லை. அவைகளை ஒதுக்கிவிடுவோம். ஆனால் குர்ஆன் மற்றும் ஹதீசுக்கு எதிராக அமையாத சிந்தனைகளையும் “சூஃபியிசம்” எனப் புறந்தள்ள வேண்டிய காரணம் என்ன?

எல்லா சூபிக்களும் மனதிற்குள் மட்டும் தொழுது கொண்டவர்கள் இல்லையே. மேலும் எல்லோரும் தன்னை இறைவன் எனக் கூறிக் கொண்டவர்களும் இல்லை. மேலும் பார்ப்பதையெல்லாம் இறைவனென்று சொல்பவர்களும் இல்லை. தர்காவே கதி என கற்பிக்காத தரீக்காக்களும் உள்ளனவே. உதாரணத்திற்கு, ஜுனைத் பக்தாதி (ரஹ்), கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் சிந்தனைகள் நான் படித்த அளவில் குர் ஆன்/ஷரீயத்திற்கு மாறானதாக இல்லை. இவர்களை உள்ளடக்கிய சில சில்சிலாக்காரர்கள் மேலும் சிலரை உள்ளடக்கி இஸ்லாத்தின் முதுகெலும்புக்கு மாறானவைகளையும் கற்பிப்பதாகக் கருதுகிறேன். ஆனால் அதற்காக இச்சிந்தனைகள் அனைத்தையும் நாம் ஒதுக்க முடியாதல்லவா?

சமீபத்தில், ‘அமல்களின் சிறப்புகள்’ எனும் நூல் பற்றி நீங்கள் எழுதியது சிறப்பானதாக இருந்தது. எனவே இதைப் பற்றி நான் உங்களிடம் கேட்கிறேன்.

மின்னஞ்சல் வழியாக சகோதரர் ஷஹித் அஹ்மத்.

தெளிவு:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

”நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” என்று சிந்திக்கத் தூண்டும் வசனங்கள் ஏராளம் குர்ஆனில் இடம்பெற்றுள்ளன. சீரானச் சிந்தனையை அடித்தளமாக்கி ஆய்வுகளை மேற்கொண்டு, ”சிந்தித்து விளங்கக்கூடிய மக்களுக்கு நம் வசனங்களை விவரித்துள்ளோம்” (அல்குர்ஆன் 6:98)

என்பதோடு, சிந்தித்து விளங்க வேண்டும் என வலியுறுத்தி, சிந்திக்க ஆர்வமூட்டும் மார்க்கம் இஸ்லாம். இறைவனை அறிந்து கொள்ளுதல் என்றால் இறைவனின் வல்லமையை, ஆற்றலை அறிந்து கொள்ளுதல் எனப் புரிவதே மிகச் சரியாக இருக்கும். அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள். (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன் 10:3)

படைப்பின் ஆரம்பம், படைத்தவற்றின் இயக்கம், எதற்குப் படைக்கப்பட்டன என்பதை ஆராய்ந்து படைத்தவனின் வல்லமையை அறிந்து கொள்ளவேண்டும் என்றே இஸ்லாம் அழைப்பு விடுக்கின்றது. மாறாக இறைவன் எப்படி இருப்பான், ஆணா? பெண்ணா? என உருவகமாக இறைவனை அறிதல் என்றால் அதற்கு இஸ்லாத்தில் துளியும் அனுமதி இல்லை. இறைவனை எவரும் பார்க்க முடியாது. எவரும் பார்த்ததில்லை எனவும் திட்டவட்டமாக இஸ்லாம் அறிவித்துவிட்டது. இம்மையில் இறைவனை நானும் பார்த்ததில்லை ”பெளர்ணமி நிலவைக் காண்பது போல் உங்கள் இறைவனை மறுமையில் காண்பீர்கள்” (முஸ்லிம்) என்றும் நபி (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

”இறைவனை அறிதல்” என்பதில் படைப்பினங்களை ஆய்வு செய்து சிந்தித்து இறைவனின் வல்லமையை அறிதல் என்றால் இது இஸ்லாமிற்கு முரண் அல்ல! இன்றைய அறிவியலும் இதை உண்மைப்படுத்துன்றது.

”இறைவனை அறிதல்” என்பதில் இறைவனை உருவமாக அறிந்து கொள்ளுதல் என்ற பொருள் என்றால் இறைவனை இதுவரை எவரும் கண்டதில்லை, நபிமார்களும் இறைவனைக் கண்டதில்லை – காணமுடியாது என்பதே இஸ்லாமின் அடிப்படை. விரிவஞ்சி நிறுத்தி, இது குறித்து மாற்றுக் கருத்துடையோர் பகிர்ந்து கொண்டால் மேற்கொண்டு தொடரலாம். இனி கேள்விக்குச் செல்வோம்.

ஸூஃபியிசம்

தஸவ்வுஃப் என்ற பதத்தைப் பற்றி பல்வேறு கருத்து நிலவினாலும் மூலச் சொல் ”அணி” என்ற பொருள் கொண்ட ”ஸஃப்” என்றும் ”திண்ணை” என்ற பொருள்கொண்ட ”ஸுஃப்பா” என்றும் ”கம்பளி” என்ற பொருள் கொண்ட ”ஸூஃப்” என்றும் கருதப்படுகின்றது. மொத்தத்தில் ”ஸுஃபித்துவம்” என்ற ஸூஃபிக் கொள்கையை சமுதாயத்தில் ”ஸூஃபியிசம்” என்று அழைக்கப்படுகின்றது. ஸூஃபியிசத்தின் முக்கியக் கொள்கை துறவறம்.

உறவுகளிலிருந்து நீங்கி உலக ஆசைகளைத் துறந்து சன்னியாசியாகி தவக்கோலம் தரித்து, நிஷ்டையில் திளைத்து காண்பதெல்லாம் இறைவன் என்ற முக்தியைப் பெறுவதே ஸூஃபியிசம். துறவு வழியாக அனைத்துப் பொருள்களும் அல்லாஹ் என்றாகி இறுதியில் தானும் அல்லாஹ் என்ற உச்ச நிலையை எட்டுவதே ஸூஃபியிசக் கொள்கை!

ஷரீஅத் மட்டுமில்லாமல் தரீகத், ஹகீகத், மஃரிஃபத் என மார்க்கத்தோடு மேலதிகக் கொள்கைக் கோட்பாடுகளைச் சேர்த்துக்கொண்ட ஸூஃபித் துறவற அத்வைதிகள் சம்சாரி வாழ்க்கையைப் புறக்கணித்து, சிற்றின்பங்களைத் துறந்தால் பிறகு ”நீ தான் இறைவன், இறைவன் தான் நீ” என்று ஆகிவிடுவாய் என பாமரமக்களை ஏமாற்றுகின்றனர். பீர் முரீது பைஅத் – குரு சிஷ்யன் எனக் கூறி குருவின் விருப்பபடியெல்லாம் சிஷ்யனை நடத்தலாம் என்று மனித சுயமாரியாதையை இழக்கும் அளவுக்கு முற்போக்குக் கொள்கையுடைய(!?) ஸூஃபியிசக் கொள்கையை இஸ்லாமுடன் ஒப்பிடுவது பொருத்தமற்றதாகும்.

ஸூஃபிகளிலேயே கொஞ்சம் பரவாயில்லை என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கஸ்ஸாலி சொல்கின்றார்:

“அல்லாஹ்வை அறிந்து கொண்ட ஒரு ஞானி அனைத்துப் பொருட்களிலும் அல்லாஹ்வைக் காண்பார். ஏனெனில் அனைத்து வஸ்துக்களுமே அவனிலிருந்தே, அவனை நோக்கியே, அவன் மூலமாகவே, அவனுக்காகவே உருவாகியிருக்கின்றன. தீர்க்கமான முடிவின்படி எல்லாம் அவனே (இஹ்யாஉலூமுத்தீன். 1—254 ).

 

மெஞ்ஞானிகள் (ரகசியம்) ஹகீக்கத் எனும் வானில் உயர்ந்து அங்கே சஞ்சரிக்கும்போது உலகிலே அவர்கள் ஒரே (அல்லாஹ்வான) ஒருவனைத் தவிர வேறு எதையுமே காணவில்லையென ஏகோபித்து ஒருமித்துத் கூறுகின்றனர். எனினும் சிலருக்கு இந்நிலை தெள்ளத் தெளிவாக அறிவியல் ரீதியாகப் புலப்படும். (அவர்கள் இந்த ரகசியத்தால் குழம்பிப் போக மாட்டார்கள்) இன்னும் சிலருக்கோ அவர்கள் இதன் உச்ச இன்பத்தையே சுவைத்து விடுவார்கள். அப்படியானவர்கள் எல்லாம் ஒன்றே எனும் ஓர்மையில் மூழ்கித் திளைத்து ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து ( غيرية ) வேறொன்று என்ற வார்த்தை – பன்மை என்பதே அவர்களிடமிருந்து அடியோடு நீங்கி விடும். அவர்களின் விழிகளுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும் புலப்படாது. அனைத்துமே அல்லாஹ்வாகவே தென்படும். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் ஒரு வகை போதையேற்பட்டதன் காரணத்தினாலேயே அவர்களில் சிலர் ‘நான் தான் அல்லாஹ்’ என்றும், வேறு சிலரோ ‘நானே அல்லாஹ் நான் தூய்மை மிக்கவன், வல்லமை மிக்கவன்’ என்றும் வேறு சிலர் ‘எனது ஜூப்பாவிலும் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் கூறியிருக்கின்றார்கள் (மிஷ்காதுல் அன்வார் ப : 122).

 

தவ்ஹீத் என்பதை நான்கு படித்தரங்களாக வகைப்படுத்தலாம். முதலாவது நாவினால் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவது, இரண்டாவது அதன் அர்த்தத்தை கல்பால் (இதயத்தால்) உண்மைப் படுத்துவது, இது பாமரமக்களின் படிநிலையாகும். மூன்றாவது இறை ஒளியினால் கஷ்புடைய ஞானத்தைக் காண்பதாகும். இது இறைநெருக்கம் பெற்றவர்களின் நிலையாகும். நான்காவது பிரபஞ்சத்தில் அல்லாஹ்வைத்தவிர எதையுமே காணாத நிலையாகும். தன்னையும் அவர் கடவுளாகவே காண்பார். இந்நிலைக்கு சூபியாக்களிடத்தில் பனாஃ – இறைவனுடன் சங்கமித்து விடுதல் என்று கூறப்படும். இந்த நிலையை அடைந்தவர்தான் உண்மையான தவ்ஹீத் வாதியாவார். (இஹ்யா உலூமுத்தீன் . 245-4 ம்பாகம்).

 

நன்றி : சித்தார்கோட்டை.காம்

எப்படிப் போகிறது பாருங்கள்! இன்னும் துறவு நெறியில் முற்றிய ஸூஃபி ஞானிகள் தன்னைக் காதலனாக்கி, இறைவனைக் காதலியாக்கி வர்ணித்து முட்டை பொறித்து முழுக்கோழியும் பொறித்து, தட்டைப் பீங்கனில் வைத்துக் கொடுத்து, குணங்குடி மஸ்த்தான் களிப்பாடல்கள் பாடிய சங்கதிகளும் உண்டு. துறவறத்தின் மூலம் இறைவனும் மனிதனும் ஒன்றாகக் கலந்திடலாம் வாருங்கள் என்ற அத்வைதக் கொள்கைக்கு அழைப்பதே ஸூஃபியிசமாகும். இஸ்லாமில் துறவறத்துக்கு அறவே இடமில்லை.

”அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை.” (அல்குர்ஆன் 57:27)

உறங்காமல் நின்று வணங்கப் போகிறேன், காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறோன், மணமுடிக்க மாட்டேன் என்றெல்லாம் கூறி இறைவணக்கத்தில் மட்டுமே ஈடுபட எண்ணிய நபித்தோழர்களை நபி (ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். இறைவனுக்குச் செய்யும் கடமை. தனக்கு, மனைவியர்க்கு, மக்களுக்கு, உறவினருக்கு, சமுதாயத்திற்குச் செய்யும் கடமைகளும் உள்ளன என்றும் அறிவுரை பகர்கின்றார்கள்.

 

அல்லாஹ்வும், அடியாரும் ஒன்றுதான் என்ற ஸூஃபித்துவக் கோட்பாடு, இஸ்லாமின் அடிப்படைக் கோட்பாட்டையேத் தகர்க்கும் போது, ஸூஃபிகள் குர்ஆன், சுன்னாவிற்கு மாறாக நடக்கவில்லை என்ற பிரச்சாரம் தவறானது. முதலில் ஸூஃபி என்ற பிரிவே தவறானது. ஸூஃபியிசம் பற்றி குர்ஆன், சுன்னா எங்கும் சொல்லவில்லை. இன்னும் இந்த அத்வைதிகள் தமது பைத்தியக்காரக் கொள்கைக்குச் சாதகமாக குர்ஆன் வசனங்களைத் திரித்துக் கூறவும் தயங்கியதில்லை.

(பத்ருப் போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல – அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான். (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான். முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான். நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:17)

இந்த வசனத்துக்கு அல்லாஹ்வே நபியாக அவதரித்தான் என்ற பொருள் கொண்டு அத்வைதக் கொள்கையை தூக்கி நிறுத்த முயல்கின்றனர். இதுதான் ஸூஃபிகளின் ”இறைவனை அறிதலின்” பொருள் போலும். எனவே இஸ்லாமுக்கும் ஸூஃபித்துவத்துக்கும் பல முரண்பாடுகள் உள்ளன. கேள்வி கேட்ட சகோதரர் எல்லா ஸூஃபிகளும் அவ்வாறு இல்லையே என்று கூறினாலும் தன்னைச் ஸூஃபி என்று சொல்லிக்கொள்பவர் ஸூஃபிக் கொள்கையில்தான் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். குர்ஆன், சுன்னாவைப் பின்பற்றுபவர் தன்னை ஸூஃபி என்று சொல்லிக்கொள்ள எங்கிருந்து ஆதாரங்களைப் பெற்றார் என்பதையும் தெளிவுபடுத்திட வேண்டும்.

இறைவனை அறிதல் என்ற பெயரில் வெளியில் சொல்லா இரகசிய ஞானம் எனச் சொல்லிக்கொண்டு முஸ்லிம்களை மூளைச் சலவை செய்து யூத, கிறிஸ்தவ மதங்களின் துறவித்தனத்தைப் பின்பற்றும் ஸூஃபியிசத்துக்கும் இஸ்லாமிற்கும் எந்த ஒட்டுமில்லை, உறவுமில்லை!

மாற்றுக் கருத்துடையோர் தங்கள் கருத்தை மறுமொழியில் பகிர்ந்து கொள்ளலாம்!

(இறைவன் மிக்க அறிந்தவன்)

{jomcomment_lock}


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.