ஐயம்:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)
வீட்டு ஒத்தி-போக்கியம் என்பது வட்டியை அடிப்படையாகக் கொண்டதால் அவை ஹராம் என அறிவோம். எனது சந்தேகம் என்னவெனில், வீட்டு வாடகைக்கு வருபவர்களிடம் முன்பணம் பெறுவது ஹராமா? ஹலாலா? என்பதை தயவு செய்து விளக்கவும்.
தாங்களின் மேலான பதிலை சத்தியமார்க்கம் இணையதளத்தில் கூறுவதுடன் எனது மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புமாறு தாங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மின்னஞ்சல் வழியாக சகோதரர் அ.சையது இப்ராம்சா, குவைத்
தெளிவு:
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்…
பொருளுக்காக முன்பணம் கொடுப்பதும், பெறுவதும் இஸ்லாத்தில் தடை விதிக்கப்பட்டதல்ல. குறிப்பிட்ட நாளில் தரவேண்டும் என்ற நிபந்தனை – ஒப்பந்தம் அடைப்படையில் முன்பணம் கொடுக்கல், வாங்கல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நிகழ்ந்துள்ளது.
அப்துல்லாஹ் இப்னு ஷத்தாத் (ரலி) அவர்களும், அபூ புர்தா(ரலி) அவர்களும் என்னை அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம் அனுப்பி, 'நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் கோதுமைக்காக முன்பணம் கொடுத்திருக்கிறார்களா?' என்று கேள்!" என்றனர். (அவ்வாறே நான் கேட்ட போது) அப்துல்லாஹ் இப்னு அபீ அஃவ்பா(ரலி), 'கோதுமை, வாற்கோதுமை, ஸைத்தூன் (ஆலிவ்) எண்ணெய் ஆகியவற்றிற்காக அளவும் தவணையும் குறிப்பிட்டு, ஷாம் வாசிகளான 'நபீத்' எனும் குலத்தாரிடம் நாங்கள் முன்பணம் கொடுத்து வந்தோம்! என்றார். 'தோட்டம் துரவும் விவசாய நிலமும் யாரிடம் இருக்கிறதோ அவரிடமா?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'நாங்கள் அதுபற்றி விசாரிக்கமாட்டோம்!" என்றார்கள். பிறகு, அவ்விருவரும் என்னை அப்துர் ரஹ்மான் இப்னு அப்ஸா(ரலி) அவர்களிடம் அனுப்ப, அவர்களிடம் சென்று நான் கேட்டபோது, 'நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நபித்தோழர்கள் பொருட்களுக்கு முன்பணம் கொடுத்து வந்தனர்; (முன்பணம் பெறுபவர்களிடம்) 'அவர்களுக்குத் தோட்டம் துரவு அல்லது விவசாய நிலம் இருக்கிறதூ' என்று நாங்கள் கேட்க மாட்டோம்!" என்று கூறினார்கள். அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு அபில் முஜாலித்(ரலி) (நூல்: புகாரி, 2244. இதேக் கருத்தில் மேலும் சில நபிமொழிகள் புகாரி, முஸ்லிம் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.)
வீடு வாடகைக்கு விடும்போது, குடியேற வரும் வாடகையாளரிடம் வீட்டின் உரிமையாளர் முன்பணம் பெறுவது வாடகையாளரால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய உதவும் என்பதால் ஒரு வகையில் முன்பணம் தரவேண்டும் என்ற நிபந்தனை விதிப்பது நியாயம் என்றும் சொல்லலாம். வாடகையாளர் வீட்டைக் காலி செய்யும்போது முன்பணம் திரும்ப தரப்படும் என்ற நிபந்தனையும் எழுதப்பட்டு அதில் குறைவு ஏதுமின்றி முறையாக நிறைவேற்றப்பட்டால் இதில் வட்டி ஏற்படும் வாய்ப்பு இல்லை! எனவே வாடகை வீட்டுக்காக முன்பணம் பெறுவது மார்க்கத்தில் விலக்கப்பட்டதல்ல!
(இறைவன் மிக்க அறிந்தவன்)