மகத்துவமிக்க இரவிற்கான வணக்கங்கள்!

Share this:

மனிதகுலம் அனைத்திற்குமான வழிகாட்டியான அருள்மறை குர்ஆன் வழங்கப்பட்ட இரவான லைலத்துல் கத்ர் இரவிற்கான வணக்கங்கள் குறித்த ஐயங்கள் நம் சகோதரர்களிடையே நிலவுகின்றன. இரவில் நின்று வணங்குதல் தவிர நன்மையை அதிகமாக நாடும் விருப்பமுள்ளவர்கள் ரமளானின் கடைசிப் பத்து இரவுகளில் பள்ளியில் தங்கி நல்லமல்களில் ஈடுபட்டு நன்மையைத் தேடும் இஃதிகாஃப் என்னும் வணக்கமும் இந்த இரவிற்கான வணக்கங்களில் சேரும் என்பதால் இவ்விரண்டையும் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

லைலத்துல் கத்ர் இரவு

லைலத்துல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும். அந்த ஓர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறப்புத் தகுதி பெற்றுள்ளதாக அமைந்துள்ளது.

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலதுல் கத்ர்) இரவில் இறக்கினோம். மேலும் கண்ணிய மிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அதில் மலக்குகளும், (ஜிப்ரீல் எனும்) ஆன்மாவும் தன் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்). அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன் 97 : 1-5)

திருக்குர்ஆன் அருளப்பட்ட இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது என்று இங்கே அல்லாஹ் கூறுகிறான். மேலே நாம் குறிப்பிட்ட வசனத்தில் ரமளான் மாதத்தில்தான் குர் ஆன் அருளப்பட்டது எனவும் இறைவன் கூறுகிறான். அந்த ஓர் இரவு நிச்சயம் ரமளான் மாதத்தில் தான் அமைந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

அந்த இரவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் வரும் ஒற்றையான இரவுகளில் அமைந்திருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அவ்விரவில் பாக்கியமும், அதிக நன்மையும், சிறப்பும் இருப்பதால் இந்த இரவு அருள்பாலிக்கப்பட்ட இரவு என்று அல்லாஹ் அல் குர்ஆனில் சிறப்பித்துக் கூறுகினறான். அந்த இரவில் மலக்குகள் நன்மைகள், அருட்பாக்கியங்கள், சிறப்புகள் ஆகியவற்றைக் கொண்டு பூமியில் இறங்குகின்றார்கள். அந்தச் சிறப்பு வைகறை உதயமாகும் வரையிலும் இருக்கும் என்று அருள்மறையாம் திருமறை குர்ஆன் சான்று பகர்கின்றது.

விசுவாசத்துடனும், நன்மையை எதிர் பார்த்தும் எவர் லைலத்துல் கத்ர் இரவில் தொழுதாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகினறன. அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),புகாரி, முஸ்லிம்

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றதொரு ஹதீஸ் இவ்வாறு தெளிவு படுத்துகின்றது:

நபியவர்கள் முந்தைய இருபது நாள் இரவுகளில் விழித்திருந்து தொழவும் செய்தார்கள். தூங்கவும் செய்தார்கள். ஆனால் இறுதிப் பத்து நாட்கள் வந்து விட்டால் கச்சை கட்டிக் கொண்டு அமல்களில் முழுமையாக ஈடுபடுவார்கள். (முஸ்னத் அஹ்மத்)

லைலத்துர் கத்ர் என்பது 27 வது இரவு மட்டுமே என்கின்ற தவறான கருத்து இந்தியத் துணைக்கண்டத்திலும் இன்னும் சில நாடுகளிலும் பரவலாக நிலவுகிறது. இதனைப் பற்றிய ஹதீஸ்:

”எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்! அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

மேற்கண்ட ஹதீஸ்கள் ஒற்றைப்படை இரவில் தேடுமாறும் அந்த ஒற்றைகளை கோடிட்டுக்காட்டி அந்த நாட்களில் தேடுமாறும் வலியுறுத்தியுள்ளார்கள். தவிர எந்த ஒரு நாளையும் இது லைலத்துல் கத்ர் என்று குறிப்பிட்டு சொல்லவில்லை, அதற்கான காரணத்தை நபி(ஸல்) அவர்கள் கூறும் போது, முதலில் அந்நாளைப்பற்றி இறைவனால் தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும் பின்னர் அது மறக்கடிக்கப்பட்டு விட்டதாகவும், அது முஸ்லிம் சமுதாயத்திற்கு நன்மையாக இருக்கலாம் என்று விளக்கம் அளித்துள்ளார்கள். எனவே இவ்விஷயத்தில் ஆழ்ந்த சர்ச்சையோ, சச்சரவோ, கொள்ளாமல் பெருமானார்(ஸல்) அவர்கள் சொன்னபடி நடந்து கொள்வது நல்லது

ரமளானின் கடைசிபத்து நாட்களில் புரிய வேண்டிய வணக்க வழிபாடுகளையும் செய்துக் காட்டியுள்ளார்கள். பிற மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகப்படியான வணக்க வழிபாடுகளை இரவிலும் பகலிலும் நபி(ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் நின்று வணங்குவதை ஆர்வமுடன் செய்துள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ்கள் மூலம் அறியலாம்.

நபி (ஸல்) அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம்காட்டாத அளவு ரமளானின் கடைசி பத்து நாட்களில் அதிக அளவில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்.

ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடத் தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

லைலத்துல்கத்ரில் பிரார்த்தனை:

லைலத்துல் கத்ரில் அதிக அளவு பிரார்த்தனை புரிய நபி(ஸல்) அவர்கள் ஒரு துவாவை கற்றுதந்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன் மன்னிப்பையே விரும்புபவன் எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!) அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்

இத்தகைய புனிதமிக்க ரமளானின் கடைசிபத்து நாட்களின் ஒற்றைபடை இரவுகளில் அதிக உபரியான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வல்ல இறைவனின் அருளை அடைவோமாக!

இஃதிகாஃப்

இந்தப் பத்து நாட்களில் மற்றுமொரு சிறப்பு இஃதிகாஃப் இருப்பதாகும். இஃதிகாஃப் என்பது உலகக் காரியங்களிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் வழிபாட்டிலேயே முழுமையாக ஈடுபடுவதற்காக பள்ளிவாசலில் தங்கி விடுவதாகும். ஒரு முஸ்லிம் இப்படிச் செய்வது அல்குர்ஆனும் நபி மொழிகளும் வலியுறுத்தியுள்ளன. நபியவர்கள் இவ்வாறு ஈடுபட்டதற்குக் காரணம் இந்த இரவுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கின்ற முக்கிய சிறப்பயாகும். அவ்வாறு ஒருவர் ஈடுபடும்போது அவர் லைலதுல் கத்ர் இரவைப் பெறக் கூடிய வாய்ப்பைப் பெறுகினறார்.

நபி (ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெருவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி அறிவித்தார் : அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று. உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். அறிவிப்பாளர்: அபூஸஈத் அல் குத்ரீ(ரலி), முஸ்லிம்

ஒருவர் பிற மனிதர்களை விட்டும் விலகி அல்லாஹ்வின் பள்ளிவாசல் ஒன்றில் இஃதிகாஃப் இருப்பதன் நோக்கம்; சங்கடங்களின்றி மனஒருமையோடு அல்லாஹ்வை வழிபடுவதற்காகவாகும். அவ்வாறு இருப்பதனால் அம்மனிதர் லைலதுல் கத்ர் எனும் மகத்துவம் மிக்க இரவை அடைந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றார்;. அத்தோடு உடலுறவு, அதற்கு முன்னுள்ள காரியங்களான முத்தமிடுதல், ஆசையுடன் தொடுதல், போன்ற காரியங்களும் இஃதிகாஃப் இருப்பவருக்கு விலக்கப்பட்டதாகும்.

இஃதிகாஃப் இருப்பவர்கள் திக்ர் செய்வதில், குர்ஆன் ஓதுவதில், நஃபிலான தொழுகைகளில், இன்ன பிற வழிபாடுகளில் ஈடுபட்டிருத்தல் அவசியமாகும். மேலும் உலக விஷயங்களில் ஈடுபடுதல் மற்றும் தேவையற்ற காரியங்களை விட்டும் தவிர்ந்து இருத்தல் அவசியமாகும். ஆனால் ஏதேனும் முக்கிய நலனை முன்னிட்டு இஃதிகாஃப் இருப்பவர் தனது குடும்பத்தாருடன் ஆகுமான பேச்சுக்கள் பேசுவதில் எவ்விதத் தவறுமில்லை. அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகின்றான்:

இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்த இருக்கும்போது மனைவியர்களுடன் கூடாதீர்கள். (அல்குர்ஆன் 2 : 187)

ரமளானின் கடைசிப்பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்க அவர்கள் நாடியபோது அதற்கென கூடாரம் அமைக்க உத்தரவிட்டார்கள். அவ்வாறே அமைக்கப்பட்டது.
இது முந்தைய ஹதீஸின் தொடர்ச்சியாகும்.

பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பதற்காக ஒரு கூடாரம் அமைத்துக் கொள்ளலாம் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. ஆயினும் இது பொதுவான அனுமதியல்ல. அல்லாஹ்வின் தூதருக்கு மட்டுமே உரியதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை இந்த ஹதீஸின் அடுத்த பகுதி விளக்குகிறது.

உடனே ஸைனப்(ரலி) அவர்கள் ஒரு கூடாரம் அமைக்க உத்தரவிட்டார்கள். அது அமைக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் மற்றும் சிலரும் அவ்வாறு உத்தரவிட்டனர். அவ்வாறே அமைக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் பஜ்ரு தொழுததும் பார்த்தபோது பல கூடாரங்கள் போடப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள் ” இவர்கள் நன்மையைத் தான் நாடுகிறார்களா?” என்று கேட்டு விட்டு தனது கூடாரத்தைப் பிரிக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே பிரிக்கப்பட்டது. ரமளான் மாதம் இஃதிகாஃப் இருப்பதை விட்டு விட்டு ஷவ்வாலின் கடைசிப்பத்து நாளில் இஃதிகாஃப் இருந்தனர். இதுவும் அந்த ஹதீஸின் தொடர்ச்சியாகும்.

இவர்கள் நன்மையைத்தான் நாடுகிறார்களா என்ற கேள்வியும், அவர்கள் தமது கூடாரத்தையே பிரித்து இஃதிகாஃப்பை விட்டதும் இவ்வாறு கூடாரங்கள் அமைப்பதில் அவர்களுக்கு இருந்த அதிருப்தியைக் காட்டுகிறது.

நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது மனிதனின் அவசியத்தேவை (மலஜலம் கழித்தல்)களுக்காகத் தவிர வீட்டிற்குச் செல்ல மாட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும்போது நான் வீட்டில் மாதவிடாயாக இருந்து கொண்டே அவர்களது தலையை வாரி விடுவேன். அவர்கள் தமது தலையை (மட்டும்) வீட்டுக்குள் நீட்டுவார்கள். அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

இஃதிகாஃப் இருக்கும்போது தலையை வாரிக்கொள்ளலாம். மனைவியைத் தொடலாம். பள்ளியின் ஒரு பகுதியாக வீடு அமைந்திருந்தால் வீட்டுக்குள் தலையை நீட்டி மனைவியை வாரி விடச் செய்யலாம் என்பதை எல்லாம் இதிலிருந்து விளங்க முடிகிறது.

நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இரவில் அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் நான் புறப்படுவதற்காக எழுந்தேன். என்னை வீட்டில் விடுவதற்காக அவர்களும் எழுந்தார்கள். அறிவிப்பாளர்: அன்னை சபிய்யா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

மனைவி பள்ளிக்கு வந்து இஃதிகாஃப் இருக்கும் கணவனுடன் பேசலாம் என்பதை இதிலிருந்து அறியலாம். அவர்களின் வீடு பள்ளி வாசலுக்குள் புகுந்து செல்லும் விதமாக பள்ளியை ஒட்டி அமைந்திருந்தது. பள்ளியை விட்டு வெளியே சென்று மனைவியை வீட்டில் விட்டு விட்டு வந்தார்கள் என்று அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது.

இஃதிகாஃப் இருப்பவர், நோயாளியை விசாரிக்காமல் இருப்பதும், ஜனாஸாவில் பங்கெடுக்காமல் இருப்பதும், மனைவியைத் தீண்டாமலும், அணைக்காமலிருப்பதும், அவசியத் தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமல் இருப்பதும் நபி வழியாகும். அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) நூல்: அபூதாவூத்

இவற்றை எல்லாம் பேணி இஃதிகாப் இருக்க வேண்டும். இவ்வாறு நல்லமல்கள் புரிந்து இறைவனின் திருப்பொருத்தத்தை அடையும் நல்லடியார்களில் நம்மை ஆக்க வல்ல இறையோனிடம் இறைஞ்சுவோமாக!

குறிப்பு: ரமளான் இரவு வணக்கங்கள் குறித்த கட்டுரையின் பின்னூட்டத்தில் லைலத்துல் கத்ர் இரவிற்கான அமல்கள் குறித்த சகோதரர் முஹம்மது சிராஜுதீன் அவர்கள் எழுப்பிய ஐயம் ஒன்றிற்கான விளக்கமாக இக்கட்டுரை எழுதப்பட்டிருந்தாலும், மிகவும் அழகிய முறையில் சுருக்கமாக லைலத்துல் கத்ர் இரவு குறித்த விளக்கத்தை உடனடியாக அதே கட்டுரையின் பின்னூட்டமாக அளித்த சகோதரர் அபூமுஹை அவர்களுக்கு சத்தியமார்க்கம்.காம் தளம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. அல்லாஹ் சகோதரர் அபூமுஹை அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக!

கட்டுரை ஆக்கம்: அபூ ஸாலிஹா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.