நோன்பு குறித்து சில சிந்தனைகள்

நோன்பு நம்பிக்கை கொண்டோருக்கு கடமையாக்கி இறைவன் கூறுகிறான்:

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

நோன்பாளி இறையச்சத்துடன் நோன்பு நோற்றாலொழிய அந்த நோன்பு அவருக்கு உரிய பலன் தராது.

இதனையே பெருமானார் (ஸல்) அவர்கள், யார் பொய்யான பேச்சக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணுவதையும் பருகுவதையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி) நூல்கள் : புகாரி, அஹ்மத், அபூதாவுத், திர்மிதீ, இப்னுமாஜா என்று கூறுகிறார்கள்.

நோன்பாளிக்கான பரிசுகள்:

தூய இறையச்சத்தோடு நோற்கப்படும் நோன்பு, இறைவனிடத்தில் பெரும்பலன் பெற்றுத் தருவதாக உள்ளது.

நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது எஜமானனை (ரப்பை) சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா நூல்: திர்மிதி).

நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாயில் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று பெயர். அவ்வாயில் வழியாக நோன்பாளிகள் மட்டுமே நுழைவார்கள், அவர்களல்லாது வேறு யாரும் அதன் வழியே நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாயில் மூடப்பட்டு விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸாஃது, நூல்கள்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி)

‘நான் நபி(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை காட்டித்தாருங்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதை போன்று சிறப்பான வேறொரு அமல் இல்லை’ என கூறினார்கள், (அறிவிப்பாளர்:  அபூ உமாமா (ரலி), நூல்: நஸயீ).

‘எவர் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா, நூல்: முஸ்லிம்).

ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழுநூறு மடங்குவரை கூலி கொடுக்கப்படுகிறது. “நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி அளிப்பேன்” என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் (நோன்பு நோற்பதால் அவருக்கு ஏற்படும்) வாய் நாற்றம், அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் நறுமணத்தைவிடச் சிறந்ததாகும். (அறிவிப்பாளர்: அபுஹுரைரா(ரலி) நூல்: திர்மிதி)

இந்த நபிமொழியை நம் சகோதரர்கள் சிலர் தவறாக விளங்கி, சஹர் முதல் நோன்பு துறக்கும் வரை பல் துலக்காமல் துர்நாற்றத்துடன் உடன் தொழுபவரைச் சங்கடத்தில் ஆழ்த்துகின்றனர். நோன்பு முறியாத அளவு, பற்பசை கொண்டு பல் துலக்கியோ அல்லது மிஸ்வாக் செய்தோ இருப்பது விரும்பத் தக்கதாகும். இங்கே குறிப்பிடப்படும் நாற்றம், இரைப்பை காலியாவதால் ஏற்படுவது.

அல்லாஹ் கூறிய வழியில் நோன்பிருந்து அரிய பல பலன்களை அடைய நம் அனைவருக்கும் படைத்தவன் துணைபுரிவானாக.

  • அபூஷைமா