மீண்டும் ஒரு ரமளான்: பிறை 19
அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையையும் அதில் கொடுக்கப்படும் தண்டனைகளையும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் நாம் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளவேண்டும்.
அல்லாஹ் அல் குர்ஆனில்,
நம் வேதவசனங்களை நிராகரிக்கின்றவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும்போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையை (முழுமையாக)அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். (அல் குர் ஆன் 4 : 56) என்று எச்சரித்துள்ளதையும் நரகத்தின் கொடுமையை உணர்த்தும் கீழ்க்கண்ட வசனங்கள் அதன் கொடுமையை அஞ்சி அதை விட்டுத் தப்பிடும் விதமாக வாழவேண்டியதை நினைவூட்டும் ஓர் அரிய அச்சுறுத்தல் கலந்த உபதேசம் ஆகும்.
திண்ணமாக, நரகம் வலைவிரித்துக் காத்துக் கிடக்கின்றது – வரம்பு மீறியவர்களின் வாழ்விடமாக! அதில் அவர்கள் ஊழியூழிக் காலம் வீழ்ந்து கிடப்பர். அங்கு, குளிராக-குடிப்பாக எதையும் அவர்கள் சுவைக்கப் போவதில்லை – கொதியூட்டப்பட்ட நீரையும் சீழையும் தவிர. அவர்களுக்கு அவை தகுமான கூலிதாம். (ஏனெனில்,) கணக்குத் தீர்க்கும் நாளை அவர்கள் எதிர்பார்க்காமல் (மறுத்து) வாழ்ந்தனர். மட்டுமின்றி, நம் சான்றுமிகு வசனங்களை முற்றும் பொய்யெனக் கொண்டனர். ஒன்று விடாமல் நாம் அனைத்தையும் கணக்காய்ப் பதித்து வைத்தோம். எனவே, (மறுத்து வாழ்ந்தவர்களே!) அனுபவியுங்கள்; நாம் உங்களுக்கு அதிகப் படுத்தவிருப்பதெல்லாம் வேதனையைத் தவிர வேறன்று. (அல் குர் ஆன் 78:21-30)
நபிமொழி
“இறைவனை அஞ்ச வேணடிய அளவுக்கு அஞ்சுங்கள்! முஸ்லிம்களாக தவிர மரணிக்காதீர்கள் என்ற (3 : 102) வசனத்தை நபி (ஸல்) ஓதினார்கள். பிறகு (நரகவாசிகளுக்குக் கொடுக்கப்படும்) ஸக்கூம் எனும் மரத்திலிருந்து ஒரு துளி இவ்வுலகில் சிந்தப்பட்டால் இவ்வுலகவாசிகளின் வாழ்க்கையையே அது சீரழித்து விடும் என்று கூறிவிட்டு அதுவே உணவாகக் கொடுக்கப்படும் (நரகவாசிகளின் நிலை) எப்படி இருக்கும்!? என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) : திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா.
நரகவாசிகளில் இலேசான தண்டனைக்குரியவரது உள்ளங்கால்களில் தீக்கங்குகள் வைக்கப்படும். அதனால் மூளை கொதிக்கக் கூடியவராக அவர் இருப்பார் என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதீ.
நீங்கள் மூட்டும் நெருப்பு, நரகத்தின் வெப்பத்தில் எழுபதில் ஒரு பங்காகும் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதீ.
இவற்றை நினைவில் எந்நேரமும் நிறுத்தி அல்லாஹ் எச்சரித்துள்ள நிரந்தர நரகத்திற்குரிய ஷிர்க் எனும் இணைவைத்தல், (4 : 48,116) வட்டி வாங்குதல் (2 : 275-278), போன்றவற்றை செய்து வருவோர் கைவிட வேண்டும், மேலும் நரகத்தின்பால் நெருக்கம் ஏற்படுத்தும் இதர எல்லாவிதமான பாவமான சொல், செயல்களில் இருந்தும் வாழ்க்கை முறையிலிருந்தும் பொருள் ஈட்டலிலிருந்தும் தம்மை முழுமையாக தடுத்துக் கொள்ள உறுதி பூண்டு,(17 : 28-31) நிகழ்ந்துவிட்டவைக்கு வருந்தி அதில் மீண்டும் செல்லக்கூடிய வழிகளைக் கைவிட்டு நரகத்தின் வேதனையிலிருந்து பாதுகாவல் தேட வேண்டும். குர்ஆனில் வசனங்களைப் பார்க்க.
மேலும் அல்லாஹ்வின் உபதேசம் தொடர்கிறது:
முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் இடுகின்ற கட்டளைகளில் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்வார்கள். (அல் குர்ஆன் 66 : 6)
மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொள்ளும் தாங்க இயலாத பயங்கரமான வேதனையாம் நரகத்திலிருந்து நாமும் நம் பொறுப்பில் உள்ள நம் குடும்பத்தினரும் முழு மனித சமுதாயமும் மீட்சியும் பாதுகாப்பும் பெறக்கூடிய விதத்தில் நாம் என்றென்றும் தியாக மனப்பான்மையுடனும் இஸ்லாமிய இறை வரம்பினுள்ளும் அவற்றின் அடிப்படைக்குச் சிறிதும் மாற்றமில்லாத விதத்திலும் மன உறுதியுடனும் தெளிவுடனும் செயல்பட முனைய வேண்டும்.
உதாரணமாக ஒரு சிலர் இம்மை-மறுமை வாழ்க்கை செம்மைபெற முறையாக முயல்வதும் இறைவனைத் வேண்டித் தொழுவதும் தொழுது முடித்த பின்னர் நீண்ட நேரம் இரு கரமேந்தி அல்லாஹ்விடம் பிராத்தித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
இன்னும் சிலர் அவசர அவசரமாக தொழுது முடித்தவுடன், பிராத்தனைகளை முடித்துக் கொண்டு அல்லது துஆ எனும் பிரார்த்தனையே செய்யாமல் வெளியேறிவிடுகின்றனர். நபி (ஸல்), “அத்துஆஉ ஹுவல் இபாதா – துஆ என்பதே ஒரு வணக்கமாகும்” என்று கூறியுள்ளார்கள் என்பதை நாம் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் நினைவில் வைத்து அல்லாஹ்வைப் புகழ்ந்து, நமது அனைத்துத் தேவைகளையும் கேட்க வேண்டும். நமது தேவைகளை நிறைவேற்ற வல்ல ஒருவன் அவனே! நாம் கேட்டும் கேட்காமலும் நமக்கு எல்லாம் வழங்கிய, வழங்கிடும் கருணையாளன் அவனே! கஷ்டங்கள், நோய்கள், துயரங்கள், சோதனைகள் அனைத்தையும் நீக்க வல்லவன் அவன் ஒருவனே! என்றும், அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்துவிட்ட குற்றங்கள், குறைகள், பாவங்கள் என்று எல்லாவற்றையும் மன்னித்தருளக் கூடியவன் அவனே! என்றும் முறையாக உள்ளத்தால் நம்பி, எல்லாம் வல்லவனாகிய அல்லாஹ்விடம் மனமுருகி சமர்ப்பித்து நாமறிந்த மொழியில் நமக்காகவும் நமது குடும்பத்தினருக்காகவும் உலக முஸ்லிம்களுக்காகவும் ஈருலக வெற்றியையும் ஈடேற்றத்தையும் கேட்க வேண்டும். மிகப் பெரும் இழப்பும் வேதனையுமாகிய நரக நெருப்பில் இருந்து பாதுகாப்பும் தேடவேண்டும்.
எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! (அல்குர்ஆன் 2 :201).
அதே போல் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்ந்த அந்தஸ்தான சுவனத்தில் இடம் வேண்டியும் பணிவுடனும் மனமுருகியும் நம்பிக்கையுடனும் பிராத்திக்க வேண்டும். அவற்றின்பால் கொண்டு செல்லும் நற்செயல்களில் தொடர்ந்து இறுதி மூச்சுவரை ஈடுபட உறுதி பூண்டு உதவி கோரி பிராத்திக்க வேண்டும். இதையும் ரமலானிலும் ரமலான் அல்லாத ஏனைய நாட்களிலும் தொடர்ந்து கடைப்பிடித்திடல் வேண்டும்.
oOo
(மீள் பதிவு)
தொடரும், இன்ஷா அல்லாஹ் …