மீண்டும் ஒரு ரமளான்: பிறை 18
புனித ரமளான் மாதத்தில் தனியாக விஷேசமான வணக்கங்கள் ஏதேனும் உள்ளனவா? உள்ளன என்றால் அவை யாவை? இதனை நாம் அறிந்து கொள்வது அவசியமானதாகும். ஏனெனில் புனித ரமளானில் நாம் செய்யும் ஒவ்வொரு நல்லமல்களுக்கும் ஒன்று முதல் 700 மடங்கு நன்மைகளை இறைவன் தருவதாக நபி (ஸல்) கூறியுள்ளார்கள். அவ்வளவு மகத்துவமிக்க முக்கியமான இத்தினங்களில் நாம் செய்யும் செயல்களின் அடிப்படை நபி (ஸல்) காட்டித் தந்தவைதாமா? என அறிந்து செய்வது மிகவும் அவசியமானதாகும்.
இஸ்லாத்தைப் பொருத்தவரை ஒரு வணக்கத்தைச் செய்ய வேண்டுமெனில் அதனை நபி (ஸல்) காட்டித் தந்திருக்க வேண்டும். இல்லையேல் அது வணக்கமாக இறைவனிடத்தில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. வணக்கத்தில் ஃபர்ளு, சுன்னத் என இரு வகைகள் இருக்கின்றன. இதில் ஃபர்ளு என்பது முஸ்லிம்கள் அனைவரும் கட்டாயமாக நிறைவேற்ற இறைவனால் கட்டளையிடப்பட்டவையாகும். சுன்னத் என்பது நபி (ஸல்) கட்டாயக் கடமையல்லாத அமல்களாக செய்து காட்டியவைகளாகும்.
புனித ரமளான் மாதத்தில் நோன்பு வைப்பதும், நாள்தோறும் ஐவேளை தொழுவதும் கட்டாயக் கடமைகளாகும். இவையன்றி சுன்னத்தான வணக்கங்களாக ஒவ்வொரு ஃபர்ளுத் தொழுகைக்கு முன்னும் பின்னும் சில தொழுகைகளை நபி (ஸல்) தொழுது காண்பித்துள்ளார்கள். இவையன்றி ரமளான் மாதத்தில் பிரத்தியேகமான எந்த ஒரு வணக்கத்தையும் நபி (ஸல்) செய்து காட்டித் தரவில்லை.
இன்று முஸ்லிம் சமூகத்தில் ரமளான் மாதத்தில் மட்டும் தொழ வேண்டிய தொழுகையாக பாவித்து ‘தராவீஹ்’ என்ற தொழுகை முஸ்லிம்களில் பெரும்பாலோரால் தொழப்படுவதைக் காணமுடிகிறது. இவ்வாறான ஒரு தொழுகையை நபி (ஸல்) தொழுது காட்டியிராத பட்சத்தில் அதனைத் தொழுவதால் நன்மை கிடைக்குமா என்ற கேள்வி ஒரு புறமிருக்க நபி (ஸல்) காட்டித்தராத ஒரு வணக்கத்தை இஸ்லாத்தின் பெயரில் செய்து இஸ்லாத்தில் புதிய ஒன்றை அறிமுகப்படுத்தும் ஒரு மாபெரும் குற்றத்தைச் செய்தவர்களாக ஆகும் அபாயமும் இருக்கிறது. எனவேதான் இம்மாதத்தில் அவ்வாறு விசேஷமான தொழுகைகள் ஏதாவது உண்டா என அறிய வேண்டியது அத்தியாவசியமாகிறது.
புனித ரமளான் இரவு வேளைகளில் நின்று வணங்குவதற்கு நபி(ஸல்) அதிகமாக ஆர்வமூட்டியுள்ளனர். இதற்கு ஏராளமான சான்றுகள் ஹதீஸ்களில் உள்ளன. ஆயினும் ரமளானில் செய்வதற்கென்று நபி (ஸல்) பிரத்யேகமான வணக்கம் எதையும் கற்றுத் தரவில்லை. அவர்களும் பிரத்யேகமாக எந்த வணக்கத்தையும் செய்யவில்லை.
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘ரமளான் மாதத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எப்படியிருந்தது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ரமளானிலும் மற்ற மாதங்களிலும் அவர்கள் (இரவில்) பதினொரு ரக்அத்துகளுக்கு அதிகமாகத் தொழுததில்லை. (முதலில்) நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பிறகு மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள். நான் ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் வித்ரு (மூன்று ரக்அத்கள்) தொழுவதற்கு முன்னால் உறங்குவீர்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘என் கண்கள்தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை’ என்று பதிலளித்தார்கள்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான் (ரஹ்) நூல்கள்: புகாரி, 3569. முஸ்லிம், 1343.
ரமளானில் விசேஷமான தொழுகை ஏதும் உண்டா என்பதை அறிந்து கொள்வதற்காக அபூஸலமா (ரலி) கேள்வி கேட்கின்றார். ரமளானுக்கென்று விசேஷமான தொழுகை ஏதுமில்லை என்று ஆயிஷா (ரலி) விடையளிக்கின்றனர். சுன்னத்தான தொழுகைகளை வீட்டில் தொழுவதுதான் சிறந்தது என அறிவுறுத்திய நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தான இரவு வணக்கத்தை அவர்களின் மனைவியர் தவிர மற்றவர்கள் அதிகம் அறிந்திருக்க இயலாது.
ரமளான் அல்லாத நாட்களில் நபி (ஸல்) என்ன தொழுதார்களோ அதைத்தான் ரமளானிலும் தொழுது வந்துள்ளனர். அதைவிட அதிகமாக எதையும் தொழுததில்லை என்பதை மேற்காணும் ஹதீஸ் மூலம் தெளிவாக அறியலாம்.
இத்தொழுகையானது இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடும் இரவுத் தொழுகையான (ஸலாத்துல் லைல்) ‘தஹஜ்ஜுத்’ தொழுகை பற்றியதாகும். அதைத்தான் இன்று ரமளானின் இரவுகளில் ‘தராவீஹ் தொழுகை’ என்ற பெயரில் பரவலாக முஸ்லிம்கள் தொழுது வருகின்றனர். சிலர் தராவீஹ் தொழுகை வேறு தஹஜ்ஜுத் தொழுகை வேறு என்றும் தராவீஹ் தொழுகை ரமளான் மாதத்திற்கே உரிய விசேஷமான தொழுகை என்றும் விளக்கம் கூறுகின்றனர். இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு வாதமாகும். ஏனெனில் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியே ரமளான் தொழுகையைப் பற்றித்தான். கூரிய மதி படைத்த அவர்கள், ரமளானில் விஷேசத் தொழுகை கிடையாது என்பதை, “ரமளானிலும் அல்லாத காலங்களிலும்” என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளதை இங்கே கவனிக்க வேண்டும்.
இந்த பதினோரு ரக்அத்கள் தொழுகை தஹஜ்ஜுத் தொழுகைதான் என்றும் தராவீஹ் தொழுகை ரமளானில் தொழும் விஷேச தொழுகை என்றும் கூறுவோர் அதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ரமளானுக்கு என்று தனியாக தொழுகைகள் இல்லை என்பதற்கு மேலும் பல சான்றுகள் உள்ளன.
oOo
(மீள் பதிவு)
தொடரும், இன்ஷா அல்லாஹ் …