இஃதிகாஃப் எனும் இறைதியானம்! (பிறை-17)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 17

இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃபில்) இருக்கும்போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் – இவை அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அந்த வரம்புகளை மீற முற்படாதீர்கள். (அல்குர்ஆன் 2:187).

‘இஃதிகாஃப்’ எனும் பள்ளிவாசலில் தங்கி இருந்து இறைவணக்கத்தில் ஈடுபடுவது நபி (ஸல்) அவர்களின் சிறப்புமிக்க வழிகாட்டலாகும். ரமளான் மாதத்திலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம். நபி (ஸல்) தொடர்ந்து நடைமுறைப்படுத்திக்காட்டிய இஃதிகாஃப் எனும் இறைவணக்கம் பற்றிய தெளிவான அறிதலோ ஆர்வமோ மக்களிடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு மிகக் குறைந்த முஸ்லிம்களே இவ்வணக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

நபி (ஸல்) அவர்களும், நபியவர்களின் குடும்பத்தினரும், நபித்தோழர்களும் ஆர்வமுடன் தொடந்து கடைப்பிடித்த  இஃதிகாஃப் – பள்ளியில் தங்கும் சிறப்பான ‘சுன்னத்’ மக்களிடையே மறக்கப்பட்டுள்ளது. நினைவூட்டலுக்காக இஃதிகாஃப் பற்றிய நபிவழிகள் சில இங்கு:

நபி (ஸல்) ஒவ்வொரு ரமலானிலும் பத்து நாட்களே இஃதிகாஃப் இருப்பார்கள். அவர்கள் மரணித்த ஆண்டில் இருபது நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். (அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) அவர்கள். நூல்: புகாரி, 2044).

நபி (ஸல்) ரமளானின் கடைசிப்பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; “ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!” எனக் கூறுவார்கள். (அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) அவர்கள். நூல்: புகாரி, 2020).

நபி (ஸல்) ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்! (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள். நூல்: புகாரி, 2025)

நபி (ஸல்) மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்! (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்: புகாரி, 2026).

நபி (ஸல்) ரமளானில் நடுப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும் அந்த இரவின் காலையில்தான் இஃதிகாஃபிலிருந்து வெளியேறுவார்கள். “யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாட்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! இந்த இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது! (அந்தக் கனவில்) காலை நேரத்தில் ஈரமான மண்ணில் நான் ஸஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாட்களில் தேடுங்கள். (அந்த நாட்களின்) ஒவ்வொரு ஒற்றைப் படை இரவிலும் அதைத் தேடுங்கள்!’ எனக் கூறினார்கள். அன்றிரவு மழை பொழிந்தது. அன்றைய பள்ளிவாயில் (ஈச்சை ஓலைக்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. எனவே, பள்ளிவாயில் ஒழுகியது. இருபத்தொன்றாம் நாள் ஸுப்ஹுத் தொழுகையில் நபி (ஸல்) அவர்களின் நெற்றியிலே ஈரமான களிமண் படிந்திருந்ததை என்னுடைய இரண்டு கண்களும் பார்த்தன. (அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி)  நூல்: புகாரி, 2027).

நபி(ஸல்) பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள்; நான் அதை வாருவேன், இஃதிகாஃப் இருக்கும்போது தேவையிருந்தால் தவிர வீட்டிற்குள் வரமாட்டார்கள். (அறிவிப்பவர் ஆயிஷா(ரலி) அவர்கள். நூல்: புகாரி, 2029).

நபி (ஸல்) ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். நான் அவர்களுக்காக (பள்ளியில்) ஒரு கூடாரத்தை அமைப்பேன். ஸுப்ஹுத் தொழுதுவிட்டு அதற்குள் நுழைந்து விடுவார்கள். ஹஃப்ஸா (ரலி) என்னிடம் தமக்கொரு கூடாரம் அமைக்க அனுமதி கேட்டார். அவருக்கு நான் அனுமதி கொடுத்தேன். அவர் ஒரு கூடாரத்தை அமைத்தார். இதை ஸைனப் பின்த் ஜஹ்ஷு (ரலி) பார்த்தபோது அவர் மற்றொரு கூடாரத்தை அமைத்தார். நபி (ஸல்) காலையில் எழுந்தபோது பள்ளியினுள் பல கூடாரங்களைக் கண்டு, “இவை என்ன?” என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. நபி (ஸல்), “இதன் மூலம் நீங்கள் நன்மையைத்தான் நாடுகிறீர்களா?” என்று கேட்டுவிட்டு, அந்த மாதம் இஃதிகாஃப் இருப்பதை விட்டுவிட்டார்கள். பிறகு ஷவ்வால் மாதம் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். (அறிவிப்பவர் ஆயிஷா(ரலி) அவர்கள். நூல்: புகாரி, 2033).

இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்திலும் இஃதிகாஃப் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன!

“இறைத்தூதர் அவர்களே! மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு இஃதிகாப் இருப்பதாக அறியாமைக் காலத்தில் நான் நேர்ச்சை செய்திருந்தேன்!” என்று உமர் (ரலி) கூறினார். அவரிடம் நபி (ஸல்) “உம் நேர்ச்சையை நிறைவேற்றுவீராக!” என்றார்கள். உமர் (ரலி) ஓர் இரவு இஃதிகாஃப் இருந்தார். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள். நூல்: புகாரி, 2042).

புறக்கணிக்கப்பட்ட இந்நபிவழியை முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒருமுறையேனும் நிறைவேற்றிட இறைவன் அருள் புரிவானாக!

oOo

(மீள் பதிவு)
தொடரும், இன்ஷா அல்லாஹ் …