வருமுன்

Share this:

ழைய டைரிக் குறிப்பொன்றைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த வாக்கியம் கவனத்தைக் கவர்ந்தது. உறவினர் ஒருவர் ஹஜ்ஜுக்குச் சென்றிருக்கிறார். அரஃபாவிலிருந்து மினா செல்லும் வழியில் இறந்துவிட்டார்.

அங்கேயே நல்லடக்கம் செய்துவிட்டனர். அது, “வண்ணார் வாகனத்தின் மீதேறி பயணம் சென்றபோது அங்கேயே விழுந்து இறந்தார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது நடந்தது இருபதாம் நூற்றாண்டின் வெகு ஆரம்பக் காலங்களில். அப்பொழுதெல்லாம் பயண வாகனம் கால்நடைகள்! அவரவர் வசதிக்கேற்ப ஒட்டகம், குதிரை, சற்று சல்லிசாக என்றால் கழுதையாக இருந்திருக்கும் போலும்.

ஹஜ் பயணம் என்றாலே, அண்மைக் காலம்வரை, அது பெரும் பிரயத்தனமான விஷயம். பொருளாதார ஏற்பாடு. உடல் ஆரோக்கியம் என்பனவற்றை எல்லாம் தாண்டி, ஹஜ்ஜிற்கான பயணம் இருக்கிறதே அது மகா கடினம். ரயில் பிடித்து மதராஸ் வருவார்கள். பிறகு மற்றொரு ரயில் பிடித்து இரண்டு நாள் பயணமாக பம்பாய். அடுத்து அங்கிருந்து கப்பலில் ஒரு வாரமோ, பத்து நாளோ தண்ணீரில் மிதந்து ஜித்தா. அங்கிருந்து, மோட்டார் வாகனம் கொஞ்சம், மிருக சவாரி மிச்சம் என்று இருந்திருக்கிறது.

ஹஜ் பயணத்துடன் இணைந்திருக்க வேண்டிய இறையச்சமும் மரண எதிர்பார்ப்பும் பெரும்பாலானவர்களின் மனங்களில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன;

சென்ற இடத்தில் உணவு சமைக்க அதற்கான மளிகைகளையும் மூட்டையாகச் சுமந்து சென்றிருக்கிறார்கள். ஒரு மாதத்திற்கும்மேல் தங்கி, ஹஜ்ஜையும் ஜியாரத்தையும் முடித்துக்கொண்டு, மீண்டும் கப்பல், ரயில் மீண்டும் ரயில் என்று ஊர் வந்து சேர அனைத்தும் சொகுசுக்கு வாய்ப்பு அற்ற சிரமமான பயணம். தவிர சஊதியில் கழியும் பயண நாள்கள் கோடையானாலும் சரி, குளிர்காலமாக இருந்தாலும் சரி, நம் சீதோஷ்ணத்திற்கு மட்டுமே பழகிய உடலுக்கு ஏக அவஸ்தை.

காரணங்களான இவையெல்லாம் சேர்ந்து, அக்காலத்தில் ஹஜ் பயணி என்றாலே முதியவர்களும் முதுமையைச் சார்ந்தவர்களும்தான். வயது ஒருபுறம், சந்திக்கவிருக்கும் சிரமம் மறுபுறம் என எல்லாமாகச் சேர்ந்து, எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டுப் பயணிகள் பிரியா விடை பெற்றுக்கொண்டு பிரிய, வழியனுப்புபவர்களும் “அல்லாஹ்வினுடைய காவலாய் போய் வாருங்கள். ஆயுள் மிச்சமிருந்து திரும்பி வந்தால் பார்ப்போம்” என்று கையசைக்க மனம் ஒரு முன்னேற்பாடான முடிவிற்கு வந்திருக்கும். சுருக்கமாகச் சொன்னால் அக்காலத்தில் ஹஜ் பயணமானது மரண அச்சம், இறையச்சம் இரண்டையும் அதிகப்படுத்துவதற்கான விஷயமாக அமைந்து போயிருந்தது.

பிறகு ஆகாயப் பயணம் பரவலாகி, அது அனைவருக்கும் ஏதுவாகி, மோட்டார் வாகனங்களில் சொகுசு அதிமாகி, அடிப்படை வசதிகளுக்காக என்றிருந்த தங்குமிடங்கள் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்து, ஹரம் ஷரீஃபும் ஹஜ் கிரியைகளுக்கான இதர இடங்களும் உசத்தியாய் உருமாறிவிட, பணப் புழக்கம் அதிகரித்துவிட்ட சமகால முஸ்லிம்கள் மத்தியில் ஹஜ் கடமையை நிறைவேற்ற ஓய்வூதிய வயதிற்குக் காத்திருக்கும் மனோபாவம் மாறிவிட்டது. இவையாவும் நலமே.

ஆனால் இவை இலேசான பக்க விளைவொன்றை நாமறியாமல் உருவாக்கிவிட்டது. என்ன அது?

ஹஜ் பயணத்துடன் இணைந்திருக்க வேண்டிய இறையச்சமும் மரண எதிர்பார்ப்பும் பெரும்பாலானவர்களின் மனங்களில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன; அல்லது மறக்கடிக்கப்பட்டு விட்டன. துரித பயணமும் நவீனத்தின் பளபளப்பும் ஆயுளின் தற்காலிகத் தன்மையை மக்களின் மனங்களில் மழுங்கடித்துவிட்டன. இப்படியான ஒரு நிலையில், ‘என்னுடைய சக்தியை வண்ணார் வாகனத்திலும் வெளிப்படுத்துவேன், கண்டுபிடித்து நட்டு வைத்திருக்கிறாயே இயந்திரங்கள், அதன் வாயிலாகவும் காட்டுவேன்’ என்று இறைவன் தன்னுடைய சக்தியை. தன்னுடைய நாட்டத்தை இலேசாக, வெகு இலேசாகக் கோடிட்டுக் காட்டும்போது திடுக்கிட்டு விழித்து அப்பொழுதுதான் அலறுகிறது மனம்.

யாத்திரை சென்றவர்கள் கவனித்திருப்பார்கள். மக்காவின் ஹரம் ஷரீஃபில் நடைபெறும் ஐவேளை தொழுகை ஒவ்வொன்றின் இறுதியிலும் ஜனாஸாத் தொழுகை இல்லாதிருக்காது. அதுவும் பலமுறை ஒன்றுக்கும் மேற்பட்ட மைய்யித்கள்தான். தாங்கள் தங்கியிருக்கும் நாற்பது நாள்களில் குறைந்தபட்சம் நானூறு மைய்யித்களுக்கான தொழுகையிலாவது அவர்கள் கலந்து கொண்டிருந்திருப்பார்கள். எதற்கு இந்தச் சங்கடமான புள்ளிவிபரம் எனில், மக்க மாநகரம் புனித எல்லைக்குள் அமைந்திருக்கிறதே தவிர, மரண மலக்குகளுக்குத் தடை விதிக்கப்பட்ட பகுதியிலன்று என்பதை நாம் உணரவே.

புனித யாத்திரையில் இருக்கும்போது மரணமானது இயற்கையாகவும் வரலாம்; விபத்து வடிவில் நேரலாம். ஒருவரது விதியின் முடிவு அங்குதான் என்று இறைவன் நிர்ணயித்திருந்தால் அதுதான். அவ்வளவுதான். உதிரியான மரணங்கள் நிகழும்போது அது நம் கவனத்தைப் பெரிதாக ஈர்ப்பதில்லை. பெரும் விபத்துகளில் ஒட்டுமொத்தமாகப் பலர் இறக்கும்போது நமது அடிவயிற்றில் பகீர் என்கிறது. இதற்கு முன்னர் 1990 ஆம் ஆண்டு குகைப்பாதை நெரிசலில் சிக்கி ஆயிரத்து நானூற்று சொச்ச யாத்ரீகர்கள், 1997 ஆம் ஆண்டு மினா பகுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் முந்நூறு என்று பெரும் எண்ணிக்கையிலான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதன் வரிசையில் இந்த ஆண்டு நிகழ்ந்த கிரேன் விபத்து பெரும் சோக நிகழ்வு.

விபத்தில் மரணமடைந்த ஒவ்வொருவருக்கும் ஒன்றேமுக்கால் கோடி ரூபாய் மரண ஈட்டுத் தொகை, அக்குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு அடுத்த அண்டு அரசாங்க செலவில் ஹஜ் என்று நிவாரணங்களை அறிவித்துள்ள சஊதி அரசர் விபத்திற்கான காரணம், அலட்சியம், விதி மீறல் ஆகியனவற்றை ஆராய்ந்து உரிய நிறுவனத்தின்மீது தகுந்த தண்டனையும் அபராதமும் விதிப்பதிலும் தீவிரம் காட்டுவார் என நம்புவோம். இவ்விதமான இவ்வுலகுசார் நடவடிக்கைகள் முக்கியம். அதைவிட முக்கியம் இத்தகைய விபத்துகளில் ஒளிந்துள்ள நமக்கான பாடம்.

சூரா ஆலு இம்ரானில் 185ஆவது ஆயத்தில் அல்லாஹ் கூறுகிறான், ”ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்…” என்று.

வளத்தைக் கொடுக்க நினைத்தால் அதை அவன் கூரையைப் பிரித்தும் கொட்டுவான் என நம்புகிறோமோ இல்லையோ, சுவைக்க வேண்டிய மரண நேரம் நெருங்கிவிட்டால் அது மக்காவின் பள்ளிவாசலாகவே இருந்தாலும்கூட, கூரை இடிந்து வந்தடையும் என்பது மறுக்கப்படலாகாது. நவீன உலகில் மயங்கிப்போய் அதில் சிதறிவிடாத மரண கவனம் நமக்கு அதி முக்கியம். ஏனெனில்-

மரணம் வரும்முன் வாழ்க்கையில் நமக்கான முன்னுரிமைகளைச் சீரமைக்க அதுவே உதவும்.

-நூருத்தீன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.