தேசியக்கொடியில் மோடி கையெழுத்திட்டு சர்ச்சை!

Share this:

புதுடெல்லி: தேசியக்கொடியின் மீது பிரதமர் மோடி கையெழுத்து போட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பிரதமர் போன்ற பதவியில் இருப்பவர்கள் தேசியக்கொடிக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று முன்தினம் நியூயார்க் நகரின் வால்டோர்ப் ஆஸ்டோரியா ஓட்டலில், இந்தியாவின் சார்பில் நடத்தப்பட்ட அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விருந்தை சிறப்பாக அமைத்துக் கொடுத்ததாக தலைமை சமையற்கலைஞர் விகாஸ் கன்னாவை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார்.

அப்போது விகாஸ்கன்னா, இந்திய தேசியக்கொடியில் மோடியின் கையெழுத்தை பெற்றதாக கூறப்படுகிறது. அதை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு, தான் வெகுமதியாக கொடுக்க போவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மோடி கையெழுத்திட்ட கொடியை விகாஸ்கன்னா ஊடகங்களுக்கும் காண்பித்தார்.

இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளானதை அடுத்து, விதிமுறைகள் ஏதேனும் மீறப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க, கையெழுத்திடப்பட்ட தேசியக் கொடியை அதிகாரிகள் திரும்பப் பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தேசியக் கொடியில் மோடி கையெழுத்திடவில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் மையத்தின் (பி.ஐ.பி.) இயக்குநர் பிராங்க் நொரோன்ஹா, டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”மோடி கையெழுத்திட்ட தேசியக் கொடி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. தலைமை சமையற் கலைஞரின் (விகாஸ்கன்னா) மாற்றுத்திறனாளி மகள் கால் விரல்கள் மூலம் அழகிய வேலைப்பாட்டுடன் வடிவமைத்து இருந்த ஒரு துண்டு துணியில்தான் பிரதமர் கையெழுத்திட்டார். அந்த துணியில் வெள்ளை நிறமோ, அசோக சக்கரமோ கிடையாது” என்று அவர் மறுப்பு தெரிவித்தார்.

தேசியக்கொடியின் மீது பிரதமர் கையெழுத்திட்டது, இந்திய தண்டனை சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளதா? என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜ்வாலாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ”இதுபோன்ற விஷயங்களை, பா.ஜ.க.போல் நாங்கள் பெரிதுபடுத்தமாட்டோம். நாங்கள் பிரதமர் அலுவலகத்தை எப்போதும் மதிக்கிறோம். தேசியக்கொடிக்கு மரியாதை அளிப்பது, 125 கோடி மக்களுக்கு செய்யும் மரியாதை ஆகும்.

பிரதமர் மோடி எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், அதைவிட உயர்வானது தேசியக் கொடி என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எங்களைப் பொறுத்தவரை பிரதமர் போன்ற பதவியில் இருப்பவர்கள் தேசியக்கொடிக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறோம்” என்றார்.

தகவல்: அபூ ஸாலிஹா (நன்றி: விகடன் 26-09-2015)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.