அவர் ஒரு வடை விற்பனையாளர். (இல்லையில்லை, நீங்கள் நினைக்கிற அந்த ‘அவர்’ அல்லர், இவர் வேறு). தள்ளுவண்டியில் வைத்து மிகவும் பக்குவமாகச் சுட்டெடுத்த வடைகளை விற்பவர்.
நாள்தோறும் 500 வடைகளை விற்று வந்தார். சுவையும் சுத்தமும் சுகாதாரமும் மிக்க அவருடைய வடைகளை மக்கள் விரும்பி வாங்கி உண்டு மகிழ்ந்தனர்!
வடைக்குத் துணையாக நல்ல சட்னியும் உருசியாக இருக்கவும், தரத்தில் சிறிதும் மாற்றுக் குறையாமல் பார்த்துக் கொண்டதாலும் தொழில் மூலம் கணிசமான இலாபம் அவருக்குச் சேர்ந்தது.
மீந்து போகும் சில வடைகளை ஏதிலிகளுக்கும் தெருவிலங்கினங்களுக்கும் ஈந்தும் புண்ணியம் ஈட்டினார்.
அவ்வணிகர் தன் ஒரே மகனை, அடுத்துள்ள பெருநகரத்தில் பேர்பெற்ற கல்லூரியில் வணிக மேலாண்மை (MBA) படிக்க வைத்தார். மகனும் நன்குப் படித்துத் தேறிவந்தான்.
படிப்பு முடித்து வந்த மகனுக்கு, இந்த வண்டியில் வடை விற்பனை கௌரவமானத் தொழிலாகத் தோன்றவில்லை. என்றாலும், தந்தையின் மனம் நோகும்படிக் கருத்துச் சொல்லாமல், வடை வியாபாரத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்த வேண்டும் என்ற தன் ஆசையைத் தெரிவித்தான்.
தந்தையிடம் சென்று தன் படிப்பறிவைக் கொண்டு, வடை வணிகத்தை மேம்படுத்த எண்ணுவதாகத் தெரிவித்தான். மகனின் உயர்படிப்பை மதித்த தந்தையும் அவனுடைய ஆலோசனைகளை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
மகன் சொன்னான்: “அப்பா, விரைவில் பொருளாதாரத் தேக்கநிலை வர இருக்கிறது; ஆகவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், செலவினங்களைக் கட்டுப்படுத்தி அதிக ஆதாயம் அடைய வேண்டும்”.
“என்ன செய்யலாம், சொல்லு”
“மீந்து போகும் வடைகளை யாருக்கும் தர்மம் செய்துவிடாமல் மறுநாளும் பொரித்துப் புதியதாக்கி விற்போம், மேலும், ஒவ்வொரு நாளும் புதிய எண்ணெய் இடுவதால் அதிகம் செலவாகிறது. ஆகவே, சற்றே பழைய எண்ணெய்யையும் பயன்படுத்துவோம்”
மகனின் ஆலோசனையை அந்தத் தந்தை ஏற்றுக் கொண்டார். மீந்த வடைகளை தர்மம் செய்யாமலும், புதிய வடைகள் தயாரிப்பில் 10% பழைய எண்ணெய்யும் பயன்படுத்தப்பட்டது. வாடிக்கையாளர்களும் மாற்றம் அறியாதவர்களாய் வாங்கி உண்டனர்.
மறுநாள் பழைய எண்ணெய் 20% மறு சுழற்சி என்று தொடங்கிப் படிப்படியாக 50% வரை சென்றது.
சுவை குறைய, அதன்பிறகு வணிகம் நொண்டியடிக்கத் தொடங்கிற்று. 500 வடைகள் விற்ற இடத்தில் 100 விற்பதே கடினமாக இருந்தது. காரணங்களை ஆய்ந்த போது, மக்களிடம் பொருளாதார தேக்கநிலை நிலவுவதாக, ‘படித்த மகன்’ சொன்னான். ஆனால் அனுபவம் மிக்க அந்தத் தந்தைக்கோ தவறு எங்கு என்று புரிந்தது.
அடக்கச் செலவினக் குறைப்பு (Cost cutting) என்ற பெயரில் தரத்தில் தாழ்ந்ததுதான் வணிகச் சரிவுக்குக் காரணம் என்று விளங்கிக் கொண்டார்.
மீண்டும் தரத்தை உயர்த்தி, வணிகத்தில் பழைய நிலையை அடைய உறுதி பூண்டார்.
மகனை அழைத்துச் சொன்னார். “குறுகிய காலத்தில் அதிக ஆதாயம் தேட நினைக்கும் பேராசைக்குத்தான் பொருளாதாரத் தேக்க நிலை (Recession) என்று பெயர் வைக்கின்றீர்கள் போலும். உன் படிப்புக்கு என் தொழிலில் பாத்திரம் கழுவும் வேலைதான் தர இயலும், மற்ற உன் ஆலோசனைகளை உன்னோடே வைத்துக்கொள். இனி பழைய தரத்துடன் பழைய வணிக நிலையை எட்டிப் பிடிப்பேன்” என்று சூளுரைத்துத் தரத்தையும் வணிகத்தையும் மீட்டெடுத்தார்.
*அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்*
என்ற குறள்படி *தீதின்றியும் திறமையாகவும் ஈட்டும் செல்வத்தில்தான் நல்ல அறமும் இன்பமும் பெற முடியும்* என்பதை வணிகர்கள் விளங்கினால்தான் ஒரு நாடு உருப்படும்.
வாழ்வதற்குப் பொருள் வேண்டும் – நாம்
வாழ்வதிலும் பொருள் வேண்டும்.
oOo
ஆங்கில மடலொன்றின்
மொழிபெயர்ப்பு ஆக்கம்: இப்னு ஹம்துன்