இதயமெல்லாம் இனிக்கும் இளம்கவிஞர் இப்னு ஹம்துனின் மானுடம் பாடும் ‘மௌனத்தின் பாடல்’
இரத்தினச் சுருக்கமான இலக்கிய வடிவம் கவிதை. சங்ககாலம் முதல் சமகாலம் வரை உள்ள கவிதைகளில் இன்றைய கவிதைகள் உணர்ச்சியிலும் உள்ளடக்கத்திலும் புதியதொரு உருமாற்றம் பெற்றுள்ளன.
கவித்திறனும் கருத்தாழமும் மிக்க கவிதைகள் மனித நேயம் – மானுட மகிழ்ச்சி – மக்கள் சுதந்திரம் – மனித எழுச்சி என்கிற மனிதமேம்பாட்டால் தமிழுக்கும் வாழ்வுக்கும் புது முகம் தந்துள்ளன. சமகால அழுக்கை – சமூக வாழ்வின் அவலத்தை – அவமானத்தை – வீழ்ச்சியை – அடக்குமுறையை – ஒடுக்குமுறையை அழுத்தமாய்ப் புலப்படுத்தியுள்ளன.
‘இன்னவைதாம் கவிஎழுத ஏற்றபொருள் என்றுபிறர்
சொன்னவற்றை நீர்திரும்பிச் சொல்லாதீர்
சோலை கடல் மின்னல் முகில் தென்றலினை மறவுங்கள்
மீந்திருக்கும் இன்னல் உழைப்பு ஏழ்மை உயர்வுகளைப் பாடுங்கள்’
என்கின்றார் ஈழத்து மஹாகவி உருத்திரமூர்த்தி அவர்கள்.
எளிய பதங்கள், எளியநடை, எளிதில் அறிந்துகொள்ளக் கூடிய சந்தம், கவிநயம் என்பவற்றின் காவியங்கள் தற்காலத்தில் செய்து தருவோன் தாய்மொழிக்குப் புதிய உயிர் தருகின்றான்’ என்றான் தமிழகத்தில் பிறந்த பாரதி.
மகாகவி பாரதியின் வெற்றிக்குக் காரணமே அவன் கவிதையை சமூக மயப்படுத்தியதுதான். புலமையின் உச்சியிலிருந்து எளிமைத்தளத்திற்கு இறங்கி வந்து அவன் கவிதைகளால் மக்களோடு பேசிப் பழகிப் பகிர்ந்துகொண்ட அனுபவம் பேருண்மையானது.
பாரதி – பாரதிதாசன் போன்றோரது தொடர்ச்சியில் அவர்களது கவிதைகள் அவர்கள் காலத்திற்கேற்ப அமைந்திருந்தன. ஆனால் இந்நிலமை 1960இல் மாறத் தொடங்கியது.
இந்தக் கவிதைப் போக்கு ஆரோக்கியமான ஒரு பரம்பரையை உருவாக்கியதா? என்கிற கேள்வியும் நமக்குள் இருக்கின்றது. ஆனால் அது அதிகமானோரைக் கவிதை உலகுக்கு இழுத்து வந்துள்ளது என்பதே எதார்த்தம்.
தம் ஆரம்ப காலத்திலிருந்தே சமூக எதார்த்தத்தில் காலூன்றி நிற்பவர் கவிஞர் இப்னு ஹம்துன். அவரது சமூக விமர்சனம் சார்ந்த கவிதைகள் அவரது கவித்துவ ஆளுமையின் இன்னொரு முகமாகும்.
சமூக ஏற்றத்தாழ்வு – பொய்மை – போலித்தனம் – வறுமை – ஊழல் என்பனவற்றுக்கு எதிரான தம் கருத்துகளைக் கவிதைகளில் வெளிப்படுத்துபவர். அவரது குறும்பாக்கள் என்னைக் கவர்ந்தவை. அவரது கவிதைகளில் தொனிக்கும் உணர்வுகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை.
அந்த வகையில்,
‘மண்ணில் மெய்தேடும் சமன்பாடே
மானுடர் கவிதை’
என்று ‘கவிதை’ பற்றிச் சொல்லும் அவரது கச்சிதமான கருத்து எதார்த்த தரிசனமானது.
இப்னு ஹம்துன் எல்லோருடைய பண்டிகைகளையும் எல்லா இனத்தவரும் ஒன்றாய்க்
கொண்டாடுகிறோம் என்கின்றார்.
ஆனால்,
‘மனப்பாங்கில் தொய்வடைந்தாலோ
அடிக்கடி கொண்டாடுவதுண்டு
தேர்தல் திருநாள் – தேசியப் பெருநாள்’ என்றும் சொல்கின்றார். தேர்தல்விழா என்பது இலங்கை, இந்திய நாடுகளில் இனநல்லிணக்கமுள்ள மக்களை இனம் பிரிக்கும் திருவிழா என்பதை நாசூக்காகக் கூறும் வரிகள், அவர் வாழும் காலத்தைக் கண்ணாடியாய்க் காட்டுகின்றன.
இயற்கை எழில்நிறைந்த பூமி இந்தியபூமி. உலகுக்கு அன்பு போதித்த புத்தனும் காந்தியும் பிறந்த பூமி. ஆனாலும் இங்குள்ள கிராமங்களுக்குள் சுதந்திரம் நடந்துபோகப் பாதைகளே இல்லை. அதற்குக் காரணம் இங்குள்ள அநாகரீக அரசியல் கலாசாரம்.
இன்று அரசியல் என்பது மூலதனம் இல்லாமலேயே பத்துப் பரம்பரைக்குச் சொத்துச் சேர்க்க உதவும் பரம்பரை வர்த்தகமாய் இருக்கிறது. சுவரேறிக் குதித்துத் திருடுவதைவிட கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு காகிதத்தில் கையெழுத்திட்டுக் கோடி கோடிக் கரன்சிகளைக் கபளீகரம் செய்துவிடலாம் என்ற எண்ணத்தோடேயே இன்று பெரும்பாலோர் அரசியலுக்கு வருகின்றார்கள். வருமானத்திற்காகத் தன்மானத்தையும் இழந்துவிடுகின்றார்கள்.
‘எங்கள் தேசம் இந்திய தேசம், உலகம் யாவினும் உன்னத தேசம்’ என்று கூறும் இப்னு ஹம்துன், அந்த தேசத்தின் ஒவ்வொரு ஊரிலும் ஒன்றுமே தெரியாத பாமர மக்கள் சுரண்டப்படுகின்றார்கள் என்பதையும் வறுமைக்கோட்டுக்குக் கீழே வெளவால்களாகத் தொங்கிக்கொண்டிருக்கும் பஞ்சப் பரம்பரைக்கு ஒரு வேளைச் சோற்றிற்கும் கூட உத்தரவாதமில்லை என்கிற தகவலைப் படிம வடிவத்தில் நமக்குப் பகிர்ந்து கொள்கிறார். இங்கே சுரண்டப்பட்டவர்கள் கேள்வி கேட்கக் கூடத் திராணியில்லாதவர்களாகத் திரிகின்றார்கள். ஆனால் இந்தச் சமூக அமைப்பைக் கவிஞர்கள் மட்டும்தான் கேள்வி கேட்கின்றார்கள்.
அந்தக் கேள்வியின் தொனியில் இதோ ‘புகை மறப்போம்’ எனும் ஒரு கவிதை (பக்:65)
தேசத்தின் வளமதனைச் சுருட்டுகின்ற தீயவர்போல்
தேகத்தின் நலமதனைச் சுருட்டுகின்ற வெண்சுருட்டே…’
‘சுருட்டுகின்ற வெண்சுருட்டே’ என்கின்ற குறியீடு, நமது உள்ளத்தில் உண்மையைப்
பேசுகின்றது.
வட்டிக்கடன் இறுக்கவும் வறுமைத்தனம் போக்கவும் உறவினது நகை மீட்டுக் கொடுக்கவும் வெளிநாட்டிற்குப் புறப்பட்டுச் செல்லும் இளைஞர்களின் ஊதியமற்ற வாழ்க்கை அரபுநாடுகளிலும் கூட ஒரு சவாலாகவே இருக்கின்றது.
‘இன்னமும் மீட்கப்டவேயில்லை
அண்ணனின் பயணத்திற்காக வைத்த
அண்ணியின் வளையல்களும்
அவளுடைய வாழ்க்கையும்’
இதை இப்னு ஹம்துன் தன் உள்நாட்டு மக்களின் மனச்சாட்சியாக நின்று வாதாடும்போது ‘உலகில் எந்தநாடும் சொந்தநாடு போலாகிவிடுமா?’ என்கிற கேள்வி நமது உள்மனத்தில் எழுகின்றது.
அவர் வியர்வையை ஒரு புதிய பரிமாணத்தில் படம்பிடித்துக் காட்டியிருப்பது பிரமிக்க வைக்கின்றது:
‘ஆறென்று ஏதுமில்லை இந்த நாட்டில்
ஆனாலும் வியர்வைதான் அதனைப்போல
சோறாக்கி உண்பதற்கு சமையற் கட்டில்
சிலநேரம் நின்றாலே வியர்வை ஆறாம்
தாரெல்லாம் கொதிக்கின்ற தாங்காச்சூட்டில்
தன்விதியைப் பூசுகின்ற உழைக்கும் வர்க்கம்
நீருறும் நெற்றியெல்லாம் நிலத்தில் வைத்தால்
நிலமிங்கே ஆறாகும் நிதர்சனம்தான்’
இப்னு ஹம்துன் மரபறிந்த கவிஞர் – தமிழார்வம் மிக்கவர் – ஆய்வாளர் – எழுத்தாளர் – படைப்பாளர் என்கிற பன்முக ஆளுமையில் பரிணமிப்பவர். மொழி – கலை – இலக்கியம் – சமூகம் – சமயம் – பண்பாடு – மானுடம் – அறிவியல் – அறவியல் – உலகம் என்கிற பொருண்மைகளில் அவரது படைப்புகள் ஆழ்ந்து விரிந்து அகன்று நிற்கின்றன. படைப்பாளியை அன்றி படைப்புகளையே முன்னிலைப்படுத்துகின்றன அவரது எழுத்துகள்.
அரேபிய மண்ணில் தமிழ் கலை கலாசார பண்பாட்டுப் பாரம்பரிய விழுமியங்களைக் காத்து வளர்க்கும் றியாத் தமிழ்ச்சங்கம் இப்னு ஹம்துனின் ‘மௌனத்தின் பாடல்’ கவிதை நூலை இப்போது வெளியிட்டிருப்பது அவரது புகழுக்குக் கிடைத்த பெரும்பேறு.
பஹ்றுதீன் இப்னு ஹம்துன் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தின் பறங்கிப்பேட்டையில் பிறந்தவர். அவர் பல்லாண்டு காலம் அரேபிய மண்ணில் பணி புரிபவர். அருமையான மனிதர். அற்புதமாகச் செய்யுள் செய்யும் ஆற்றல் மிக்கவர். அவரது மனிதம் பேசும் ‘மௌனத்தின் பாடல்’ நூலில் கனதியான கவிதைகள் கொழித்திருக்கின்றன. சமூகம் சார்ந்த கருப்பொருள் மட்டுமல்லாது அவரது சமயம் சார்ந்த கருத்துக்களும் கவனம் பெற்றுள்ளன:
‘நோன்பைச் சரியாய் வைத்தோரே
நோக்கில் வெற்றி பெற்றோராம்
தான்தான் என்னும் தன்னலனை
தவிடு செய்தோம் பசித்திருந்தே
ஆன்ம பலத்தின் பயிற்சிக்கே
அழகுப் பரிசாய் பெருநாளே!
மாண்பு மிக்க வெற்றியிலே
மதிப்பாய் ஈதென் வாழ்த்துகளே’
என்று நோன்பின் மாண்பை மிகச் சரியாக இனம்காணும் அவர் புசிப்பவனுக்குப் பசிப்பவனையும் பசிப்பவனுக்குப் படைத்தவனையும் ஞாபகப்படுத்தும் ஈதலறத்தின் சமதர்ம எல்லையைக் காட்டுகின்றார்.
இஸ்லாமிய சமய மரபு சார்ந்த சமூக சமத்துவக் கோட்பாட்டைப் பின்பிற்றும்போது உருவாகும் உடலாரோக்கியமும் – உளஆரோக்கியமும் – சமய ஆரோக்கியமும் – சமூக ஆரோக்கியமும் அவரது பொதுவுடைமைச் சிந்தனையில் புலர்ந்திருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
ஓர் ஆராய்ச்சி மனப்பாங்குடன் அவரது கவிதைகளை உற்றுநோக்கும்போது அவருடைய கவிதைகளில் மானுடத்தைக் காண்கின்றோம்; ‘வளமுள்ள நாடு வறுமையின் கோடு’ என்கின்ற வரையறைக்குள் அவரது கவிதைகளை வகைப்படுத்தும்போது அவரது சமுதாய இழிநிலைக்கெதிராக வெளிப்படும் உணர்வலைகள் அவரை ஓர் அழகின் தூதாகவும் அழுத்தமான ஊடகமாகவும் எதார்த்த வாழ்வின் சந்நிதானத்தில் தரிசிக்க வைத்துள்ளன. அவரது இந்த உணர்வுகளே அவரை வளரும் கவியாகவும் வடிவமைத்துள்ளது என்பதை உணரமுடிகின்றது.

சமத்துவ சமூகத்துக்கான ஒரு தூய சுதந்திரத்தை இறக்குமதி செய்வதற்கு கவிதைகளைப் போராயுதமாகவும் கூராயுதமாகவும் பயன்படுத்தும் ஓர் மெய்யான இளைய தலைமுறை இன்னும் நமது சமுதாயத்தில் திரள வேண்டும். தமிழகத்தில் ஒருவருக்கொருவர் தோள்கொடுக்கும்போது அவர்களில் இப்னுஹம்துனும் ஒரு முன்னணிக் கவிஞராய் எதிர்காலத்தில் இனம் காணப்படுவார் என்கிற நன்னம்பிக்கை நமக்குண்டு.
தொடர்புகளுக்கு: Email: Fa.hamdun@gmail.com
oOo
கனடாவிலிருந்து இனியவன் இசாறுதீன்
Iniyavan Isarudeen
!101 – !0 Chichester Place,
Scarborough ON M1T 1G5, Canada
Tel + 1 437 288 6803