ஆசையின்றி வாழுகின்ற மக்கள் அவனியிலே எவருமுண்டோ?
ஆசை! ஆசை! பேராசை!! கொண்டு அல்லல்படும் மக்களுக்கு,
ஆசைக்கோர் அளவில்லை, உலகை அள்ளத் துடிப்பதுமேன்?
ஹராமான பொருள் சேர்த்து அல்லாஹ்வை மறப்பதுமேன்?
மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசை கொள்வதெல்லாம்,
மாண்டபின் வாழுகின்ற வாழ்க்கைக்குத் துணை வருமோ?
மதியிழந்து நிதிசேர்த்து மமதையுடன், மார்க்க நெறி தவறி,
மாநிலத்தில் வாழ்ந்துவிட்டால் மறுமையிலே சுகம் வருமோ?
இருக்கின்ற சொத்தின் மதிப்பை இறைத்தூதர் கணக்கின்படி,
இங்கிதமாய்ப் பங்கிட்டு ஏழையர்க்கு வழங்கிவிட்டால்,
எப்போதும் இறைவன் உவப்பை என்றும் நாம் அடைந்திடலாம்,
ஈகைத் திருநாளை இனிதாய்க் கொண்டாடி மகிழ்ந்திடலாம்!
அவனியிலே ஆசை கோடி அனைவர்க்கும் உள்ளதுபோல்,
அல்லாஹ்வின் சொர்க்கத்திற்கும் ஆசைகள் சில உண்டு!
அதன் ஆசைகளை நிறைவேற்ற அனைவரும் ஆசைகொண்டால்,
அருங்கனிகளுடன் சொர்க்கம் நம்மை அரவணைத்து வரவேற்கும்!
அற்புத குரான் ஓதும் அகிலத்தோர் வேண்டும் என்றும்,
அசையும் நாவை அடக்கிவைப்போர் வேண்டும் என்றும்,
பசித்தோற்கு உணவளிப்போர் பாங்குடன் வேண்டும் என்றும்,
பசித்திருந்து நோன்பை நோற்றப் பண்பாளர் வேண்டுமென்றும்,
ஆகிரத்தில் உள்ள சொர்க்கம் ஆசைப்படும் என்பதனை,
அல்லாஹ்வின் திருவசனம் அனைவர்க்கும் உணர்த்துவதை,
அடிமனதில் பதிவேற்றி அதன்படி தினம் செயல்பட்டால்,
அடைந்திடுவோம் சொர்க்கம் நாம் அல்லாஹ்வின் கருணையினால்!
ஆக்கம்: கோவை எம்.அப்துல் ரஹீம், எம்.ஏ, பி.காம்,பி.ஜி.எல்,பி.ஜி.டி.பி.