முதல் மிடறு!

நீ தந்த உணவைக்கொண்டே
நோன்பை நான் முடித்துக்கொள்ள
பேரீத்தம் பழத்திற்குள்
பெரும் பலத்தைப் பொதித்து வைத்தாய்
இறைவா…


முதல் மிடறு தண்ணீரில்

உடல் குளிரக் கண்டேன்
உதிரத்தில் உற்சாகம்
ஊற்றெடுக்கக் கண்டேன்

உள்நாக்கு நனையும்போது
உயிர் மீளக் கண்டேன்
குளிர்நீர் உடலுக்குள்ளே
குடல் வரைந்து செல்லக் கண்டேன்

நட்டநடு நண்பகலில்
வெட்டவெளிப் பணிக்களத்தில்
தகிக்கின்றக் கதிரவனால்
தேகத்திரவம் தீர்ந்துபோகும்

வெயில் சுட்டு உடல் காய
குளித்து வந்த தோரணையில்
கொப்பளிக்கும் வியர்வை
குடல் சுருங்கிக் காய்ந்துபோகும்

உப்புறையும் உடைகளிலே
உலர்ந்துபோகும் உதடுகளும்
பேச்சும் பிறழ்ந்து வரும்
நாக்கு ஒட்டும் மேலண்ணம்

உட்கார உடல் வலிக்கும்
கண்பார்வை காட்சி மங்கும்
வார்த்தையொன்றும் வாய்பேச
வருவதில்லை தாகத்தால்

ஆனால், அதிசயம்!
உன்மறையைக் கையேந்த
உறுத்தாது ஒரு வலியும்
நோன்பு வைத்த நெஞ்சுக்கு
நின்மறையில் நிழலிருக்கும்

நாக்குப் பிறழாது
நல்மறையை நானோத
உரக்க ஓதுகையில்
செவிக்கும் தேன் இறைவேதம்

கண்ணாடிக் குப்பிகளில்
குடிப்பதற்குக் கனிரசமும்
கழுவிவைத்த குவளைகளில்
கற்கண்டாய்ச் சாறிருக்கும்

எதையுமே நாடாது
இதயமே உன் தஞ்சம்
அறிவித்த நேரம்வரை
காத்திருக்கும் என் களைப்பு

முதல் மிடறு நீர்தன்னில்
புலன்கள் திறந்துகொள்ளும்
புது ரத்தம் பாய்ந்ததுபோல்
பார்வையும் துலங்கிவிடும்

முதல் மிடறு தண்ணீரில்
முடிச்சு ஒன்று அவிழ்ந்து வரும்
உயிர் சுரக்கும் உதிரத்தில்
ஈமானும் திடமாகும்

முதல் மிடறு தண்ணீரில்
நோன்பைப் புரிய வைத்தாய்
இறைவா
முடித்துவைத்த நோன்பில் நின்
முழுக்கருணை காட்டித் தந்தாய்

தணியாத தாகத்தினின்றும்
தரணியைக் காப்பாற்று
இறைவா…
ஒவ்வொரு மிடறு நீரையும்
உவப்போடு தந்துதவு!

– சபீர்