தேர்தல் வர்த்தகம்!

அடுத்த

ஐந்தாண்டுகளுக்கு

நாட்டைக் குத்தகை எடுக்க

ஏலம் துவங்கிவிட்டது.

 
போர்க்களம் போல் காட்சியளிக்கிறது

தேர்தல் களம்

வாள்வீச்சின் தோரணையில்

விரல் வீச்சும்

வாய்ப் பேச்சும்;

படை கடந்த

பாதையைப் போல

தொகுதி வீதிகளில்

புளுதி பறக்கிறது.

ஆற்றிக் கொடுத்தவரும்

ஊற்றிக் குடிப்பவரும் ஓரணியில்

ஒட்டுண்ணியாய்

நடந்து களைத்தவரும்

மரம் வெட்டி மருத்துவரும்.

 

சகோதரத்துவம் பயின்ற

சன்மார்க்கத்தினரோ

தம்பி தலைவரோடானதால்

அண்ணன் அம்மாவுடன்.

 

ஆளுங்கட்சி

கோஷ்டி மோதலும்

வேஷ்டி மடிப்புமே வேலையாகிட;

பொதுவுடைமை பேசியோருக்கோ

இம்முறை

அரசியல் சன்னியாசம்.

 

படமேடையில் நடித்தோர்க்கு

பொதுமேடையிலும் வாய்ப்பு

கவர்ச்சி அரசியலால்

கனவுலகில் கையாலாகாதோர்.

ராப்பிச்சையைவிடக்

கேவலமாக நடக்கிறது

கட்சி நிதி சேகரிப்பு

சந்தையில்

சட்டெனக் கூடிப்போனது

வாக்களிக்கும் தகுதிபெற்ற

இந்தியப் பிரஜையின் மதிப்பு.

‘இலவசம்’ தடைசெய்யப்பட,

‘விலையில்லாப் பொருட்கள்’

விநியோகிக்கப் படுகின்றன;

ஆணையம் தடுமாறுகிறது-

செம்மொழிச் சொற்களை

மாற்றிப்போட்டு

தடைகளை உடைத்தெறிந்த

தந்திர அரசியல் கண்டு.

வாக்குச் சாவடிகளில்

வாக்காளர் சாகும்படி

வாக்குறுதி வலைவிரித்து

வாக்குகள் சாகுபடி.

 

விரல் நுனியில்

கரும்புள்ளி வைத்ததும்

விடைபெறுவர் பெரும்புள்ளிகள்.

 

மக்களெனக் கொண்டாடப்பட்ட

வக்கற்ற வாக்காளர்கள்

மாக்களென விடப்பட்டு

வாக்குகளின் எண்ணிக்கையில்

இலக்கங்களாகிப் போவர்.

 

நாநயம் கற்றோரும்

நாணயம் பெற்றோரும்

நாணம் அற்றோரும்

போட்டதை எடுக்க

புறப்படுவர் தலைநகர் நோக்கி

 

இனி

தீட்டப்படும் திட்டமதிப்பில்

சதவிகித வெட்டும்

மறுத்தால்

அரசாங்கத்திற்கு வேட்டும்

சனநாயக மரபாகும்.

தேர்தல் வர்த்தகம் ஒன்றில்தான்

நட்டம் என்கிற

ஷரத்தே இருப்பதில்லை!

– சபீர்