‘தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்’
சத்தியமார்க்கம்.காம் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்!
பிறைநிலவு தோன்றுவதால் பிறக்கும் மாதம்
… பேரருளை சூல்கொண்ட புனித கீதம்
இறைநினைவை ஊன்றிவிட இலங்கும் வேதம்
… இணையில்லா ஓரிறைக்கே புகழின் நாதம்
முறையான வாழ்வொன்றை வழங்கும் மார்க்கம்
… முகமதுவும் அகமதுவும் மலர வைக்கும்
நிறைவாக இறையுணர்வை நல்கிப் போகும்
… நெஞ்சங்கள் பூத்துவிடும் நேச வாசம்
வயிற்றினுக்கு மட்டுந்தான் நோன்போ என்றால்
… வாய்க்கும் ஐம்புலனும் வருத்தம் கொள்ளும்.
பயிற்சிபல ஆண்டாண்டு பெற்ற பின்னும்
… பாவந்தான் பாவத்தில் மூழ்கி நின்றால்.
முயற்சியென முன்வருமோர் மாந்தர் கூட்டம்
… முப்பத்தில் வழிகாணும் முனைந்து வெல்லும்.
வயப்படுத்தும் புலனடக்கம் வழியைக் காட்டும்
…வாழ்வதனை மேம்படுத்தி வணக்கம் ஆக்கும்.
பொய்யாகிப் போகுமிந்த வாழ்வில் ஏனோ
பொய்யுடனே புறம்பேசி பகைமைத் தீண்டல்.
மெய்வருந்தச் செய்வதுவோ மேன்மை இன்றி?
… மேலோரும் கீழோரும் மனத்தால் அன்றோ?
பெய்கின்ற மழைபோன்று பொதுவாய் ஆதல்
பெருமனிதம் தழைப்பதற்கு பேணுங் காதல்.
செய்கின்ற நற்செயலில் செழிக்கும் பூமி
… சிந்தனையில் நேர்மையினைச் சேர்த்தல் நீதி.
ஆன்மாவின் அழுக்குகளை எரித்து விட்டால்
… அகமெல்லாம் ஒளிகொள்ளும் அழகுப் பட்டாய்
மேன்மையெல்லாம் ரமளானில் மீட்டிப் பார்ப்போம்
மேதினியில் நல்லிணக்கம் மீட்டுச் சேர்ப்போம்.
வான்மறையை ஓதிவர வழிகள் பூக்கும்
… வல்லோனாம் இறையோனின் வார்த்தைத் தாக்கம்
தான்மட்டும் என்கின்ற தான்மை நீக்கி
தரணியிலே யாவருக்கும் நன்மை கேட்போம்!
ஆக்கம்: கவிஞர். இப்னு ஹம்துன்
https://satyamargam.com/author/fakhrudeen/
