எனக்கு அறிமுகமான ஜின்னா-பகுதி 1!

எனக்கு அறிமுகமான ஜின்னா-பகுதி 1!

முஹம்மது அலி ஜின்னா!

தவறாக புரிய வைக்கப்பட்ட சிறந்த அரசியல் தலைவர்! குப்பைகள் மட்டுமே அதிகம் நிரப்பப்பட்டதால் அந்த மனிதரைப் பற்றிய துணுக்கு செய்திகளுக்குக் கூட இடம் கொடுக்காமல், “பாகிஸ்தானைப் பிரித்தார்” என்ற ஒரே வரியை மட்டுமெழுதி, உண்மைகளை மட்டுறுத்தி, பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை நயம்பட நிரப்பி, வெறுக்கச் செய்யப்பட்ட உயர்ந்த தேசியவாதி!

அவர் பன்றிமாமிசம் சாப்பிட்டாரா இல்லையா?, மது சீக்ரெட் பழக்கத்திற்கு அடிமையானவரா?, நாய் வளர்த்தாராமே?, ஒரு முறை கூட ஹஜ் செய்யாதவரா? etc.. போன்ற விவாதங்கள் இணையத்தில் எக்கசக்கம். ஒரு முழுமையான முஸ்லிமாக அவர் வாழவில்லை என்ற சந்தேகத்தைச் சில புகைபடங்கள் விதைக்கின்றன. உதாரணத்திற்கு, இஸ்லாம் வலியுறுத்தும் நாகரிக உடை அணியாமல் நவநாகரிக மங்கையாக மகள் தினா! செல்லநாய் வளர்க்கும் ஜின்னா!….. போதும் போதும்… நமக்கு எக்கசக்க வேலை இருக்கு… அவர் ஈமானை அளக்கும் பொறுப்பைப் படைத்தவனிடமிருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டாம்!

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைப் பிரித்தார் என நமக்கு நன்கு அறிமுகம் செய்யப்பட்ட ஜின்னா உண்மையில், பாகிஸ்தான் கோரிக்கையை முதலில் முன்வைத்தவர் அல்லர். மாறாக, முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் லீக்கைக் கடுமையாக எதிர்த்து காங்கிரஸ் கட்சியிலிருந்து செயல்பட்டவர்.

1906ல் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் லீக்கை ‘மத நிறுவனம்’ என கிண்டல் செய்த ஜின்னா, அதனைப் புறந்தள்ளி விட்டு காங்கிரஸில் சேர்ந்து அயராது உழைத்து “இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கான தூதர்” என காங்கிரஸால் கொண்டாடப்பட்ட ஜின்னா…. உயிராய் நேசித்த காங்கிரஸை விட்டு பிற்காலத்தில் விலகி, தாம் வசைபாடி தீர்த்த முஸ்லிம் லீக்கில் இணைந்து அதன் தலைமை பொறுப்புக்கே வருவதற்குமான காலச்சக்கரம் சுழல காலம் எடுக்கவில்லை… மிக விரைவாகவே நிகழ்ந்தேறியது…!

பாகிஸ்தான் பிரிவினையில் மறைந்திருக்கும் நுண்ணரசியல் ஆழமானது; சூழ்ச்சிகள் நிறைந்தது. கொலை செய்தவனை விட, செய்ய தூண்டியவன்தான் அதிக தண்டனைக்குத் தகுதியானவன்..! ஆனால் நம் வரலாறு ஜின்னாவின் தலையில் மட்டும் ஒட்டுமொத்த பழியை இறக்கியது !

முஸ்லிம்களை இரண்டாம்தர குடிமக்களாக ஆக்குவோம் எனக் கொக்கரித்து, இந்தியாவை ஹிந்துத்துவ நாடாக மாற்றும் லட்சியத்துடன் செயல்பட்ட மிகச் சிறியதொரு ஃபாஸிச குழுவின் திட்டமிட்ட, உறுதியான செயல்பாட்டைக் கண்டும் காணாமல் கண்மூடிக்கொண்ட காங்கிரஸ் கட்சியின் புறக்கணிப்புக்கும், அலட்சியத்திற்கும் இந்தியா கொடுத்த மாபெரும் விலைதான் “பிரிவினை”!

இதனை விளங்கிக் கொள்ள வேண்டுமெனில், ஜின்னா யார், அவரின் வாழ்க்கை நிகழ்வுகள் என்ன என்பதை ஓரளவேனும் நாம் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்.

– தொடரும்…

– ஆமினா முஹம்மது.