பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 1

“தீவிரவாதம்!”  உலகில் இன்று பரவலாக அனைவரும் கேட்கும் சொல்லாகும் இது. சிலுவைப்போர் சம்பவ காலங்களுக்குப் பிறகு இச்சொல்லுக்கு நேரடியாக கிறிஸ்தவ மத அடிப்படைவாதம் (Protestant) என்ற பொருள் கொள்ளப்பட்டது. ஒரு காலம் வரை இச்சொல்லின் பொருளை இந்த அர்த்தத்திலேயே பிரித்தானிய கலைக்களஞ்சியத்திலும் (Encyclopedia Britannica) விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனுக்கிடையில் பனிப்போர் நடந்த கால கட்டங்களிலும், பின்னர் வல்லரசுகளுக்கிடையிலான  இழுபறி சண்டையில் சோவியத் யூனியன் சிதறடிக்கப்பட்ட காலம் வரை இவ்வார்த்தை மக்கள் மத்தியில் அவ்வளவு பிரபலமில்லாமல் இருந்தது. சோவியத் யூனியன் சிதறுண்ட பின் வந்த குறைந்த கால இடைவெளிக்குள் சரியாக சொல்வதெனில் கடந்த 10-15 வருட கால அளவில் மக்கள் மத்தியில் வலிந்து பரப்பப்பட்ட, திரும்பத் திரும்ப ஊன்றி எடுத்துக் கூறப்பட்டது தான் “தீவிரவாதம்” என்ற இந்த சொல்.   இச்சொல்லினைக் குறித்து இங்கு ஆராய ஒரு முக்கிய காரணம் உண்டு. இச்சொல்லின் உண்மையான அர்த்தத்தோடு அதனைச் செய்பவர்களை உண்மையிலேயே அடையாளம் காட்டப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் கூறப்பட்டிருக்குமானால் நாம் இதனைக் குறித்து இங்கு பேச எந்த அவசியமும் எழுந்திருக்காது. நாம் கூற வந்த விஷயத்திற்குள் செல்வதற்கு முன்பு இச்சொல்லின் பொருளினைக் குறித்து சற்று அறிந்து கொள்வோம்.  

தீவிரவாதம் என்ற சொல்லுக்கு நேரடியான பொருள் “ஒரு விஷயத்தில் மிகத் தீவிரமாக ஈடுபடுதலாகும்”. தீவிரவாதம் என்ற சொல்லிலிருந்து பிறந்தது தான் தீவிரவாதி என்ற சொல். இவ்வார்த்தைகளை எவ்வித அடை மொழியும் இல்லாமல் கூறினால் அதனை பொதுவான வார்த்தையாகத்தான் கொள்ள முடியும்.   உதாரணத்திற்கு இவ்வாறு விளக்கலாம்.   ஒரு மருத்துவர் அவர் செய்யும் தொழிலில் தீவிரமாக ஈடுபடுகிறார் எனக் கொள்வோம். எனில் இம்மருத்துவரை மருத்துவ தீவிரவாதி எனக் கூறலாம்.   அது போன்றே, காவல்துறை தீவிரவாதி, சமூகசேவை தீவிரவாதி, அரசியல் தீவிரவாதி என அடுக்கிக் கொண்டே போகலாம். இங்கு அனைத்திலும் பொருள் கொள்ளும் பொழுது அத்துறை சார்ந்த தீவிரவாதிகள் அல்லது அவ்வத்துறையில் தீவிரமாக செயல்படுபவர்கள் என்ற பொருள் கொள்ளப்படும்.

காவல்துறை தீவிரவாதி, சமூகசேவை தீவிரவாதி, அரசியல் தீவிரவாதி என அடுக்கிக் கொண்டே போகலாம். இங்கு அனைத்திலும் பொருள் கொள்ளும் பொழுது அத்துறை சார்ந்த தீவிரவாதிகள் அல்லது அவ்வ த்துறையில் தீவிரமாக செயல்படுபவர்கள் என்ற பொருள் கொள்ளப்படும். இவ்வாறு இச்சொல், தான் சேரும் இடத்திற்குத் தகுந்தவாறு பொருளைத் தரும் சொல்லாகும். அது இணையும் இடத்திற்கு தகுந்தது போன்று அதன் பொருளும் மாறுபடும்.  

இச்சொல் சமூகத்துக்கு பலனைக் கொடுக்கும் சொல்லா?

எனில் நிச்சயமாக ஆம் என கூறலாம். ஒரு மருத்துவர் அவர் துறை சார்ந்த தொழிலில் தீவிரமாக அடிப்படைகளை அறியாமல் அல்லது அறிந்தும் அதில் உறுதியாக இல்லாமல்  மருத்துவம் செய்யவில்லை; அவர் தன்னுடைய தொழிலில் மிகுந்த அலட்சியபாவத்துடன் மருத்துவ அடிப்படைகளை விட்டு பிறழ்ந்து பொடுபோக்காக இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அதனால் சமூகத்துக்கு நன்மை விளைவதை விட தீமையே விளையும். எனவே ஒரு மருத்துவர் – அவரை அவர் சார்ந்த தொழிலில் மிகுந்த அக்கறை உள்ளவர், அதில் உண்மையானவர் எனக் கூற வேண்டுமெனில் அவர் அதில் தீவிரமாக மருத்துவ அடிப்படைகளை அறிந்து அதில் உறுதியுடன் ஈடுபடவேண்டும்.  

இதற்கு எதிர் மறையான பலனையும் இச்சொல் வழங்கும். ஒருவன் சமூகத்துக்கு தீமைகள் செய்வதில் மும்முரமாக இருக்கிறான் எனில் அவனை சமூக விரோத தீவிரவாதி எனலாம். அப்பாவி மக்களை கொல்வதையும் அவர்கள் மீது அக்கிரமத்தையும், அடக்குமுறையையும் கட்டவிழ்த்துவிட்டு அவர்களை எப்பொழுதும் தனக்கு அடங்கியவர்களாக இருக்க எவ்வித அக்கிரமமான செயலையும் செய்ய தயங்காமல் இரத்தவெறியுடன் அலைபவர்களை சமூகவிரோத தீவிரவாதிகள் என அழைக்காமல் வேறெவ்விதம் அழைப்பது?   இதிலிருந்து தீவிரவாதம் என்ற சொல் பொதுச்சொல் என்பதும் அது பயன்படுத்தும் இடத்திற்கு தகுந்த பொருளை வழங்கவல்லது என்பதும் விளங்கும்.  

ஆனால் இன்று நடைமுறையில் இதற்கு மாற்றமான நேர் எதிரான ஓர் அணுகு முறை மக்களிடம் காணப்படுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இன்று தீவிரவாதம் என்று கூறியவுடன் இஸ்லாமும், தீவிரவாதி என்றவுடன் முஸ்லிமும் தான் மக்களுடைய கண்களுக்கு தெரிகின்றனர். இந்த அளவிற்கு – மக்கள் மனதில் ஒரு சொல்லுக்கு அகராதிப் பொருளையே மாற்றி அர்த்தம் கொள்ள வைக்கும் அளவிற்கு இங்கு காரியங்கள் நடந்தேறியுள்ளன.   அதிலும் இந்த முஸ்லிம், ஒரு சமூகவிரோதத் தீவிரவாதி, உலக அமைதிக்கும் மக்களுடைய அமைதியான வாழ்வுக்கும் எதிரானவன் என்ற தோற்றம் ஏற்படுத்த்ப்பட்டுள்ளது தான் மிகவும் வேதனையான விஷயம். இஸ்லாம் என்றாலே அமைதி, சமாதானம் என்று தான் பொருள். அமைதியையும் சமாதானத்தையுமே தங்களது வாழ்க்கை நெறியாக கொண்டவர்கள், உலக சமாதானத்துக்கே கேடு விளைவிப்பவர்களாக எப்படி ஆவார்கள் என்று கூட சிந்திக்க முடியாத அளவிற்கு இன்று முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று தான் அர்த்தம் என்று எண்ணும் சூழ்நிலைக்கு முஸ்லிம்கள் ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.  

இதில் வேதனை மிக்க ஒரு செய்தி என்னவென்றால் முஸ்லிம்களில் ஒரு பிரிவினரே அவ்வாறு எண்ணுவதைச் சரிகாண முயற்சிப்பது, இச்சூழ்ச்சி வலை பின்னியவர்களின் வெற்றிகரமான கருத்துத் திணிப்பின் விளைவேயாகும்.  இஸ்லாத்தின் மேல் சுமத்தப்பட்டிருக்கும் இக்களங்கத்தை அகற்றும் பொறுப்பு முஸ்லிம்களுக்குரியதாகும். எனவே இஸ்லாத்தின் மீது எவ்வாறு இவ்வளவு இலகுவாக இக்கறை சுமத்தப்பட்டது என்பதைக் குறித்து முஸ்லிம்கள் சிந்திக்க முயற்சிக்க வேண்டும்.  

வெகு குறுகிய காலஅளவில் இவ்வளவு பெரிய அபாண்டத்தை முஸ்லிம்கள் மீது சுமத்தப் பேருதவியாக இருந்தது ஊடங்களாகும். உலகம் கடந்த 50 வருட கால இடைவெளியில் அதிவேக அறிவியல் முன்னேற்றமடந்துள்ளது. இவ்வரிய முன்னேற்றத்தில் உலகிற்கு கிடைத்த அளப்பரிய பொக்கிஷம் ஊடகமாகும். நினைத்த நேரம் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளவரையும் நேரில் பார்த்து உரையாடுவது போல் அளவளாவுவதற்கு இன்று முடிகிறது எனில் அது இவ்வூடகங்களின் மிகப்பெரிய தனிச்சிறப்பாகும். இருப்பினும், உலகை உள்ளங்கையில் கொண்டு வந்த இந்த ஊடகத்தின் சக்தியினைக் குறித்து இன்னும் முஸ்லிம் சமுதாயம் விளங்கிக் கொண்டது போல் தெரியவில்லை.  

இன்று நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஒரு செய்தியை உலகம் முழுமைக்கும் கொண்டு செல்ல முடியும். இதனைப் பயன்படுத்திக் கொண்ட ஆதிக்க சக்திகள் ஊடகத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் தங்கள் கீழ் கொண்டு வந்தது மட்டுமின்றி, தங்கள் எதேச்சதிகார வன்முறைச் சிந்தனைக்கு எதிராக/சவாலாக அமையும் என கருதியவற்றைக் குறித்துத் தவறான சிந்தனையை அவ்வூடகத்தின் மூலம் பரப்பினார்கள்.   சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு ஏகாதிபத்திய சக்திகள் தங்களுக்கு மிகப்பெரிய சவாலாக கருதியது இஸ்லாத்தின் அதிவேக வளர்ச்சியேயாகும். எனவே அதனைக் குறித்துத் தவறான சிந்தனையை மக்கள் மனதில் அப்பொழுதே விதைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

தருணம் கிடைக்கும் பொழுதெல்லாம் தீவிரவாதி என்ற சொல்லை முஸ்லிம்களோடு இணைத்துச் செய்தி கொடுக்க அவர்கள் தவறவில்லை. எந்த அளவிற்கு எனில் அடக்கி ஒடுக்கப்பட்ட எல்லா மக்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டிய முஸ்லிம்கள் தங்களுடைய ஜீவாதார உரிமைக்காக குரல் உயர்த்தினால் கூட அதையும் ஏதாவது ஒரு தீவிரவாத செயலுடன் இணைத்து முனகக் கூட முடியாதவாறு செய்து விட்டிருக்கிறார்கள்.   இவ்வாறு கூறியவுடன், இந்த முஸ்லிம்களுக்கு வேறுவேலையில்லை; தங்களை அடக்குகிறார்கள், ஒடுக்குகிறார்கள்; அபாண்டமாக பழிபோடுகிறார்கள்; என்று மற்றவர்கள் மேல் பழியைப் போட்டு தப்பித்துக் கொள்ள நினைக்கிறார்கள் என சமூக ஆர்வலர்கள் கூட கூறும் நிலையும் இன்று உள்ளது.   மேலே கூறியவை பொய்யில்லை என்பதை நிரூபிப்பதற்கு எங்கெங்கோ சுற்றி அலைய வேண்டிய அவசியமில்லை.

இன்று மத்திய ஆசியாவின் அமைதிக்கு மிகப் பெரிய சவாலாக/இடையூறாக அனைவரும் காணும் பாலஸ்தீன் மிகப் பெரிய உதாரணமாகும்.   இன்று பாலஸ்தீன் என்றாலே தீவிரவாத நாடு என மக்களால் பார்க்கப்படுகிறது. எனது சொந்த வீட்டை, பக்கத்து வீட்டுக்காரன் மழையில் நனைகிறானே எனக் கவலைப்பட்டு அவனுக்கு மழைக்கு ஒதுங்க கொடுத்துவிட்டு, அவன் மழையில் நனையும் போது அவன் மீது பரிதாபப்படாத மூன்றாம் வீட்டுக்காரன் துணையுடன் என் வீட்டை ஆக்ரமித்துக் கொண்டு என்னைத் திருடன் என வீட்டை விட்டு அடித்து வெளியே விரட்டப்பட்ட நிலை தான் பாலஸ்தீன முஸ்லிம்களின் நிலை.   தங்களுடைய சொந்த நிலத்திற்காக போராடும் அவர்களைத் தீவிரவாதிகளாகவும், அவர்களின் நிலத்தினை ஆக்ரமித்து தனது இருப்பிடத்தை சட்டவிரோதமாக உருவாக்கியுள்ள யூதர்களை சமாதானத்தின் தூதுவர்களாகவும் இன்று உலகம் காண்பது, எதேச்சதிகாரர்களின் இஸ்லாமிய விரோத சிந்தனையின் ஊடகத் தாக்கமே காரணமாகும்.  

இதனை இப்பிரச்சினையின் ஆரம்பம் முதல் அங்கு நடக்கும் சம்பவங்களை ஏகாதிபத்தியவாதிகளின் கைகளில் உள்ள ஊடகங்கள் எவ்வாறு சித்தரித்தன என்பதையும், அவர்கள் வெளியிடும் செய்திகளை கண்ணை மூடிக் கொண்டு எவ்வித ஆராய்ச்சியும் இன்றி இந்திய ஊடகங்கள் எவ்விதம் வெளியிட்டன என்பதையும் அறிந்தாலே விளங்கிக் கொள்ள முடியும். அதனை ஒன்றன் பின் ஒன்றாக பின்வரும் தொடர்களில் இன்ஷா அல்லாஹ் காண்போம்.  

– அபூசுமையா