வேண்டாமே பொதுவில் ரகசியம்!

உலகிலுள்ள எந்த ஒரு சித்தாந்தமாக இருந்தாலும் அது தனி மனிதனின் உணர்வுகளை மதிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். எந்த மனிதனாக இருந்தாலும் அவனுக்கென்று ஒரு சுயமரியாதை உள்ளது. ஒவ்வொரு மனிதனையும் மதிக்கக்கூடியவர்கள் யாராவது இவ்வுலகத்தில் இருக்கத்தான் செய்வார்கள்.

ஆனால் அவனுடைய மரியாதைக்கு எப்போதாவது பங்கம் ஏற்படும் நிலை ஏற்பட்டால் ஒன்று அதற்காக வேதனைப்படுகின்றான் அல்லது அதை எதிர்த்துப் போராடுகின்றான். இந்த வேதனையை இஸ்லாம் எவ்வளவு எதார்த்தமாக சொல்கின்றது எனப் பாருங்கள்.

 

இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார்:

   

நீங்கள் மூன்றுபேர் (ஒன்றாக) இருக்கும் போது மக்களுடன் கலந்து விடும் வரை மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் ரகசியமாக எதையும் பேச வேண்டாம். ஏனெனில் அது அவருக்கு வருத்தத்தை (கவலையை) ஏற்படுத்தும் '' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (ஆதார நூல்கள் : புகாரி , முஸ்லிம்)

  

பேசவேண்டாம் எனபதோடு மட்டும் பெருமானார் (ஸல்) அவர்கள் நிறுத்தவில்லை; அதற்கான காரணத்தையும் கூறுகின்றார்கள். "ஏனெனில் அது அவருக்கு வருத்தத்தை (கவலையை) ஏற்படுத்தும்'' இவ்விஷயத்தைப் படிக்கும் நீங்கள் ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

 

மூன்று பேர் இருக்கும் பொழுது ஒருவரை விட்டுவிட்டு மற்ற இருவர் மட்டும் தனியாக பேசினால் தனியே ஒதுக்கப்பட்டவரால் ஏற்படும் பித்னா ஒருபுறமிருக்க, அவர் மனதில் ஏற்படும் வேதனையை ஒருமுறை எண்ணிப் பாருங்கள்.

 

இந்நிலை நமக்கே ஏற்பட்டால் நம் மனம் என்ன பாடுபடும்? நம்மை ஒதுக்கிவிட்டு அப்படி என்ன பேசுகின்றனர்? அவர்களோடு பேசுவதற்கு எனக்கு தகுதியில்லையா அல்லது நம்மைப்பற்றி ஏதாவது பேசுகின்றனரா?  என்றெல்லாம் எண்ணுகின்றோம்.

 

அவன் மனதில் ஏற்படுகின்ற விரக்தி வெறுப்பு அதை சில நேரம் ஃபித்னாவாகவும் அவன் வெளிப்படுத்துகின்றான். இது யதார்த்தமாகும். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. இந்த இடத்திலும் இஸ்லாம் நன்னெறியை வழங்குகிறது.

 

இஸ்லாம் எப்பொழுதுமே பாதிக்கப்பட்டவனின் பக்கம் நிற்கின்றது. அவனுடைய வேதனையைப் பிறருக்கு புரிய வைக்கின்றது. எந்த ஒரு மனிதனையும் யாரும் தரக்குறைவாக நினைக்கவேண்டாம். யாரும் யாருடைய மனதும் நோகும்படி நடக்கவேண்டாம், என்ற ஒரு போதனையையும் இஸ்லாம் இங்கே வைக்கின்றது. எனவே இஸ்லாம் சொல்வதைப் பேணி நடக்கக்கூடிய நன் மக்களாக வல்ல ரஹ்மான் நம்மையும் ஆக்கியருள்வானாக!

 

ஆக்கம்: அபூ இப்ராஹிம்