ஒளி உமிழும் டையோடுகள் (Light Emitting Diodes)

ஒளி உமிழும் டையோடுகள் அல்லது LED (Light Emitting Diodes) என்பன சாதாரண குறைகடத்தி (Semiconductor) டையோடுகள் தான். இவற்றின் வழியே குறை அழுத்த  மின்சாரம் பாய்ச்சப்படும் போது இவை தன்னிச்சையான ஒளியை உமிழ்கின்றன (Spontaneous Emission). இவற்றில் சிலிக்கனுடன் காலியம், ஆர்சனைடு, இண்டியம் நைட்ரைடு போன்ற மாசுக்கள் (impurities)கலக்கப்படுவதால் ஒளித்துகள்கள் (photons) உமிழப்படுகின்றன.

சாதாரண குமிழ் விளக்குகளில் மின்னிழை சூடாவதாலும், குழல் விளக்குகளில் பாதரசம் அல்லது சோடிய ஆவி மின்னிறக்கம் (Electric discharge) செய்யப்படுவதாலுமே ஒளி உமிழப்படுகிறது. ஆனால் LED -களில் மின்சாரம் பாய்ச்சும் போது நேரடியாகவே ஒளி வெளிப்படுகிறது.

சற்று முந்தைய காலம் வரை இவ்வகை LED-கள் கார்கள் மற்றும் வீடுகளில் பொம்மைகளுக்கு பச்சை, சிவப்பு, மஞ்சள் போன்ற கவர்ச்சிகரமான வண்ணங்களில் சிறிய மின்விளக்குகளை அழகாக ஓடும் வகையிலோ அல்லது அணைந்து அணைந்து எரியும் வகையிலோ ஓர் எளிய அழகுப் பொருளாக மட்டுமே பயன்பட்டன. மேலும்  இசைக்கேற்ப நடனமாடும் விளக்குகளாகவும் இவை பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன.

தற்போது இவை கார்களில் முன்பக்க, பின்பக்க விளக்குகளாகச் (Head and tail lamps) செயல்பட வல்லன. இது போன்ற பயன்பாட்டிற்குக் கடும் தரக்கட்டுப்பாட்டுடன் தயாரிக்கப்பட்ட LED-களுக்குத் தேய்மானம் என்பதே கிடையாது. ஒருமுறை இதனைக் காரில் பொருத்திவிட்டால், அது காரின் வாழ்க்கைக்காலம் முழுவதும் பயன்தர வல்லது.

இவற்றின் இன்னொரு பெரிய பயன் இவற்றின் குறைந்த விலையாகும். சிறு மின்னணு விற்பனைக் கடைகளிலும் கிடைக்கக் கூடிய சாதாரண அலங்கார LED-களின் விலை மிகக் குறைவே. இவை 1 ரூபாய் முதல் 5 ரூபாய்க்குள் கிடைககின்றன. ஒரே LED இரண்டு வண்ணத்தில் ஒளிரக் கூடிய வகையும் இவற்றில் உண்டு.

ஆனால் இது போன்ற சிறிய LEDகள் வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் தேவையான ஒளியளவை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது. ஆனால் தற்போது வீடுகள் மற்றும் அலுவலக உபயோகத்திற்கான சிறப்பு LEDகள் தயாரிக்கப்பட்டு விட்டன.

இது மட்டுமல்லாது இவற்றில் இன்னொரு கவர்ச்சியும் உள்ளது. இவ்வகை LEDகள் மிக மிகக் குறைவான மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தக் கூடியன. எனவே மின் பயன்பாட்டில் மிகப்பெரும் சிக்கனத்தைத் தரவல்லன இவை. இதன் மூலம் மின்சாரத் தேவைக்கான அழுத்தம் குறைவதால் சுற்றுப்புறச் சூழலுக்குக் ஏற்படும் கேடு குறைகிறது.

இவற்றின் விலை தற்போதைக்குச் சற்று அதிகமாக இருந்தாலும் மிக வேகமாக குறைந்து வருகிறது. பயன்பாடு அதிகரிக்கும் போது இவற்றின் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றின் வாழ்நாள் மிக அதிகம் அதாவது LED ஒன்றை 24 மணி நேரம் தொடர்ந்து எரிய விட்டாலும் 4166 நாட்களுக்கு, அதாவது சுமார் 11 ஆண்டுகளுக்கு மேல் செயல்படக் கூடியவை  என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றில் சாதாரணக் குமிழ் விளக்குகள் போல் அல்லாமல் வெப்பம் வெளியிடப்படாததால் அதுவும் சுற்றுப்புறசூழல் கேடு அடையாமல் இருக்க உதவுகிறது.

மின் தேவை அதிகம் உள்ள US-ன் மின் உபயோகத்தில் 22 விழுக்காடு மின்விளக்குகளின் பயன்பாடுகளால் ஏற்படுவதாக US அரசு தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இதுபோன்ற வளர்ந்த நாடுகளில் மட்டுமின்றி இந்தியா, சீனா போன்ற மக்கள் நெருக்கடி மிகுந்த நாடுகளிலும் இந்த புதிய வகை விளக்குகள் மின்சிக்கனத்திற்கு பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆக்கம்: அபூஷைமா