சாதனைகள் பெண்களுக்கு(ம்) தடையில்லை!

Share this:

சுனாமி என்ற ஆழிப்பேரலை 2004ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 26ந்தேதி தென்கிழக்கு ஆசிய கண்டத்தினை உலுக்கி,     நெய்தல் நகரங்களான கடற்கரை ஓரத்தில் வாழும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்டது. அதற்கு ஆறு ஆண்டுகள் கழித்து, அதே தினமான 2010 டிசம்பர் திங்கள் 26ந்தேதி அன்று இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணம் என்ற முஸ்லிம்கள் வாழும் ஊரிலிருந்து இரண்டு படகுகளில் உல்லாசமாக அருகில் உள்ள தீவினைப்பார்க்கச் சென்ற சகோதர, சகோதரிகள் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் விபத்துக்குள்ளாகி, 11 பேர் பலியானதாக முதற்செய்தி வந்தது. அடுத்தடுத்து வந்த செய்திகளில் இதுவரை 16 பேர் பலியான செய்தி வெளியானது கண்டு அனைத்து உள்ளங்களும் அதிர்ச்சியில் உறைந்தன. அவர்களுள் 10 பேர் பெண்கள்; குழந்தைகள் அறுவர்.

படகு விபத்து – வீடியோச் செய்தி

{youtube}zOkBb66k56Y{/youtube}

அந்தக் கோரச்சம்பவத்தினை ஆயும்போது கீழ்க்கண்ட காரணங்கள் தெரிய வந்தன:

 1. படகில் சென்றவர்கள் உயிர் காக்கும் சாதனமாக லைப்போட் என்ற ரப்பர் ட்யூப்பினை அணியவில்லை.

 2. 7 பேர் பயணிக்க அனுமதிக்கப்பட்ட படகில் 40 பெண்களும் குழந்தைகளும் ஏற்றப்பட்டிருந்தனர்.

 3. படகில் ஒரு பக்கமே பளுவான பெண்களும் மறு பக்கம் குழந்தைகளும் அமரச் செய்திருந்தது.

 4. குழந்தைகள் உற்சாகத்தில் அலையினை கையில் தொட முனைந்து அவர்களுடைய பளு படகின் ஒரு பகுதியினை சார்ந்திருந்து சாய்ந்தது.

 5. பெண்கள், குழந்தைகளின் இந்த விளையாட்டுச் செயலினை கட்டுப்படுத்தாதது.

 6. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நீச்சல் பழக்கமின்மை.

 7. ஆபத்தான நேரத்தில் எப்படி உயிர் காப்பது என ஆண்களுக்கு தெரியாதது.

 8. மற்றொரு படகில் சென்ற சில ஆண்களுக்கும் நீச்சல் தெரியாததால் மீனவர்கள் கரையிலிருந்து வேறொரு படகில் வரும்வரை விபத்தில் சிக்கியவர்களை காப்பற்ற இயலாதது.

இது போன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படத்தான் செய்கின்றன என்றாலும் கடற்கரை ஓரத்தில் வாழும் இஸ்லாமிய கிராமங்களில் வாழும் ஊர்களில் இப்படிப்பட்ட விபத்துக்கள் ஏற்படும்போது அதனைத் தடுக்க என்னன்ன வழிகள் உள்ளன என ஊர் ஜமாத்தார்கள் அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்வதுடன், ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கட்டாயமாக நீச்சல் தெரிந்திருக்க ஏற்பாடு செய்வது அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரி்களின் கடமையாகும்.

2004ஆம் ஆண்டு நடந்த சுனாமி அன்று என் கல்லூரித் தோழனும் பரங்கிப்பேட்டையினைச் சார்ந்தவனுமான அலீ அப்பாஸ் காரைக்காலில் சக தோழர்களுடன் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சுனாமி அலை வந்தபோது மற்றவர்கள் ஒரு மரத்தில் ஏறித் தப்பித்தபோதுபோது நண்பன் அலீ அப்பாஸ் மட்டும் மரமேர முடியாததால் சுனாமிக்கு பலியானான் என அறிந்து என் உள்ளம் இன்னும் வேதனையால் துடிக்கிறது.

அதனைப்போன்று இந்தப் படகு விபத்தில் தன் அருமைக் குழந்தைகளையும் தாய்மார்களையும் இழந்திருக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகள் நிலை எப்படியிருநதிருக்கும் என ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். ஆகவே இதுபோன்ற விபத்துக்களைத் தடுக்க என்னன்ன வழிகள் என ஆராய்ந்து நடவடிக்கை எடுத்தால் கடற்கரை ஓர மக்களை சோக இருள் கவ்வாமல் இருக்குமல்லவா?

 • கண்டிப்பாக ஆண்கள்முதல் குழந்தைகள்வரை நீச்சல் பழகியிருக்க வேண்டும். நீச்சல் என்பது நீரிலிருந்து மனிதனைக் காப்பாற்றுவது மட்டுமல்ல; மாறாக சிறந்த ஓர் உடற்பயிற்சியாகும். அத்துடன் எவ்வளவு பெரிய டென்ஷனில் இருந்தாலும் அரை மணிநேர நீச்சலுக்குச் சென்று வந்தால் அந்த மனஉளைச்சல் ஒரு நிமிடத்தில் பறந்தோடி உற்சாகம் மேலோங்கும்.

 • நீச்சல் செய்பவர்கள் மனதில் எதனையும் சாதிக்கலாம் என ஒரு எண்ணம் ஏற்படும். அதற்கு உதாரணமாக 26.12.2010 அன்று புதுவையில் ஒரு 38 வயது பெண்மணி செய்த சாதனையினை உங்களுக்குச் சொல்லலாமென நினைக்கிறேன். பாண்டிச்சேரி மாநிலம் வில்லியனூரினைச் சார்ந்த நடுவயதுக் குடும்பப் பெண்மனி ராணி(38).  ஆழிப்பேரலை நினைவு நாளன்று, பாண்டி முன்னாள் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் ஒரு நீச்சல் குளத்தில் ராணி தம் தலையினை மேலேவைத்துக் கொண்டு கால்களைத் தரை நோக்கியும் ஆனால் தரையில் படாமலும், நீச்சலிடிக்காமலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்தினை காலை பத்து மணியிலிருந்து மதியம் ஒரு மணிவரை நடந்து சாதனை செய்துள்ளார். இந்தச் சாதனையை அவர் எதற்காகச் செய்தார் எனில், நீச்சல் தெரியாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒரு சாதனை செய்ய வேண்டுமென நினைத்து, இந்த நீச்சல் பயிற்சினை மேற்கொண்டார்.  பாருங்களேன், நீச்சல் சாதனை பெண்களுக்குக் கடினமான ஒன்றல்ல என்பதினை இது காட்டவில்லையா?

 • சிலர் கேட்கலாம் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்து உள்ளார்கள் அவர்களால் எப்படி நீச்சல் உடையில் நீந்த முடியுமென்று. இப்போது முஸ்லிம் பெண்களுக்கென உடல் அங்கங்கள் தெரியாது புர்கா வடிவில் நீச்சல் உடைகள் மேலை நாடுகளிலும் அரேபிய நாடுகளிலும் உள்ளன. நமது பெண்களுக்கும் அதனை வாங்கிக் கொடுத்து, பெண் நீச்சல் பயிற்சி பயிற்சியாளர்களைக் கொண்டே பயிற்சி கொடுக்கலாம். கிரமப்புரங்களில் வீட்டுக்குள் பாத்ரூம் வருவதற்கு முன்னர், நம் பெண்கள் குளங்களிலும் ஆறுகளிலும் நீந்திக் குளித்தவர்கள்தாம். சென்னை போன்ற நகரங்களில் பெண்களுக்கான தனி நேரங்கள் நீச்சல் குளங்களில் ஓதுக்கப்படுங்கின்றன. குளங்கள் உள்ள ஊர்களிலும் பெரிய கண்மாயில் குளிப்பவர்களுக்கும் ஆற்றங்கரை ஓரங்களில் வாழும் முஸ்லிம் பெண்களுக்கும் சிறார்களுக்கும் நீச்சல் பயிற்சி கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும்.

 • கடலோரங்களிலும் ஆற்றோரங்களிலும் வாழ்பவர்களைப் பற்றிச் சிலர் சொல்வார்கள் “மீன் குட்டிகளுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கவா வேண்டும்? அவர்களாக பழகிக் கொள்வார்கள்” என்று அசட்டையாக. ஆனால் இதுபோன்று விபத்துகள் ஏற்பட்டால் அங்கு ஏற்படும் உயிர் பலிக்கு மற்றவர்களைக் குறை சொல்லத்தான் அவர்களுக்குத் தெரியுமேயொழிய அந்தக் குறைகளைப் போக்க வேண்டிய நடவடிக்கை என்ன என அவர்களுக்குத் தெரியாது.

ஆகவே வருங்காலத்தில் இது போன்ற விபத்துகள் முஸ்லிம் ஊர்களில் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுப்பது சம்பந்தப் பட்டவர்களின் கடமையல்லவா என் சொந்தங்களே!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.