ஒற்றுமை மார்க்கமும் உலக முஸ்லிம்களும்

Share this:

“இன்னும், அல்லாஹ்வின் (வேதமெனும்) கயிற்றை நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து (வலுவாகப்) பற்றிக் கொள்ளுங்கள்; பிரிந்து விடாதீர்கள்” (அல்குர் ஆன் 3:103).

“வாத்தியார் பிள்ளை மக்கு; வைத்தியர் பிள்ளை நோயாளி” என்று தமிழில் ஒரு வழக்குச்சொல் உண்டு.

ஊருக்கே கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் சொந்தப் பிள்ளை மக்குப்பிள்ளையாக இருப்பான்; ஊர் மக்களுக்கு மருத்துவம் செய்து நோய்களைக் குணப்படுத்தும் வைத்தியரின் பிள்ளை நோயாளியாக இருப்பான் என்பது அதன் விரிவு.

அதுபோல,

உலக மாந்தர்களை ஒற்றுமைப் படுத்தவல்ல இஸ்லாத்தின் சொந்தப் பிள்ளைகள், வேற்றுமையில் மூழ்கிப் பிரிந்து கிடக்கின்றனர். அறியாமைப் பிணியகற்றி, உலகத்துக்கே அறிவொளி புகட்ட வந்த மார்க்கத்தின் மக்கள் இன்னும் அறியாமையில் உழன்று கிடப்பதில் சுகம் காணுகின்றனர்.

அண்மையில் வெளிவந்து உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் முஸ்லிம் நாடுகளைப் பற்றிய செய்திகளுள் ஒன்று, “ஃபலஸ்தீனப் போராளிகளும் கஸ்ஸாவின் ஆட்சியாளர்களுமான ஹமாஸை அழிக்குமாறு பொம்மை அதிபர் மஹ்மூது அப்பாஸ் இஸ்ரேலை வேண்டிக் கொண்டார்” என்பதாகும். இன்னொன்று “ஈரானைப் போட்டுத் தாக்குமாறு அமெரிக்காவுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்த சவூதி மன்னரைப் பற்றிய Saudi king urged U.S. to attack Iran” செய்தி.

நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தோருக்கு அல்லாஹ் ஆயத்தப் படுத்தி வைத்திருக்கும் அற்புத ஆசனங்களைக் காட்டிலும் இவ்வுலக அற்ப ஆசனங்களின்மீது கொண்ட அடங்காத பேராசையால், சொந்தச் சகோதரனைப் போட்டுத் தள்ளுவதில், போட்டுக் கொடுப்பதில் முஸ்லிம்களின் அமைப்புகள் தொடங்கி அரசுகள் வரைக்கும் ஒன்றேபோல் செயற்படுகின்றன.

முஸ்லிம்கள் தங்களுக்குள் துணை நிற்பதில் எவ்வாறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கு உவமையாக, “இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அப்படிக் கூறும்போது தங்கள் கைவிரல்களை ஒன்றோடொன்று பின்னிக் காட்டினார்கள்.

கட்டி அடுக்கி எழுப்புவதால் ‘கட்டடம்’ என்றானது. முஸ்லிம்கள் ஒருவரோடொருவர் பிணைந்திருக்க வேண்டியதை, “கட்டடம்” உவமை மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுருங்கக்கூறி விளக்கினார்கள். அண்ணலாரின் அறிவுரைகளை அலட்சியப்படுத்தும் சமுதாயமாக இருப்பதால்தான் நம் சமகால முஸ்லிம் சமுதாயம் உலகளாவிய அலட்சியத்துக்கும் அவமானத்துக்கும் உள்ளாகிறதென்றால் மிகையில்லை.

உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் பலநூறு கூறுகளாகப் பிரிந்து கிடந்தாலும் அவற்றுள் பெரும் பிரிவுகளாக ஷியா-ஸுன்னீ பிரிவும் ஆண்டுக்கொருமுறை புதுப்பிக்கப்படும் ஷியாக்களின் ‘ஆஷுரா மாரடிப்பு’களும் இஸ்லாத்தை உலகத்தார் அருவருப்புடன் பார்ப்பதற்கு வழிவகுத்து வைத்திருக்கின்றன. அத்தோடு இருபிரிவினருக்கும் இடையிலுள்ள இடைவெளியை நிரந்தரப் படுத்தி வைத்திருக்கின்றன.

“கர்பலாப் போர்” என்று சொல்லப்படுவது போரே அல்ல. அது, ஆயுதமற்ற 70 முஸ்லிம்களை – பெண்கள் சிறுவர்கள் உட்பட – யஸீதின் இராணுவம் கொன்றொழித்த படுகொலைதான். போர் செய்யப்படுவதற்குத் தடை செய்யப்பட்ட புனித மாதங்களுள் ஒன்றான முஹர்ரம் மாதத்தில் ஹிஜ்ரீ61இல் நடைபெற்ற அந்தப் படுகொலை, இஸ்லாத்தின் வரலாற்றில் பதிந்துபோன கரும்புள்ளிதான். அதற்காக, ஒவ்வோர் ஆண்டும் துக்கம் கொண்டாடுவது, “எவருடைய இறப்பிற்கும் மூன்று நாட்களுக்கு மேற்கொண்டு கூடுதல் துக்கம் கொண்டாடக் கூடாது” எனும் அல்லாஹ்வின் தூதரின் அறிவுரைக்கு எதிரான செயலாகும்.

கர்பலாப் படுகொலையில் எவர் பக்கம் நியாயம் எவர் பக்கம் அநியாயம் என்பது குறித்து ஒரு குறுவிவாதத்தைத் துவக்கிய ஒருவரிடம் இமாம் ஷாஃபி (ரஹ்), “கர்பலாவில் சிந்திய குருதி காய்ந்து உலர்ந்து விட்டது. அதை இப்போது நீ நக்கத் துடிப்பது ஏன்?” என்று கேட்டார்கள்.

எனவே, முஹர்ரம் மாதத்திலும் ஆஷுரா நாளிலும் நாம் நினைவு கூர்வதற்கும் பாடம் பெறுவதற்கும் உரிய வேறுபல நிகழ்வுகளை நினத்துப் பார்ப்போம்.

oOo

“முஹர்ரம்” என்றதும் நமது சிந்தையில் வரவேண்டியவற்றுள் தலையாயது ‘ஹிஜ்ரத்’ எனும் மிகப்பெரும் தியாகம்; அந்த மிகப்பெரும் தியாகமான புலப்பெயர்வை அடிப்படையாகக் கொண்ட ‘ஹிஜ்ரீ’ எனும் இஸ்லாமிய ஆண்டின் தொடக்கம்; அதன் பின்னணி நிகழ்வுகள் அனைத்தும் நம் நினைவுக்கு வரவேண்டும்.

கொடுங்கோலன் ஃபிர்அவ்னும் அவன் படையும் துரத்திட, மூஸா (அலை) அவர்கள் கடலை அடைந்து தப்பிட வழியில்லாத இக்கட்டான நிலையிலும், “அல்லாஹ் என்னோடு இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்” (26:62) என்று கூறிய ஈமானின் உறுதிப்பாடு நினைவுக்கு வரவேண்டும்.

மூஸா (அலை) அவர்களும் அவர்களது சமுதாயமும் அல்லாஹ்வின் உதவி பெற்று, கடல் பிளந்து வழிவிட்ட அற்புதமும் அதே கடலில் ஃபிர்அவ்னும் அவனது படையும் மூழ்கி மரணித்த அற்புதமும் (10:90-92) நடந்தது ஆஷுரா எனும் முஹர்ரம் 10ஆம் நாளில் என்பது நமக்கு நினைவுக்கு வரவேண்டும்.

மூஸா (அலை) அவர்களும் அவர்களைப் பின்பற்றிய சமுதாயமும் அல்லாஹ்வினால் காப்பாற்றப்பட்டதற்காக அவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக முஹர்ரம் 10இல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆஷுரா நோன்பு நோற்றதும் முஸ்லிம்களை ஆஷுரா நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டதும் நம் நினைவுக்கு வரவேண்டும்.

ஆனால், நம் நினைவுகளில் முஹர்ரமின் முன்னுரிமைகளாக வேறு நிகழ்வுகள்தாம் இடம்பெறுகின்றன.

அவற்றுள் இஸ்லாத்துக்கும் அறிவுக்கும் மனித இயல்புக்கும் எதிராக நடந்தேறும் பஞ்சாக் கூத்து முதலிடம் வகிக்கிறது.

சில பகுதிகளில் முஹர்ரம் 10 அன்று மேளதாளங்களோடு கத்தியாலும் வாளாலும் உடலைக் கீறிக் கொண்டும் மாரில் அடித்துக் கொண்டும் எடுக்கப்படும் பஞ்சா எனும் முஹர்ரம் ஊர்வலமும் கோஷங்களும் அவற்றில் தம்மைத் தாமே வருத்திக் கொள்ளும் ‘இரத்தசாட்சி’களின் காட்சிகள்தாம் நம் நினைவில் வருகின்றன.

ஆஷுரா நாளில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேரனும் புதல்வி பாத்திமா (ரலி) அவர்களின் மகனுமான ஹுஸைன் (ரலி) அவர்கள் ஷஹீதாக்கப்பட்டதையொட்டி துக்கம் அனுஷ்டிப்பதாகக் கூறி, முஸ்லிம்களில் சிலர் நெஞ்சிலும் கன்னத்திலும் அடித்துக்கொண்டு உடலைக் கீறிக் காயப்படுத்திக்கொண்டு ஊர்வலம் வருகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் இவ்வாறு நடந்தால் இதை அவர்கள் விரும்பியிருப்பார்களா? எல்லாஹ்வற்றையும் கண்காணிக்கும் அல்லாஹுக்கு இது உகந்த செயலாகுமா? அவன் திருப்தியையும் பெறுமா? என்பதையெல்லாம் அவர்கள் சிந்திக்க மறுக்கின்றனர். மேலும் இஸ்லாம் எனும் உன்னதமான வாழ்க்கை நெறியை எத்திவைத்து மக்களை அதன்பால் அழைக்கக் கடமைப் பட்டவர்கள், தங்களின் அநாகரிகச் செயற்பாடுகளால் இஸ்லாம் எனும் மார்க்கத்தையும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் பிறமக்கள் வெறுத்து ஒதுங்க வழி வகுக்கின்றனர்.

இஸ்லாம் வெறுத்து ஒதுக்குவதை, இவர்கள் ஆண்டுதோறும் கொண்டாட்டத்துடன் செய்யும்படி மூளைச் சலவை செய்யப் பட்டுள்ளனர்.

ஒரு முதியவர், தம் இரண்டு புதல்வர்(கள் தம்மைத் தோள்களில் தாங்கிக் கொண்டிருக்க, அவர்)களிடையே தொங்கியபடி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இவருக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். ” (கஅபா வரை) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்!” என்று மக்கள் கூறினார்கள். நபி (ஸல்), “இவர் தம்மை இவ்விதம் வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது!” என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள்.

அல்லாஹ்வுக்காக செய்த நேர்ச்சையே இஸ்லாத்துக்கு அப்பாற்பட்டிருக்குமானால் அது செல்லாது எனும்போது அலீ (ரலி) அவர்களது குடும்பத்தினரின் பெயரால் ஷியாக்கள் அடிக்கும் கூத்துகளை என்னவென்பது?

இன்னும் சிலர் ஆஷுரா நோன்பை ஹுசைன் (ரலி) அவர்களுடன் இணைத்து,

  • இந்த மாதத்தின் முதல்பத்து நாட்களில் விசேஷத் தண்ணீர் பந்தல் அமைப்பது,
  • அதற்காக விசேஷமாக பயான் எனும் பெயரில் மேடைகள் அமைத்து அழுது புலம்புவது.
  • அதற்குப் பணம் வசூலிப்பது,
  • முஹர்ரம் பத்து அன்று சர்பத் என்று குளிர்பானம் விநியோகிப்பது

போன்ற ஆதாரமற்ற பித்அத்தான நூதனக் காரியங்களில் ஈடுபடுவதும் ஒருசில பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

அவற்றுக்கு மாற்றுக் கருத்தில் உள்ளவர்கள்,
“இது ஷியாக்கள் எனும் வழிகேடர்களின் நூதன செயல்; இதற்கும் இஸ்லாத்திற்கும் அறவே சம்பந்தம் இல்லை; இது போன்ற செயல்கள் மூலம் இஸ்லாத்தை இழிவு படுத்துகின்றனர்; தொழுகை போன்ற முக்கிய கடமைகள் நிறைவேற்றத் தவறுபவர்கள் பரவலாக இது போன்ற காரியங்களில் ஈடு படுகின்றனர்; அல்லாஹ்வின் கட்டளைக்கும் நபிவழிக்கும் இவர்கள் மாறு செய்கின்றனர்”

என்று கூறி குளிர்பானக் கூட்டத்தினரைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். எனவே, இருசாராருக்கும் எப்போதும் மனக்கசப்பும் வெறுப்பும் நிலவுவது நிரந்தரமாகிப் போனது.

ஷியாக்களிள் சிலர் புனிதச் செயலாக நினைத்துக் கொண்டு ஆண்டுதோறும் நிகழ்த்தும் காட்டுமிராண்டித் தனத்தைப் பற்றி அவர்களுக்குச் சுட்டிக் காட்டினால், திருத்திக் கொள்ளாமல் சுட்டிக் காட்டுபவர்களை எதிரிகளாகக் கருதுவதால் இருபிரிவினருக்கும் இடையே பகைமூட்டம் நிரந்தரமாக நிலவுகிறது.
இதற்குத் தீர்வு என்ன?

முஸ்லிம்கள் அனைவரும் பிரிவுகள் அனைத்தையும் சற்று ஒருபுறம் ஒதுக்கி விட்டு, இஸ்லாத்துக்கு மாற்றமான கருத்துக்களை / செயல்களை, நியாயப்படுத்துவதை / ஆதரிப்பதை / எதிர்ப்பதை / தாக்குவதைக் கைவிட்டு, தவறில் தொடர்ந்து இருப்பவர்கள் நேர்வழியில் வருவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். அனைத்துக்கும் முதலாவதாக, உலகமுஸ்லிம் சமுதாயம் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதை மனமார விரும்பி அதற்காக அல்லாஹ்விடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்யவேண்டும்.

oOo

ஏறத்தாழ இரண்டரை ஆண்டுக்கு முன்னர், ஷியா-ஸுன்னீ பிரிவினர் இணைந்து லக்னவ்வில் கூட்டுத் தொழுகை (குத்பா) நடத்தியபோது, “ஏக இறைவனால் மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட தூய்மையான ஏக இறைமார்க்கமாகிய இஸ்லாத்தைத் தானும் உணர்ந்து, பிற சமுதாயத்தினருக்கும் உணர்த்தி, நேர்வழியும் ஈடேற்றமும் பெற வழிவகுக்க வேண்டிய முஸ்லிம்கள், தங்களிடையே நிலவும் ஷிர்க் அல்லாத மற்ற கருத்து வேறுபாடுகளைத் தள்ளி வைத்து, சமூகத்தில் இருக்கும் பிளவுகளையும் குழப்பங்களையும் நீக்க உதவும் இதுபோன்ற முயற்சிகள்தாம் முஸ்லிம்கள் மட்டுமின்றி முழு மனித சமுதாயமும் ஒற்றுமையாகவும் இணக்கமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்ந்து ஈடேற்றம் பெற வழிவகுக்கும்” என்று நாம் குறிப்பிட்டிருக்கிறோம்.

அதனைத் தொடர்ந்து,

உலகளாவிய அளவில் ஏகாதிபத்திய சக்திகளும் சியோனிஸ, ஃபாஸிஸ சக்திகளும் முஸ்லிம்களைத் திட்டமிட்டுக் கருவறுப்பதற்கு, முஸ்லிம்களிடையே நிலவும் ஒற்றுமையின்மையும் உலக முஸ்லிம்களுக்கான தனித்ததொரு தலைமை இன்மையும் முக்கிய காரணங்களாக இதுகாறும் இருந்து வந்திருக்கின்றன. சவூதியில் ஷியா (அரசியல் பிரிவு) முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் சவூதியின் கிழக்கு மாகாணப் பகுதியில் அமைந்த நகரங்களில் ‘கத்தீஃப்’ ஒன்றாகும். அந்நகரிலுள்ள  ஷியா முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிவாசல் ஒன்றில் ஷியா-ஸுன்னீ முஸ்லிம்கள் ஒன்றாக இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை (13-06-2008) ஜும்ஆத் தொழுகை நடத்தியுள்ளனர்.

கத்தீஃபில் நிகழ்ந்தேறிய ஷியா-ஸுன்னீ ஒருமித்த ஜும்ஆத் தொழுகை, உலக முஸ்லிம்களால் வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு பார்க்கப்படுகின்ற அதேவேளை, முஸ்லிம்களைக் கொன்றொழிப்பதைப் பொழுதுபோக்காகக் கொண்ட பயங்கரவாத சக்திகளை அச்சத்துடனும் கவலையுடனும் பார்க்க வைத்திருக்கின்றது.

இஸ்லாம் வலியுறுத்தும் ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் மீண்டுமொருமுறை அடிக்கால் நடும் இத்தகைய நிகழ்வுகள், இந்த இரு அரசியல் பிரிவினரிடையே பெருத்த மனமாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “நட்புறவும் ஒற்றுமையும் ஒரு சேர மலர்ந்ததாக” இந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஸுன்னீ முஸ்லிம்கள் சார்பில் ஷேக் முக்கல்லஃப் பின் தஹம் அல்-ஷம்ரீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்தொழுகையில் ஷியா முஸ்லிம்களுக்கிடையே பிரபலமான ஷேக் ஹஸன் அல்-ஸஃபர் அவர்களின் உரை நடைபெற்றது.

இஸ்லாம் கூறும் ஒற்றுமையினை வலுப்படுத்தும் காரணிகளை வலியுறுத்தியும் அதே நேரத்தில் இஸ்லாம் கடுமையாகச் சாடும் பிரிவினைகளை நீக்கும் வழிமுறைகளைப் பற்றிய விளக்கங்களும் அந்த ஜும்ஆ உரையில் இடம் பெற்றிருந்தன.

இருபிரிவினரும் ஒன்றாய்க் கலந்து அமர்ந்திருந்த அந்த ஜும்ஆ பள்ளிவாசலில் “சகோதரத்துவத்தினை ஏற்படுத்தும் இத்தகைய நல்ல விஷயங்களை ஊக்குவிப்பதும் பிரிவினை வளர்ப்பதைத் தொழிலாகக் கொண்டுள்ள தீய சக்திகளை எதிர்ப்பதும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரின் கடைமையாகும்” என்ற ரீதியில் ஜும்ஆ உரை தொடர்ந்தது.

பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த நிகழ்வு பற்றி ஷேக் அல்-ஷம்ரீ அவர்கள் பேசுகையில் “இதே போன்ற இன்னொரு ஜும்ஆத் தொழுகையை ஷியா முஸ்லிம்கள் கூட்டாகச் சென்று அல்கோபார் பகுதியில் உள்ள மஸ்ஜித் ஒன்றில் ஸுன்னீ முஸ்லிம்களுடன் ஒன்றிணைந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொழுவதற்கு ஏற்பாடாகி இருக்கிறது” என்று சுட்டிக்காட்டினார்.
எனும் செய்தியையும் நாம் வெளியிட்டிருந்தோம்.

அவ்விரண்டு முயற்சிகளைப்போல் உலகெங்கும் வாழும் ஷியா-ஸுன்னீ பிரிவினர் தொடர்ந்து தங்களின் ஒற்றுமை முயற்சியைக் கைவிடாமல் தற்கால இஸ்லாமிய விரோத நவீன ஃபிர்அவ்ன்களின் கொடுமைகளுக்கெதிராக அஞ்சாமல், துணிவாக இஸ்லாம் எனும் சத்தியமார்க்கம் உலகெங்கும் ஓங்கிட வேண்டுமெனில், தமது கருத்து வேறுபாடுகளைக் கைவிட்டு ஒன்றிணைந்து முன்மாதிரியாகத் திகழ்ந்திட வேண்டும்.

காலங்காலமாகத் தொடர்ந்திடும் ஷியா-ஸுன்னீ ‘பிரிவுக்கோடு’ அழிந்திட வேண்டும். முழுமுஸ்லிம் சமுதாயமும் அல்லாஹ்வின் வேதத்தை வலுவாகப் பற்றிப் பிடித்து, ஒற்றுமை எனும் மறுமலர்ச்சி காணவேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக அதற்கு அல்லாஹ் அருள்புரிய வேண்டும்!

ஆக்கம் : இபுனு முஹம்மது


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.