தேர்(மோ)தல் பிரச்சாரம்!

நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகளும், தலைவர்களும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் என்று எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டுக் களப் பிரச்சாரத்தில் சூறாவளியாய் சுழன்று அடித்துக் கொண்டிருக்கின்றனர்.

தேர்தல் பிரச்சாரம் ஒவ்வொரு தேர்தலிலும் பல பரிமாணங்களைக் கடந்து வந்திருக்கின்றது. இப்போது, இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது; இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாமல் பிரச்சாரம் நடந்த தேர்தல்கள் இதற்கு முன்பு குறிப்பாகத் தமிழகத் தேர்தல் வரலற்றில் உண்டு. எம்ஜிஆர் பிரச்சாரத்திற்காக நள்ளிரவு வரை விழித்திருந்து மக்கள் அவரது உரையினைக் கேட்க தவமிருந்துள்ளனர்.

தேர்தல் பிரச்சாரம் கட்சிகளின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆளும் கட்சிகள் தங்களது சாதனைகளையும் நலத்திட்டங்களையும் எடுத்துச் சொல்லி மக்களிடம் வாக்குக் கோருவதும், எதிர்க்கட்சிகள் ஆளும்கட்சிகளின் மக்கள் விரோதப் போக்குகளைப் பட்டியலிட்டு, தங்களுக்கு வாக்குச் சேகரிப்பதும் வழக்கம். முன்பெல்லாம் பிரச்சார மேடைகள் நாகரிகம், கண்ணியம், மாற்றுக் கட்சியினரையும் மதிக்கும் மனப்பான்மை போன்ற நல்ல கூறுகள் நிறைந்ததாக இருந்துள்ளன.

அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி போன்றவர்கள் பிரச்சார மேடைகளில் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்குப் பிரசாரம் செய்யும் போது, மறந்தும்கூட எதிர்க்கட்சியினரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ, அவர்தம் குடும்ப விவகாரங்கள் பற்றியோ விமரிசித்தது கிடையாது. இன்னும் அவர்களது பெயர்களை உச்சரிக்கும் போதுகூட ஒருவித மரியாதை கலந்திருக்கும். ஆனால் இன்று நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது.

அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்ய வருபவர்கள் எதிர்க்கட்சியினர் குறித்துச் செய்யும் விமரிசனங்கள் காது கொடுத்துக் கேட்க முடியாதவையாக உள்ளன. அதில் அதிமுகவிற்காகப் பிரச்சாரம் செய்யும் கலைத்துறை பிரபலங்கள் முக்கிய இடம் வகிக்கின்றனர். சிங்கமுத்து, ராமராஜன், ஆன்ந்தராஜ், விந்தியா போன்றவர்கள் திமுக தலைவர் கருணாநிதி குறித்தும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்தும் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கின்றனர். உச்சகட்டமாக ஆயிரக்கணக்கானவர்கள் முன்னிலையில் பிரேமலதா விஜயகாந்தைக் குறித்து, சிங்கமுத்து ஆபாசமாக வசைமொழிகள் உதிர்த்துள்ளார். மூத்த அரசியல்வாதி என்கிற மரியாதைகூட இல்லாமல் திமுக தலைவர் கருணாநிதி குறித்தும்  வயதின் காரணமான அவரது இயலாமையினைக் குறித்தும் அருவருக்கத்தக்க வகையில் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

ஆனால் திமுக தலைவர் கருணாநிதியோ பொருளாளர் ஸ்டாலினோ, அதிமுகவினரின் இத்தகைய பேச்சுகளைக் கண்டுகொள்வதில்லை என்பதுடன் அத்தகைய பேச்சுகளைத் தங்களது பிரச்சாரத்தில் தவிர்த்து வருவது அவர்களது அரசியல் முதிர்ச்சியினை வெளிப்படுத்துகின்றது. முதல்வர் ஜெயலலிதாவை, “அம்மையார்” என்றே எல்லாக் கூட்டங்களிலும் அவர்கள் குறிப்பிட்டுப் பேசி வருகின்றனர். இவ்வளவு ஏன்? “குடித்து விட்டு பேசுகின்றார்” என்று கூறும் விஜயகாந்த்கூட தன் கட்சிக்காரர்ளைத்தான் அடிக்கவும், திட்டவும் செய்கின்றாரே தவிர மற்றவர்கள் குறித்துத் தவறான வார்த்தைகளை உபயோகிப்பதில்லை. முதல்வரும்கூட பிரச்சாரங்களில் எதிரணியினரைச் சாடுவதற்கு நாகரிகமான வார்த்தைகளையே பயன்படுத்துகின்றார்.

அகில இந்திய அளவில் நரேந்திர மோடி உட்பட பாஜகவினரும், காங்கிரஸ்காரர்களும் இத்தகைய தனிநபர்த் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ப. சிதம்பரத்தை மோடி, “ரீகவுண்ட்” என்று கிண்டலடித்தார்.

காங்கிரஸின் மணிசங்கர ஐயர், மோடியை “டீக்கடைக்காரர்” என்று ஒருமுறை குறிப்பிட்டுப் பேசியதைக் கண்டித்த ராகுல் காந்தி, மோடியை, ”டீக்கடைக்காரர்” என்று கூற வேண்டாம் என்று காங்கிரஸாருக்கு அறிவுரை கூறியுள்ளது சற்று ஆறுதல் அளிக்கின்றது. ஆனால், குஜராத்தில் 2002 பிப்ரவரியில் மோடி ஆடிய வெறியாட்டத்தையும் அரச பயங்கரவாதத்தையும் தம் சொந்த மாநில மக்களான முஸ்லிம்கள் 2000க்கும் மேற்பட்டவரைக் கொத்துக் கொலை செய்ததைப் பற்றியும் காங்கிரஸார் மறந்தும் பேசிவிடாமல், உப்பு-சப்பில்லாத மோடியின் திருமணம் பற்றி வாய் கிழியப் பேசுகின்றனர்.

ஃபாஸிஸ மோடியைப் பற்றியோ பாஜக பற்றியோ முதல்வர் ஜெயலலிதா இதுவரை ஒரு வார்த்தைகூட மறந்தும் பேசவில்லை. நீலகிரியில் பாஜக வேட்பாளரின் மனு தள்ளுபடி ஆனதன் பின்னணியில் நடந்தவை வெளிச்சத்துக்கு வரவிருக்கின்றன. அதிமுகவுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக ததஜ இன்று முடிவெடுத்திருப்பது சமுதாயத்துக்கு நன்மை பயப்பதாக அமையும். ஆனால், மயிலாடுதுறையில் கொட்டப்பட்ட வார்த்தைகளை எந்தக் கூடையில் அள்ளுவது?

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது நடத்தப்படும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் எந்த வகையிலும் சகித்துக் கொள்ள முடியாதது.

திரைப்படங்களில் எழுதிக் கொடுத்த்தை அப்படியே வாந்தியெடுத்துப் பழக்கப்பட்டுள்ள நடிகர்கள், அரசியலிலும் அதனையே பின்பற்றுவது ஆரோக்கியமானதல்ல. அந்தந்த அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது பேச்சாளர்களுக்கு இப்படித்தான் பேச வேண்டும் என்கின்ற வரைமுறையினை விதிக்க வேண்டும். இல்லையெனில் தேர்தல் ஆணையமோ, நீதிமன்றங்களோ பிரச்சாரத்தில் பேசுபவர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். அதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

“மோடியைக் கண்ட-துண்டமாக வெட்டுவேன்” என்பது நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் பேசக்கூடிய பேச்சா? உத்தரப் பிரதேச மாநிலம் சஹரான்பூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் இம்ரான் மஸூத், தம் கட்சி நாட்டு மக்களுக்கு செய்த நன்மைகள் யாவை, எதிரணியினர் செய்த தீமைகள் யாவை என்பதைப் பட்டியலிடுவதை விடுத்து, வெற்று வீராப்புப் பேசி என்ன பயன்?

அதேபோல், “முஸாஃபர் நகர் முஸ்லிம்களைப் பழிவாங்கவேண்டுமானால் பாஜகவுக்கு வாக்களியுங்கள்” என்று வெளிப்படையாக மதமோதலைத் தேர்தல் பிரச்சாரம் எனும் பெயரில் விதைக்கிறார் மோடியின் வலக்கரம் அமித் ஷா.

முன்னவர் கைது; பின்னவருக்குத் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்தத் தடை மட்டும். பாரத் மாதாவின் நியாயம் இதுதான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசியலில் உள்ளவர்கள் நாகரிகத்தையும் கண்ணியத்தையும் கடைபிடிக்க வேண்டும். கோடிக்கணக்கான இளைஞர்கள் புதிதாக வாக்களிக்க உள்ளனர். சொல்வதையெல்லாம் நம்பக்கூடிய எடுப்பார் கைப்பிள்ளையாக அவர்கள் இருக்கப்போவதில்லை. நாட்டின் நிலவரம் குறித்து தீர்க்கமான பார்வையுள்ளவர்களாக இளைய சமுதாயம் உருவாகி வருகின்றது, அவர்களுக்கு அரசியலில் ஓர் உந்துசக்தியாக இல்லாவிடினும்கூட தங்களின் நாலாந்தர பேச்சினால் அரசியலை வெறுக்கச் செய்துவிடாமல் இருப்பதே வாக்குக் கேட்பவர்களுக்கும் வாக்களிக்கவிருக்கும் பொதுமக்களுக்கும் நன்மை பயக்கும்!

ரா.அபுல் ஹசன்
9597739200
abumca007@gmail.com